' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு



“ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு”



திருமதி. வலன்ரீனா இளங்கோவன்
B.A (Hons), PGD.Edu, M.A(Dist)
முதுதத்துவமாணி பட்ட ஆய்வாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
பேராசிரியர்.மா.வேதநாதன்,
இந்துநாகரிகத்துறை, கலைப்பீடம்,
யாழ்.பல்கலைக்கழகம், இலங்கை.


அறிமுகம் :- 
ஈழத்தமிழரின் வரலாற்று அடையாளங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய இக்காலப்பகுதியில் அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. ஈழத்தமிழரின் கலாச்சார மையமாகத் திகழும் யாழ்ப்பாணக் குடாநாடு நீண்டகால வரலாற்றையும், தொடர்ச்சியான பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட பிரதேசமாக விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் இந்துக் கோயில்களை அடிப்படையாகக் கொண்ட கலைமரபு வளர்ச்சியுற்று வந்துள்ளதை அறிய முடிகின்றது. அவ்வகையில் ஒரு காலகட்டத்தில் கோயில்களில் பக்திபூர்வமாக இறைவனுக்கு நிருத்த தானமாகப் பெண்களால் நிகழ்த்தப்பட்டு வந்த நிகழ்த்துக் கலையே சின்னமேள ஆடற்கலை மரபு ஆகும்.

சின்னமேளம் :- 
கோயில் ஆராதனை சார்ந்த நாட்டியத்தில் பெண்கள் மட்டும் ஆடும் நடனமும் கோயில்களில் தேவதாசிகளால் ஆடும் நடனமும் ‘நட்டுவமேளம்’ என்றும், ஆண்கள் மட்டும் செய்யும்முறை ‘நாட்டியமேளம்’ என்றும், ‘பெரியமேளம்’ என்பது டோல், சண்ணாய, தாளம் ஆகியவை இணைந்த இசைக்குழு என்றும், சின்னமேளம் என்பது சுருதி, முகவீணை,  மிருதங்கம், தாளம் என நிருத்தியத்தில் வாசிக்கும் “இசைக் குழுவினர் கூட்டமே” என்றும் கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் பரதக்கலைக் களஞ்சியம் எனும் ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றார். (ஸ்ரீராம தேசிகன், 2001:42)

‘சதிராட்டம்’ என அழைக்கப்பட்டு வந்த தாசிகளின் ஆட்டமானது சினிமாவின் தாக்கத்தால் ‘சதிர்’ ஆட்டத்தின் தன்மையற்று ஒருபுதுவித ஆடலாகத் தோன்றியமையால் மக்கள் ‘சதிர் ஆட்டம்’ என்று அழைக்காது ‘சின்னமேளம்’ என்று அழைத்திருக்கக் கூடும்.

‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் ‘சின்னமேளம்’ என்பது சதிர் ஆட்டத்திற்கு வாசிக்கப்படும் தோற்கருவி என்றும், இலங்கையில் திருவிழா போன்றவற்றில் திரைப்படப் பாடலுக்கு ஆடும் நடனம், dance performed to the tunes of film songs (as part of temple festivals)  இந்தமுறை திருவிழாவிற்கு மூன்றுசோடி சின்னமேளம் பிடித்துள்ளார்கள். பெரியமேளக் கச்சேரி முடிந்ததும் சின்னமேளக் கச்சேரி தொடங்கும்” என்றும் குறிப்பிடப்படுகின்றது. (ராமகிருஷ்ணன் 2011:590)

சின்னமேளத்தின் தோற்றம் :-
தமிழர் தம் நாட்டியக் கலையானது ஆரம்பக் காலத்தில் ‘கூத்து’ என்ற பெயருடன் விளங்கியது. இருபதாம் நூற்றாண்டு வரை சதிராட்டம், தாசியாட்டம், தேவரடியார் ஆட்டம் எனப் பெயர் பெற்று விளங்கியதாகத் தெரிகின்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் முன்பின்னாக இது ‘சின்னமேளம்’ என அழைக்கப்படுவது பெருவழக்காக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் செட்டிமார்கள் கட்டிய கோயில்களில் இறைவனுக்கு ஆடற்கிரியை வழங்குவதற்காக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்டவர்கள் தமிழகத்து ஆடல் மங்கையர்கள். இவர்களைப் போல் இலங்கையிலும் ஆடல் மங்கையர்கள் இருந்துள்ளார்கள். இவ் ஆடல் மங்கையரின் ஆடல்களே ‘சின்னமேளம்’ என்று அழைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தகையோர் கோயில் ஆடல் மங்கையர்களாகக் கடமையாற்றிய அதேவேளையில் சிறிய நிலமானியப் பொருளாதார முறையை அடியொற்றிய பரத்தைத் தொழில் புரிந்து காதற் பரத்தைகளாக வாழ்ந்து வந்தனர் என்பதனை நட்டுவச்சுப்பையனார் எழுதிய கனகிபுராணம், நாவலர் பிரபந்தத்திரட்டு என்னும் நூல்கள் வாயிலாகவும் உறுதி செய்ய முடிகின்றது.

