யோகாவும் ஐந்து கோசங்களும்
யோகாவும் ஐந்து கோசங்களும்
முன்னுரை
“யோகா என்ற வார்த்தையானது "யுஜ்" என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்துவந்த வார்த்தை ஆகும். யுஜ் என்ற வார்த்தையின் பொருள் இணைப்பு, சேர்த்தல் என்பதாகும். கவனத்தை நெறிப்படுத்தி ஓரிடத்தில் குவித்தல் என்பதும் இதன் பொருளாகும். யோகாவிற்கு 3,000 ஆண்டுக்கால பாரம்பரியம் உள்ளது. மேற்குலக நாடுகள் யோகாவை ஆரோக்கியத்துக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையாகப் பார்க்கின்றன. தேசிய சுகாதார நிறுவனங்கள் யோகாவை "இணை மற்றும் மாற்று மருத்துவமுறை வடிவம்" என வகைப்படுத்தி உள்ளன. தொடர்ச்சியாக யோகா பயிற்சி மேற்கொண்டால் அது வலிமையையும் உடலுரத்தையும் தருவதோடு சுயகட்டுப்பாட்டையும் தரும். இதனால் ஒருவர் தனது வாழ்க்கை குறித்த பார்வை, தன்னைப் பற்றிய அறிதல் முறை ஆகியவற்றை மாற்றிக் கொள்வார். அமைதி மற்றும் மகிழ்ச்சி முழுவதும் நிரம்பிய வாழ்க்கையை வாழ்வதற்கான ஆற்றலை யோகப்பயிற்சி தரும். மனஅழுத்தத்துக்கான ஏற்றல் அல்லது எதிர்த்தல் என்ற பதில்வினையை எதிர் கொள்வதற்கான உத்திக்கு தேவைப்படும் உடலியங்கியல் நிலையை அடைவதற்கு யோகா பயிற்சி உதவியாக இருக்கும். மனம் மற்றும் உடல் இரண்டுக்குமான சமநிலையை அடையவும் இரண்டின் சேர்க்கைக்கும் யோகப்பயிற்சி உதவும்.
ஹத யோகாவின் உடல் தோற்றங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள், தியானம் ஆகியவையே மேற்குலகில் பொதுவாக மேற்கொள்ளப்படும் யோகாவின் அம்சங்கள் ஆகும். அசைவுகள் (ஆசனங்கள்) உள்ளிட்ட தொடர்ச்சியான உடல் தோற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெளதீக உடலுக்குத் (ஸ்தூல உடல்) தேவையான திறனை ஹத யோகம் மேம் படுத்துகிறது. மூச்சை நீண்ட நேரம் உள்ளிழுப்பது, சிரமமின்றி மூச்சை அடக்கி வைப்பது, வெளியிடுவது ஆகிய அம்சங்களில் ஹத யோகாவின் மூச்சுப் பயிற்சிகள் கவனம் செலுத்துகின்றன. தோற்ற நிலைகளையும் அசைவுகளையும் மேற்கொள்ளும் போது உடலின் உயிராற்றல் பாயும் வழியில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகின்றன. உடல் ஆற்றல் அமைப்பு இப்போது சமச்சீர் நிலைக்கு வருகின்றது.
யோகா என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் முறையாக மட்டுமே இல்லை. இக்காலத்தில் மனஅழுத்தமானது பலவித ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதுவரை சேர்ந்த மனஅழுத்தத்தை குறைப்பதற்கான விரிவான அணுகுமுறையாக யோகா மட்டுமே உள்ளது. மைக்ரேன் தலைவலி, வயிற்றுப்புண், வயிறுகுடல் சார்ந்த பிரச்சனை போன்ற பிரச்சனைகளை "மனஅழுத்தம் தொடர்பானவை” எனப் பொதுவாக முத்திரை குத்திவிடுகின்றனர். இத்தகைய நிலைமைகளில் மனஅழுத்தம் மட்டுமே நோய்க்கு காரணமான கூறாக இருப்ப தில்லை. அதைவிட முதன்மையான உயிர்க் கொல்லி நோய்களான மாரடைப்பு, நீரிழிவு, எலும்புச்சிதைவு நோய் ஆகியவற்றுக்கும் மனஅழுத்தம் காரணமாக அமைகின்றது.