எனவே தாசிகள் என்ற பரத்தை தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் இடம்பெறும் நிகழ்ச்சியாக வளர்ந்தது. அங்கெல்லாம் கோயில் பூசைகளில் நட்டுவ மேளத்தைக் கண்ட மக்கள், தேவதாசிகள் ஆட்டத்திற்குச்  சிறிய அளவிலான மேளம் (மிருதங்கம்) பாவிக்கப்படுவதனைக் கண்டு அதனை (சின்னமேளம்) என அழைக்க முற்பட்டு நாளடைவில் அம்மேளம் பாவிக்கும் நாட்டியக் கலையையே ‘சின்னமேளம்’ என்ற பெயர் கொண்டு அழைக்கும் மரபு தோன்றியது எனக் கலாநிதி பத்மா சுப்பிரமணியம் போன்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

எனவே ஆரம்பத்தில் சின்னமேளம் என்பது மிருதங்கத்தினைக் குறித்துப் பின்னர் இவ்வாத்தியத்துடன் ஆற்றுகையை நிகழ்த்தும் குழுவினரையே குறிப்பிட்டிருத்தல் வேண்டும். இதனால் இந்நடனத்தை ஆடும் பெண்களை ‘சின்னமேளக்காரி’ என்று அழைக்கும் மரபு யாழ்ப்பாணத்தில் பெருவழக்காக நிலவியது.

‘சின்னமேளம்’ என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் பிரபல்யம் அடைய ஏனைய பெயர்கள் பின்னடைந்தன. இப்பெயர் தமிழகத்தைவிட யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் அடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இவ் ஆடற்கலை பெருவளர்ச்சி கண்டு மிகப் பிரபல்யமடைந்தமையைப் பற்றி அறிய முடிகின்றது.

சின்னமேளத்தின் வளர்ச்சி :-
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த பிரித்தானியரர் ஆட்சியே இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதி வரை (1948) ஈழத்திலும் இந்தியாவிலும் தொடர்ந்து இருந்து வந்தது. எனவே காலவளர்ச்சிக்கு ஏற்ப யாழ்ப்பாணத் தமிழகத் தொடர்புகள் இக்காலத்தில் நெருக்கமாயின. இதனால் சமய கலை கலாச்சார ஊட்டம் மேன்மேலும் நெருக்கம் அடைந்தது. தமிழகத்து பல்துறைக் கலைஞர்கள் ஈழத்தினைத் தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இவர்கள் ஈழத்திற்கு வந்து செல்வதை புகழ் தரும் நிகழ்வாகக் கருதினர் எனத் தெரிகின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழகக் கலையலையில் ஆடல் மகளிர் பலர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றதாகவும், சிலர் இங்கு நிலையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஆரம்பக்காலத்தில் யாழ்வண்ணார் பண்ணையில் (1900ஆம் ஆண்டில்) புத்துவாட்டி மடுவமே தேவதாசிகளின் முக்கிய வதிவிடமாக இருந்தாகத் தெரிகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் “புத்துவாட்டி” குடும்பத்தினரை விட்டு  யாழ்ப்பாணத்தின் இசை, நாடக, நடன வரலாறுகளை எழுத முடியாது” என்று கூறியமை இக்கருத்தினை உறுதிசெய்கின்றது. (வலன்ரீனா 2008:17).

ஆரம்பத்தில் கோயில் கலை மரபாக சமயச் சடங்குகளுடன் ஒட்டிய கலையாக விளங்கிய இவ் ஆடற்கலை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தினைத் தொடர்ந்து நாடக மேடைகளிலும் இடம்பெறலாயிற்று. ஆடல் மகளிர் நாடகங்களில் நடிக்கவும் செய்தனர்.  இவ்வாறு நடித்தவர்களில் இராஜலக்சுமி, கன்னிகா பரமேஸ்வரி என்பவர்கள் முக்கியமானவர். 1910க்களில் புத்துவாட்டி சின்னத்தம்பி என்பவர் அங்கு ஏற்படுத்திய நாடகக் கொட்டகையில் தமிழக நாடக, ஆடற்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. புத்துவாட்டியார் மடுவத்தில் ஆரம்பத்தில் இருந்த தேவதாசிகளில் செல்லக்கண்டு, இராஜலக்சுமி, இராஜாம்பாள் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கூறப்படுகின்றார்கள்.