யோக தத்துவமும் பயிற்சியும் முதன் முதலாக பதஞ்சலியால் “யோக சூத்திரங்கள்” என்ற செம்மை இலக்கிய நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல்தான் யோகா பற்றிய ஆதாரப்பூர்வமான நூல் என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று பலரும் யோகாவை ஆசனங்கள் என்று மட்டுமே அடையாளப்படுத்துகின்றனர். அதாவது யோகாவை உடற்பயிற்சி ஆசனம் என்று சுருக்கிவிட்டனர். ஆனால் தனிநபரை குணப்படுத்துவதற்கான பல கருவிகளில் ஆசனங்களும் ஒன்று, விழிப்புநிலை மற்றும் ஆனந்த நிலையை அடைவதற்கான எட்டுவிதமான வழிகளை பதஞ்சலி குறிப்பிட்டுள்ளார். இவை "அஷ்டாங்கம்” எனப்படுகின்றன. அதாவது இதன் அர்த்தம் "எட்டு அங்கங்கள்” என்பதாகும். அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்வை வாழ்வதற்கான அறநெறிக் கோட்பாடுகள் கொண்டதாக இந்த எட்டு அங்கங்கள் உள்ளன. ஒழுக்கவியல், அறவியல் நடத்தைகளையும் சுயஒழுக்கத்தையும் பரிந்துரைப்பதாக இவை உள்ளன. பதஞ்சலியின் எட்டு அம்சங்களின் அடிப்படையில் பல்வேறுவிதமான யோகப் பிரிவுகள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. நோய்த்தடுப்புக்கும் நோய் சிகிச்சைக்கும் ஒவ்வொரு பிரிவும் அதற்கே உரிய உத்திகளைக் கொண்டுள்ளன.
தற்போது யோகாவானது நன்கு பிரபல்யம் அடைந்து வருகின்றது. பல நிறுவனங்கள் யோகாவைக் கற்றுத்தர ஆரம்பித்துள்ளன. யோக சிகிச்சை முறைக்கான விஞ்ஞான மாதிரியை உருவாக்கி யோகப் பயிற்சியைத் தரப்படுத்துவதற்கான முயற்சிக்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லை. யோக சிகிச்சைக்கான மாதிரி எது? யோகாவின் கோட்பாடு மற்றும் பயிற்சி அம்சங்களில் போதுமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின்வழி யோக சிகிச்சையின் விஞ்ஞான அடிப்படைகளை நிறுவ வேண்டியது முக்கியமானதாகும்.
கண்ணுக்குப் புலனாகும் உறுப்புகளை மட்டுமே கொண்டதாக நமது உடல் இல்லை. கண்ணுக்குத் தெரியாத உடல்களும்கூட நமக்குள் இருக்கின்றன (சூட்சும உடல் மற்றும் காரண உடல்). நாம் ஒவ்வொருவரும் மொத்தமாக ஐந்து "உடல்"களை அல்லது கோசங்களை பெற்றுள்ளோம்.
அன்னமய கோசம் - போஷாக்குக்கான உடல் - ஸ்தூல உடல்; பிராணமய கோசம் - ஆற்றல் உடல் உயிர்ஊன்ம அடுக்கு; மனோமய கோசம் - மன உடல் ஆன்மீக அடுக்கு, விஞ்ஞானமய கோசம் - அறிவு உடல் ஞான அடுக்கு; ஆனந்தமய கோசம் - மகிழ்ச்சிக்கான உடல் பேரின்ப அடுக்கு.
கோசங்களில் நமது கர்மாக்கள் (வினைகள்) மற்றும் சம்ஸ்காரங்கள் (ஞாபகங்களும் அனு பவங்களும்) சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. தனிநபரின் ஆன்மா மற்றும் பிரபஞ்ச ஆன்மா இரண்டையும் பிரித்து வைக்கும் பிரிவினைகளாக இவை உள்ளன. எனவே விடுதலை (மோட்சம்) என்பது இந்த கோசங்களின் கட்டுப்பாடுகளில் இருந்து ஆத்மாவை விடுவிப்பதாக உள்ளது. ஏதோ ஒன்றுடன் ஒன்றாக ஆவதற்கு நாம் இணைய விரும்பும் அதனின் அதே குணங்களை நமக்குள்ளும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கோசங்களில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளாதவரை நாம் நமது தனிப்பட்ட ஈகோவில்தான் சிக்கிக்கொண்டு இருப்போம். "நான்” என்பதுடனேயே நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இருப்போம். அளவற்ற பிரபஞ்சமாக நாம் மாறாமலேயே இருப்போம். எது எப்படி இருந்தாலும் இந்த மண்ணுலக வாழ்வில் நமது இருப்பிற்கு இந்த ஐந்து கோசங்களும் தவிர்க்க இயலாமல் தேவைப்படுபவை ஆகும். இவை இல்லாமல் நாம் இருக்க முடியாது. இந்த கோசங்களில் இருந்து விடுபடுவது என்பது முதன்மையாக மனம் தூய்மையாதல் மற்றும் மேம்படுதல் என்ற செயல்பாடாக உள்ளது.
தூய்மைக்கேடு இனி இல்லை, "நிழல்கள்” இனியும் இல்லை என்றாகும் போது, பிறகு நமது வாழ்வின் நிறைவில் ஆன்மீக உடல் கரைந்து போகின்றது. நமது ஆன்மாவின் ஒளி பிரபஞ்சத்துடன் இணைகின்றது. அதாவது தெய்வீக ஒளியுடன் இணைந்து, அந்தரங்க பேரின்பம், அறிவு, அதிகாரம், சுதந்திரம் ஆகியவற்றின் யதார்த்தத்தை மாற்றுகின்றது.
அன்னமய கோசம்
அன்னமய கோசம் என்பது ஸ்தூலமான பெளதீக உடலாகும். இது நாம் உண்ணும் உணவாலும் நமது சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தாலும் தாக்கம் பெறுகின்றது. எனவே யோகா குறித்த போதனைகள் நேர்மறையான ஆக்கப்பூர்வமான மனித உறவுகளின் முக்கியத் துவத்தையும் அதேபோன்று ஆரோக்கிய மான, சாத்வீகமான உணவின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றன. ஏனெனில் இவைதான் நமது பெளதீக மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதாக உள்ளன. இறைச்சி, மது, போதைப்பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது என்பது நமது உயிராற்றலை பலஹினப்படுத்துகின்றது. மேலும் இவை நம்முள் எதிர்மறை அதிர்வுகளை நிரப்புகின்றன. முழுமையான சைவ உணவு உடலுக்கு தேவையான போஷாக்கை சரியான முறையில் தருகின்றது.
பிராணமய கோசம்
பிராணமய கோசம் என்பது பிராணா என்றழைக்கப்படும் பிரபஞ்ச ஆற்றலின் உள்ளார்ந்த அடுக்கு ஆகும். இது ஸ்தூல பெளதீக உடலை ஊடுறுவியும் சுற்றியும் உள்ளது. இது நமக்கான ஒளிவட்டத்தை உருவாக்குகின்றது. அதாவது நம்முள் இருந்து வெளியாகும் ஒளிக்கதிர் இதுவாகும். வாழ்க்கைக்கு உணவும் பானமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போன்றுதான் “பிராணா” என்பதும் ஆகும். இது உள்ளார்ந்த போஷாக்கைத் தருவதாகும். ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் நாம் ஆக்சிஜனை மட்டும் உள்ளிழுக்கவில்லை. அதனுடன் “பிராணா"வையும் உள்வாங்குகின்றோம். அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு “பிராணா” வையும் வழங்குகின்றன. நமது பிராணாவின் தரம் வெளிப்புற அம்சங்களால் பாதிக்கப்படுகின்றது. அதேபோன்று நமது சொந்த சிந்தனைகள் மற்றும் உணர்வுகளாலும் பாதிக்கப்படுகின்றது. பிராணாவின் பாதிப்பு இந்த கோசங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மனோமய கோசம்
மனோமய கோசம் என்பது மன ஆற்றலின் அடுக்கு ஆகும். இது பிராணமய கோசத்தை விட விரிவானதும் ஆற்றல் மிகுந்ததுமான அடுக்கு ஆகும். மனமும் சிந்தனைகளும் கால விரையம் இல்லாமல் எந்த இடத்துக்கும் சென்றுவிட முடியும். எனவே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும். கட்டுப்படுத்த முடியாத மனதின் வேகம் விரைவுபடுத்தப்படும்போது அது உணர்வு எழுச்சிகளை உருவாக்குகின்றது. இது மன அழுத்தத்துக்கு வழிகோலுகின்றது. இதுவே ஆதி என்றழைக்கப்படுகின்றது. இது அன்னமய கோசத்துக்குள் நுழைந்து பிராண மய கோசத்தில் உள்ள சமச்சீர் இன்மை வழியாக வியாதி (நோய்) என்பதாக மாறுகின்றது. மனதைக் கட்டுப்படுத்துவதன் வழியாக மட்டுமே நாம் இத்தகைய நிகழ்வுகள், LO6 அழுத்தங்கள், நோய்களை நமது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மனதை அடக்கி நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த முறை என்பது நற்சிந்தனைகளை வளர்ப்பதுதான். இதன்மூலம் மனதை சாந்தப்படுத்தவும் அதை அமைதிப் படுத்தவும் அரவமற்றதாகவும் செய்ய கற்றுக் கொள்ளலாம். யாமம், நியமம், புரிதல், தருதல், வழிபாடு மந்திர உச்சாடனம் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் நாம் நமது கர்மாவின் சுமையை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
விஞ்ஞானமய கோசம்
விஞ்ஞானமய கோசம் என்பது ஆற்றல் உடல் ஆகும். இது நேர்மறையானதாகவும் இருக்கலாம்; எதிர்மறையானதாகவும் இருக்கலாம். அது நாம் வாழும் சமுதாயம், நமது சுற்றுப்புறச்சூழலில் இருந்து நாம் கிரகிக்கும் புலன்சார் உணர்வுப் பதிவுகள் ஆகியவற்றில் இரண்டில் ஒன்றாக இருக்கலாம். அனுபவங்கள், வளர்ப்பு, இந்த வாழ்நாளில் நாம் பெறும் கல்வி ஆகியவற்றால் இது உருவாகின்றது. இந்த அனைத்தின் மொத்த கூட்டுச் சேர்க்கையாக இது உள்ளது. இருந்தபோதிலும் அறிவு எப்போதுமே நமக்கான சிறந்த ஆலோசகராக இருப்பதில்லை. பெரும்பாலும் இது உண்மையை உணராததாகவே உள்ளது. நமது விருப்பத்தின்படியே ஈகோ முனைப்புடன் மதிப்பீடுகளைச் செய்கின்றது. அறிவு என்பது மிகுந்த பயனுள்ள உபகரணமாக இருக்கலாம். அதே சமயம் அது பெரிய தடையாகவும் இருக்கக்கூடும். எனவேதான் நாம் எப்போதும் புத்தி (பகுத்தறிவு) மற்றும் விவேகம் (சரியான பாகுபடுத்தல்) இரண்டையும் சேர்த்தே பயன்படுத்துகிறோம்.