கோவில்களில் சின்னமேள ஆடல் நிகழ்வுகள் :-
யாழ்ப்பாணத்துக் கோவில்களிலே கோயில் திருவிழாக்களின்போது, வசந்த மண்டபத்தில் முதலில் தவில் நாதஸ்வரக் கச்சேரிகள் ஆரம்பமாகும். இக்கச்சேரியானது களைகட்டி வாசிக்கப்படும்  போது, அடுத்த நிகழ்வாகச் சின்னமேளக் கச்சேரிக்கான ஆயத்தங்கள் நடைபெறும்.  அதன் முன்னோடியாகச் சின்னமேள நிகழ்ச்சிக்குரிய பக்கவாத்தியக் கலைஞர்களான மத்தளக்காரரும், ஆர்மோனியக்காரரும் தென்படுவார்கள். பார்வையாளர்கள் இவர்களைக் கண்டதும் தவில் நாதஸ்வரக் கச்சேரிகளின் ரசனையை விடுத்து சின்னமேள நிகழ்ச்சியை எதிர்பார்த்து ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிவிழுத்திக் கொண்டு சபையில் அமர்வார்கள். இதனால் தவில் கலைஞர்கள் தங்கள் கச்சேரிகளை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையைப் பற்றி பல்துறைக் கலைஞரும், நாதஸ்வரக் கலைஞருமான  திரு.வி.மாசிலாமணி அவர்களின் மனைவி முத்துலட்சுமி அவர்களின் கீழ் கண்ட செவ்வி எடுத்து விளக்குகின்றது.
“சபையோரின் ஆரவாரத்தினால் களைகட்டி அற்புதமாக வாசித்துக் கொண்டிருக்கும் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மேளத்தையும் நாதஸ்வரத்தையும் கட்டிக்கொண்டு எழும்பிச்  செல்லவேண்டிய நிலை உருவாகும்.”. (வயது 89, 23.03.2017 முத்துலட்சுமி.மா, வீட்டுப்பணி – நேர்காணல்).

சின்னமேள ஆடல் நிகழ்வானது தவில், நாதஸ்வர நிகழ்வுகளையெல்லாம் பின்தள்ளி முதன்மையான இடத்தைப் பெறுவதற்கு அக்கால சமூக நிலையையும் ஒரு காரணம் என்று பல முதியவர்களின்  செவ்விகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

அதாவது, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது மிகக்குறைவு. பொது இடங்களில் அவர்களைக் காணும் வாய்ப்பு அக்கால இளைஞர்களுக்கு மிகவும் குறைவாக இருந்தமையால் அழகும் கவர்ச்சியும் மிக்க சின்னமேள ஆடல் மகளிரைக் காண்பது இளைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே எல்லாத் தடைகளையும் தாண்டி வந்து இச்சின்னமேள ஆடல்களை  முண்டியடித்துக்கொண்டு வந்து இளைஞர்கள் பார்ப்பதில் வியப்பேதுமில்லை.

அன்றைய காலத்தில்  சுவாமி வீதியுலா வரும்போது ஆடல்மகளிர் சுவாமிக்கு முன்பாக நடனமாடிக்கொண்டு சென்றதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு சுவாமிக்கு முன்பாக புனிதமாக தெய்வீக மணங்கமழ சின்னமேள ஆடல் நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் அறியமுடிகின்றது. இவ்வாறான நிகழ்ச்சிகள் சின்னமேளக்; கலைக்குரிய தெய்வீகப் பின்புலத்தை வளமூட்டுவதாக அமைகின்றது.

சின்னமேளம் ஜனரஞ்சகமடைதல்:- 
யாழ்ப்பாணத்துக் கோயில்களில் பக்தி பூர்வமாக ஆடப்பட்டு வந்த ஆடற்கலையானது வெகுவிரைவில் கோயிற்கலையாக இல்லாது வருமானம்  தேடுவதற்குரிய கலையாக மாறியது. ‘சின்னமேளம்’ என்ற நாமம் யாழ் குடிமக்கள்; ஒவ்வொருவருக்கும் மனப்பதிவு பெற்றது. கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது சமய நோக்கிலன்றிக் கேளிக்கைக்குரிய நிகழ்வாக இவ் ஆடற்கலை பெருவளர்ச்சி கண்டது. தவில் நாதஸ்வர நிகழ்ச்சிகளை எல்லாம் பின்தள்ளி முதன்மையான இடத்தைப் பெற்றது.

இந்துக்கோயில் திருவிழாக்களில் இறுதி நிகழ்ச்சியாகச் சின்னமேளம் நடைபெறும். இக்கருத்தை எடுத்துக்கூறிய முதியவர்கள் பலர் "விருந்திற்குப் பாயசம் போல ஒவ்வொரு கோயில் நிகழ்ச்சிகளிலும் சின்னமேள ஆடல் சிறப்பான நிகழ்வாக இறுதியில் இடம்பெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.(வலன்ரீனா 2008 : 18) சின்னமேளம் எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதாக அறியப்படுகின்றது.

சின்னமேளக் குழுக்கள் உருவாகுதல்:-
இந்நிலைமை 1930களில் உச்சமடைந்து காணப்பட்டதாக அறியப்படுகின்றது. இந்நிகழ்வுகள் வருமானம் தேடும் ஒரு கலையாக அமைந்ததால் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வசதி படைத்தவர்களிற் சிலர் சின்னமேளக் குழுக்கள் (செற்றுக்களை) உருவாக்கினர். இவர்கள் தென் இந்தியாவில் இருந்து தரகர்கள் மூலம் தொடர்புகொண்டு ஆடல் மகளிரை வரவழைத்தனர். இவ்செற்றுக்களை வைத்திருக்கும் உரிமையாளர்களின் பெயர், ஊர் என்பன சேர்த்து அக்குழுவினர் அழைக்கப்பட்டனர். இவற்றில் புத்தூர் மார்க்கண்டு செற், கொக்குவில் சின்னத்துரை செற், நீர்வேலி வைத்திலிங்கம் செற், இணுவில் சரவணமுத்து செற், விளான் பஞ்சலிங்கம் செற், ஆவரங்கால் யூனியன் செல்லத்துரை செற், கீரிமலை பொன்னுச்சாமி செற், அளவெட்டி ஐயாத்துரைசெற், வண்ணார்பண்ணை இராமசாமி செற், வறணி சின்னத்தம்பி செற், கச்சாய் குஞ்சையா செற், நாச்சிமார் கோவிலடி வேணுகோபால் செற், சிறுவிளான் நாகலிங்கம் செற், வடலியடைப்பு பஞ்சலிங்கம் செற், சுதுமலை மணியம் செற் போன்றவை  குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்தோடு சில குழுக்கள் ஆடல்களை ஆடியவர்களின் பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டாகச்  சரசு விசாலினி செற், விஜயா செற், மல்லிகா செற், அம்பிகா செற், ஈஸ்வரி சகோதரிகள் செற், ரூசிஸ்ரேஸ் செற், லக்சுமி சகோதரிகள் செற், இராமலட்சுமி செற், முல்லை சகோதரிகள் செற், நாகேஸ்வரி செற், இந்திராசந்திரா செற் என்பன குறிப்பிடத்தக்கன. இவ்வாறான 40ற்கு மேற்பட்ட செற்றுக்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் பெற்றிருந்தன என்பது அறியப்படுகின்றது.

தமிழ்நாட்டு நடனமகளிரின் வருகை:-
யாழ்ப்பாணத்தில் பொதுவாக ஆலய உற்சவங்கள் பங்குனி மாதம் முதல் புரட்டாதி மாதம் வரையுள்ள 6 மாதங்களும் நடைபெறும். இவ் ஆறு மாதங்களுக்கும் நடன விருந்தளிப்பதற்காகத் தமிழகத்தில் இருந்து ஒப்பந்தம் பேசி நாட்டிய மகளிர் இங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள கோவில்களில் ஆடல் நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்தார்கள். அவர்களுக்கு வீட்டு வசதி, உணவு வசதி, சமையற்காரர் வசதி எல்லாவற்றையும் “செற்” முதலாளி ஏற்படுத்திக் கொடுத்தார் என அறியப்படுகின்றது.





Palinda Stephen de Silva Collection-A.W.A. Plate: Sinhalese


செற்றுக்களை வைத்திருந்த முதலாளிகள் இந்நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திச் செய்வதன்மூலம் ஆடல் மகளிரின் ஒப்பந்தப் பணத்தையும் மற்றும் செலவுகளையும் நீக்கி நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள் எனத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கும்பகோணம், பண்ருட்டி, எண்கண், குழிக்கலை, வேதாரணியம் முதலான இடங்களில் இருந்து ஆடல் மகளிர் இங்கு வந்ததாக அறியப்படுகின்றது. இவ்வாறு வந்தவர்களில் தாராபாய், எண்கண் ராஜலக்சுமி, அம்புஜம், செல்லக்கண்டு, கோகிலாப்பட்டு, ஆனந்தவல்லி, கமலகுமாரி, மீனாம்பாள், எண்கண்ணாள், இந்திரா சந்திரா, வேணுபத்மா, யசோதா, சிறிவாஞ்சியம் போன்றோர் பிரபல்யம் ஆனவர்கள் எனக் கூறப்படுகின்றது.

1930ஆம் ஆண்டின் பின் சின்னமேளக் கச்சேரி மேலும் பிரபல்யமடைந்ததற்கான சூழல்கள் ஏற்பட்டன. தமிழகத்தில் “தேவதாசிகள் தடைச்சட்டம்” கொண்டு வரப்பட்டது, எனவே அங்கு தேவதாசிகள்  தொழில் இழந்து வருமானம் இழந்து வாழும்நிலை ஏற்பட்டது. இந்நிலைமை அவர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி வருவதற்குக் காரணமாக  அமைந்தது.

வெளியரங்குளில் சின்னமேளம்:-
ஜனரஞ்சகக் கலையாக வளர்ச்சி கண்ட சின்னமேள ஆடற்கலை கோயில் உற்சவங்கள் திருவிழாக்களில் மட்டுமன்றி திருவிழாக்களின்போது நிறுவப்பட்ட தண்ணீர்ப்பந்தல்கள், திருமணச்சடங்குகள், பொதுநிறுவனங்களின்  விழாக்கள்,  மிருகபலி நிகழ்வுகள் போன்றவற்றிலும் இடம்பெற்று வந்ததாகவும், விழாக்களில் இவ் ஆடற்கலையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு  செற்றுக்களின் தொகைபோதா நிலை கூட ஏற்பட்டது எனக் கூறப்படுகின்றது.

தாக்கு திறன் மிக்க கலையாகச்  சின்னமேளம்:-
திருவிழாக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களை அழைக்கும் நிலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பலமேடைகளில் சின்னமேள நிகழ்வுகள் இடம்பெறலாயின. மேலும் சின்னமேள ஆடல்மகளிரை கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, நாவலப்பிட்டி, புத்தளம், ஹற்றன், மாத்தளை, அம்பாறை என இலங்கையின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் நடாத்துவது வழக்கமாக இருந்தது.

சின்னமேள ஆடற்கலை கோயில் திருவிழாக்களில் முக்கிய இடம்பெற்ற வேளையில்,  கோயில்களில் ஆடுவதற்குக் குழுக்களின் தொகை போதாத போதும், ஒரு இரவில் பல கோவில்களுக்குச் சென்று ஆடவேண்டிய நிலை ஏற்பட்ட போதும், இந்நிகழ்வுகளை இரவில் ஆற்றுகை செய்வதற்கு நேரம்போதாது இருந்தமையாலும்; பகலிலே இந்நிகழ்வுகளை நடாத்தும் நிலையும் ஏற்பட்டது. நிகழ்வுகள் இரவில்; நடைபெறும்போது மக்கள் இரவிரவாக கண்விழித்திருந்து உற்சாகமாக இந்நிகழ்வுகளைப் பார்த்தார்கள்; என்று கூறப்படுகின்றது. அத்தோடு இந்நடனத்தை ஆடும்பெண்களுக்கு பரிசுப் பொருட்களை உபயகாரரும் பொதுமக்களும் அள்ளி வழங்கியதாகக் குறிப்பிட்டார்கள். அக்கால இளைஞர்கள் இந்நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு பெற்றோருக்குத் தெரியாமல் சென்று பார்ப்பதாகவும் பல முதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இச் சம்பவங்களை ஆறுமுகநாவலரும் “பற்பல மாணவர்கள் இராத்திரியிலே திருவிழா என்றோடிச் சனக்கூட்டத்திலே நெருங்குண்டு தள்ளுண்டு அடியுண்டு நுழைந்து தாசிகளுடைய நாட்டிய கீதங்களை பார்த்துங் கேட்டுங் கெட்ட வார்த்தைகளுங் கெட்ட செய்கைகளும் பழகிக் கொண்டதும் அவர்கள் இராப்பாடமும் இழந்து இருபது இருபத்தைந்து நாளிகை வரையும் நித்திரை இழந்து.....”
எனக் கண்டித்துக் கூறியிருக்கின்றார். இவ்வாறே சின்னமேள ஆடல்நிகழ்வுகள் இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தமை புலனாகின்றது.


Company Painting of an Indian dancer, late 18th or early 19th century.
National Museum of Denmark (Inv.no. D.2037) c. 1770-1850

சின்னமேளத்தின் உச்சக்காலம் :-
யாழ்ப்பாணத்தில் 1930 முதல் 1960 வரை சின்னமேளத்தின் உச்சக்காலம் எனக் குறிப்பிடலாம். கோயில்களில் இவ் ஆடலை ஆடுவதற்குத் தமிழக  ஆடல் மகளிரின்   தொகை  போதாது இருந்தமையும், 1960களில் இந்தியாவில் இருந்து இங்குவந்து போவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும் புதிய நிலை ஒன்று  தோன்றியது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இந்துக்கோயில்களில் ஆடல்  நிகழ்வுகளை  நடாத்துவதற்கு இன, மத, பேதமின்றி பெண்களை அழைத்து ஆடல்களை ஆடப்பழக்கி கோவில்களில் ஆடுவதற்குரிய  ஒழுங்குகளைச் சின்னமேள செற் உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.

இவ்வாறு புத்தளத்தில் இருந்து கிறிஸ்தவரான றீற்றா, கொழும்பைச் சேர்ந்த சிங்களப் பெண் “நோனா”, பறங்கி இனத்தைச் சேர்ந்த “அன்ரா” போன்றோரும், புத்தளத்தைச் சேர்ந்த றலி, நல்லி, மாத்தளை சறோசா, சிலாபம் கனகா, முல்லைச் சகோதரிகள், கிளிநொச்சி சரசுவதி மட்டக்களப்பு சறோசா, கொழும்பைச் சேர்ந்த சறோ, கனகா, சசிகலா, சந்தானலக்சுமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சின்னமேளத்துறை வறுமையில் வாடிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் சேர்ப்பதற்குச் சுலபமான ஒரு வழியாக விளங்கியமையால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரும் சின்னமேளம் ஆட ஆரம்பித்தனர். இவ்வாறானவர்களில் நாகேஸ்வரி, நாகபூசணி, சறோசா, அம்பிகா,  ராணி, மல்லிகா, அன்னம்மா, சிவகாமி, கன்னிகா பரமேஸ்வரி, நீலாம்பிகை, புஸ்பாம்பிகை, நகுலாம்பிகை, லக்சுமி, விஜயா, சுப்புலக்சுமி, விசாலினி, கானசரஸ்வதி, சீதாலக்சுமி, மகாலக்சுமி, ஜனா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இக்காலப்பகுதியில் சாஸ்திரியமாக ஆடப்பட்டு வந்த சின்னமேள ஆடற்கலையானது திசைமாறி திரைப்படங்களின் செல்வாக்கால் திரைப்படப்பாணியில் உச்சக்கட்டத்தை அடைந்தமையை நோக்க முடிந்தது. அத்தோடு சின்னமேள ஆடற்கலையானது வேறொரு பாணியில் திசை திரும்ப வழிவகுத்தது. திரைப்படப் பாடல்களுக்கு ஆடுவது அக்கால மக்களுக்கு இரசனையைக் கொடுத்ததால் இப்பாடல்களுக்கு ஆடல்களை ஆடுவதையே மக்கள் பெரிதும் விரும்பினர். இரசிகர்கள் “இன்னுமொருமுறை, இன்னுமொருமுறை” என்றும் “மேலும் ஒன்று மேலும் ஒன்று” என்று கோரிக்கை விடுப்பதும் அவர்களது கோரிக்கையை நடனமகளிர் நிறைவேற்றுவதும் அக்காலத்தில் சர்வசாதாரணமாக இருந்தது. சின்னமேளம் “நேயர் விருப்ப நிகழ்ச்சியாக” மாறியிருந்தது. இவ்வாறான நிகழ்ச்சிகள் இல்லாவிடில் திருவிழா  உயிர்ப்பற்றதாகக் காணப்பட்டது.

சின்னமேள ஆடல்களில் சாஸ்திரிய நடனங்களுடன் சாகசச் செயல்கள் செய்து ஆடுவது, மேலைத்தேச பொப்பிசைப் பாடல்களுக்கு ஆடுவது போன்ற நடனங்களும் ஆடப்பட்டதுடன் லைற் நடனங்கள், ஆடைகளைக் கழற்றி ஆடும் துகிலுரி நடனமான “காபறே” நடனங்கள் என்பவற்றையும் ஆடி ஆடல்மகளிர் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை மக்கள் விரும்பியமையாலும், ஆண்கள் இந்நடனமாடும் பெண்களுக்குப் பரிசுகளை வாரி வழங்கியமையாலும் ஆடல்மகளிரும் அவர்களது வறுமையின் காரணமாக தமது மனம்போன போக்கில் மாற்றங்களைப் புகுத்தி நெறி தவறி ஆடினார்கள் என்று அறியப்படுகின்றது.

சின்னமேள ஆடற்கலையின் வீழ்ச்சியும் பின்புலமும் :-
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து சின்னமேள ஆடற்கலை வளர்ச்சியடைந்தது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதிய மாற்றங்களைப் பெற்று ஒப்பற்ற மக்கள் கலையாக உயர்ச்சி பெற்ற காலப்பகுதியிலேயே அக்கலையின் வீழ்ச்சிக்கான காரணிகளும் எதிர்நிலையாக  வளர்ந்து வந்தன. இருபதாம் நூற்றாண்டின் முன் ஆலயக் கிரியைகளில் இணைந்திருந்த இவ் ஆடற்கலையினால் ஏற்பட்ட தீமைகள் எண்ணில் அடங்காதவை.  இத்தீமைகளைக் கண்ணுற்ற பல பெரியார்கள் இக்கலையை தீவிரமாகக் கண்டித்து ஒதுக்க  முயன்றார்கள். இவ்வாறு கண்டனங்களை மேற்கொண்டோரில் ஆறுமுகநாவலர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் தனது யாழ்ப்பாணச் சமயநிலை என்னும் நூலிலே,
“சைவசமயிகளே! உங்கள் கோயில்களில் பொதுமகளிருடைய நடன, சங்கீத, வாண விளையாட்டு முதலியவற்றை ஒழித்து விடுங்கள் நிர்வாணமாயும் காமத்தை வளர்ப்பதற்கு ஏதுவாயும் உள்ள பிரதிமைகளையும்,படங்களையும் அமைப்பியாது ஒழியுங்கள். சைவப்பிரசங்கங்கள், வேதபாராயணம், தேவார திருவாசக பாராயணம் முதலியவற்றைச் செய்யுங்கள்...” என்று கண்டித்தார்.(ஆறுமுகநாவலர் 2017 : 29)

1930ஆம் ஆண்டின் பின்னர் இக்கலையானது பணம் சம்பாதிப்பதற்கு உரிய ஒரு துறையாக மாறியமை, சமூகப் பொருளாதார  அரசியல் மாற்றங்களினால், மக்களுடைய வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், சனத்தொகை அதிகரித்தமை, திரைப்படங்கள் தோன்றிச் செல்வாக்குச் செலுத்தியமை, மேலைத்தேச கலைகளின் செல்வாக்கு போன்றவை இப்பாரம்பரியக் கலையின் அழிவிற்கு வழிவகுத்த காரணிகள் ஆயின.

மேலும் இலவசக்கல்வியின் தோற்றத்தினால் குறிப்பாக பெண்கள் கல்வியறிவு பெற்று வந்தமையால் இக்கலையை வெறுத்து ஒதுக்குகின்ற ஒரு நிலை பெண்கள் மத்தியில் தீவிரமாக ஏற்பட்டதாகத் தெரிகின்றது. தேவதாசிகள் தடைச்சட்டம், சிங்களத் தடைச்சட்டம், செந்நெறி நாட்டியக்  கலையின் பரம்பலும், வளர்ச்சியும், இன உணர்வு வளர்ச்சி, தமிழின உரிமைப் போராட்டம் போன்ற காரணிகளும் இக்கலைவடிவத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாக அமைந்தன.

ஆணாதிக்கமும் ஆடல்மகளிரின் அவலநிலையும்:-
ஆரம்பத்தில் தெய்வீகக்கலையாக ஆலயங்களில் ஆடப்பட்டு வந்த இவ்ஆடற்கலையானது  ஆண்களின் தவறான பார்வையாலும் அணுகுமுறைகளாலும் வீழ்ச்சி கண்டது. ஆடல் மகளிரின் வறுமையினையும், சமூக ஆதரவற்ற நிலையையும் சாதகமாகப் பயன்படுத்தி பாலியல் இச்சைக்கு பலிக்கடாவாக்கியதன் விளைவாக இக்கலை நலிவடையத் தொடங்கியது.

சாஸ்திரிய நிலைப்பட்ட கலைகளின் எழுச்சி அவை உயர்நிலைப்பட்ட மக்களின்  குறிப்பாக யாழ்ப்பாண உயர் வேளாளரின் ஆதரவைப் பெற்றதால் பெரும்பாலும் அடிநிலை சமூகப் பெண்களால் ஆடப்பட்ட சின்னமேள நாட்டியக்கலை ஒடுக்கப்பட்ட கலையாக கணிக்கும் மரபு உண்டானது.

ஆறுமுகநாவலர் போன்ற சமூக சமயப் பெரியார்கள், சைவசமயிகளின் சமூக அந்தஸ்தும் சமயப் புனிதமும் இழக்கப்படுவதற்கு இத்தகைய சின்னமேள ஆடலும், அதனை ஆடும் பெண்களும் காரணம் எனவும் கூறப்படுகின்றது. இதனால் சின்னமேளக்கலை அதன் ஆடுகளமான கோயில்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சின்னமேளக்கலையின் முதற்களமாக இருந்த வண்ணார்பண்ணை சிவன்கோவிலில் நாவலரின் எதிர்ப்பும் ஆரம்பமானது. காலகதியில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில், சுட்டிபுரம் அம்மன் கோவில் உள்ளிட்ட எழுபதுக்கு மேற்பட்ட ஆலயங்களிலும் சின்னமேளக்கலை தடைசெய்யப்பட்டது. இதனால் ஏதிலிகள் ஆக்கப்பட்ட சின்னமேள ஆடல்மகளிர் தமது வாழ்வுக்கான புதிய சூழலைத் தேடவேண்டிய  நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆடல்மகளிரிற் சிலர் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளுக்கு மதம்மாறி புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்து முதலாளிமார்களில் சிலர் அவர்களை தங்கள் காதற்பரத்தையராக ஆக்கிக் கொண்டனர். பாலியல் அடிமைகளாக நடாத்தினார்கள். அதனாலும் சின்னமேளக் கலைஞர்கள் மீதான சமூகத்தின்பார்வை மாறாத தடையாகக் காணப்பட்டது. இம்மகளிர் இன்று முதியவர்கள் ஆகிவிட்ட சூழலிலும் கூட அவர்களின் மீதும் அவர்களின் தலைமுறையினர் மீதும் இப்பழி நீங்கவில்லை. ஒருகாலத்தில் உன்னத கலைஞராக விளங்கிய இவர்கள் இன்று தாம் சின்னமேளக்கலைஞர் என்று கூறமுடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமகாலத்தில் சின்னமேளம் குறித்து எழுந்த இலக்கியப் பதிவுகள் கூட இக்கலையை இழிவுபடுத்துவனவாகவே எழுந்துள்ளன.

இதற்குக் காரணம் இவற்றை எழுதியவர்களும் ஆண்களே. எடுத்துக்காட்டாக நட்டுவச் சுப்பையனார் எழுதிய “கனகிபுராணம்”; கனகி என்னும் ஆடல் மகளின் ஆடற்கலை நுட்பங்களைக் கூறாமல் அவளிடம் வந்துசென்ற உயர்வர்க்கத்தினரைப் பட்டியலிடுவதாக அமைந்துள்ளது.
“நட்டுவ னொருவனாலே நாடகசாலை வந்தாள்
செட்டியில் ஒருவன் பட்டான் சேணியர் இருவர் பட்டார்
மட்டுவில் குருக்கள் பட்டார் கொக்குவிற் சுப்பன் பட்டார்
மட்டிகள் இவரைப் போலப் பட்டவர் பலபேர் அம்மா”
என்று கூறப்படுகின்றது. (சிவலிங்கராஜா 2003:118).

இப்புராணத்தைக் கூட ஆண்கள் விட்டுவைக்கவில்லை. இப்புராணத்தின் சிலபாடல்களே இன்று எமக்குக் கிடைக்கின்றன. ஏனையவை இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக கலாநிதி.எஸ்.சிவலிங்கராஜா குறிப்பிடுவது இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. சமயப்பெரியார்களின் தூரநோக்கற்ற கண்டனங்களும் புனிதமான இக்கலைமரபு அழிந்துபோவதற்குக் காரணமாக அமைகின்றது. இக் காரணங்களால் தாங்கள் ஒரு சின்னமேளக் கலைஞர் என்று தம்மை வெளிப்படுத்தத் தயக்கம் காட்டும் நிலையையும் சின்னமேள ஆடல் மகளிரிடம் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

முடிவுரை:-
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான ஆணாதிக்க சமூகத்தின் செயல்களும், ஒடுக்கு முறைகளும், பாலியல் வன்மங்களும் புனிதமான ஒரு கோயிற்கலை மரபு அழிந்துபோவதற்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதனை அறிய முடிகின்றது. இறைவனுக்கு வழிபாடாற்றும் வழிபாட்டு முறையில் இருந்த ஓர் ஆடல்மரபு பல்வேறுபட்ட காரணங்களினால் கைவிடப்பட்டமை  உணரப்பட்டுள்ள இவ்வேளையில் இறைவனுக்கு வழிபாட்டின்போது மீண்டும் இவ் ஆடற்கிரியை நடைபெறவும், மறுமலர்ச்சி அடையவும் வழிசமைக்கப்பட வேண்டும் என்ற தேவை உணரப்படுவது காலத்தின் தேவை என்பதுடன் அது யாழ்ப்பாணத்தின் தனித்துவ மரபு என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.





துணை நூல்கள்
1)     நட்டுவச் சுப்பையனார் (பதிப்பாசிரியர் வட்டுக்கோட்டை இராமலிங்கம்)., 1961, கனகி புராணம், சுதந்திரன்  அச்சகம், கொழும்பு.
2)     சிவத்தம்பி, கா., 2000, யாழ்ப்பாணம் சமூகப்பண்பாடு கருதுநிலை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
3)     மகேஸ்வரன், வ., 2011, உருத்திர கணிகையர் கலாச்சாரத் திரட்டு, இந்துசமய  கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.
4)     பவித்திரா, ஏ., 2006, நடனச் சுவடுகள், உப்புக்குளம், மன்னார்.
5)     Raghavan, M.D., Tamil culture in Ceylon, Kalai Nilavan Limited, „Shantham‟, Colombo.co.(N.D)
6)     ஸ்ரீராமதேசிகன், எஸ்.என்., 2001இ பரதக்கலைக்களஞ்சியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை.
7)     28.06.1936, தேவாலயங்களும் தேவதாசிகளும், ஈழகேசரி.
8)     பரதன்., 07.04.1946, ஆலய நடனம், ஈழகேசரி, ஞாயிறு வாரஇதழ்.
9)     வலன்ரீனா இளங்கோவன்., 2008, யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகள், வெற்றிமணி வெளியீடு. ஜெர்மனி.
10)     ஆறுமுகநாவலர், 2017, யாழ்ப்பாணத்துச் சமயநிலை, நாவலர் நற்பணி மன்றம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
11)     கணேசலிங்கன், செ., 2009, நீண்டபயணம், குமரன் புத்தக இல்லம்.
12)     ஸுந்தரம். பி.எம்., 2003, மரபுதந்த மாணிக்கங்கள் டாக்டர்.வே.ராகவன், நிகழ்கலை மையம், சென்னை.
13)     சுந்தரம்பிள்ளை காரை., 1990, ஈழத்து இசைநாடக வரலாறு, கழக வெளியீடு.
14)     சிவசாமி, வி., 2005, பரதக்கலை, யாழ்ப்பாணம், இலங்கை.
15)     சிவலிங்கராஜா, எஸ்., 2003, ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.

 http://mymintamil.blogspot.de/2018/03/blog-post_23.html


கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...