ஆனந்தமய கோசம்
ஆனந்தமய கோசம் என்பது "பேரின்ப உடல்" ஆகும். இது காரண அடுக்காகும். இதில் இருந்துதான் ஏனைய நான்கு உடல்களும் சன்ஸ்காரங்கள் மற்றும் வசனங்கள் மூலம் உருவாகின்றன. இதனின் வித்து வடிவத்தில் இதை தூய்மைப்படுத்துவது சிரமமான காரியமல்ல. நமது விழைவுகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பால் இது உருவாகின்றது. செளகரியம் மற்றும் மகிழ்ச்சி ஆகியன ஆற்றல்மிக்க முனைப்பு ஊக்கிகளாக உள்ளன. அதேசமயம் அவை நம்முள் தீர்மானகரமான ஆற்றலாகவும் உறைந்துள்ளன.
நிலைத்து நிற்கும் எல்லையில்லாத ஒப்புயர்வற்ற மகிழ்ச்சியால் குழப்பட்ட பேரின்பத்துக்கு பல நிலைகள் உள்ளன. முதல்நிலை சில நிலைமைகளை குறிப்பாக நமது விழைவுகள் பூர்த்தி செய்யப்படுவதைச் சார்ந்து உள்ளது. மற்றொரு நிலை சாதகமான சூழ்நிலைகளைச் சார்ந்துள்ளது. அடுத்தது ஏதும் நிபந்தனைகள் இல்லாதது; இது புறஉலக நிபந்தனைகளில் இருந்து முற்றாக விடுபட்டு இருப்பது. நீடிக்கும் மனநிறைவு மற்றும் மஹா ஆனந்தம் (அளவற்ற பேரின்பம்) ஆகியன சுயத்துடன் இணையும்போதுதான் நமக்கு சாத்தியமாகின்றன. பிற மகிழ்ச்சிகள் கட்டுப்பாடுகள் உள்ளவை; தோன்றி மறைபவை. ஆனந்தமய கோசத்தில் இருந்து நாம் ஞானத்தின் (பேரறிவு) மூலமாக மட்டுமே விடுவித்துக் கொள்ள முடியும். இந்த இலக்கை நோக்கி நெருக்கமாக நம்மை பக்தி (கடவுள் மீதான பக்தி) கொண்டு செல்லும். ஆனால் இறுதிப் படியை நாம் உண்மையின் அறிவு வழியாகவே கடக்க முடியும். இவ்வாறு செயல் பட்டால்தான் நாம் இறுதியில் மோட்சத்தை (விடுதலை) அடைய முடியும்.
மனஅழுத்தம்
மனஅழுத்தக் குறைப்பு முறை என்பதை விடவும் மேலானதாகவே யோகா உள்ளது. எனினும் மனஅழுத்தம் ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது. மன அழுத்தத்திற்கு எதிராக அதைச் சமாளிக்கும் விரிவான அணுகுமுறையாக யோகா உள்ளது என சிலர் வாதிடுகின்றனர்.
மனஉடல் மருந்து வடிவமாக யோகா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தனிநபரின் பெளதீக மன, ஆன்மீகக் கூறுகளை ஒருங்கிணைப்பதாக உள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ஆரோக்கிய அம்சங்கள் மேம்பாடு அடைகின்றன குறிப்பாக மன அழுத்தம் தொடர்பான நோய்கள் குணமாகின்றன. மாரடைப்பு, புற்றுநோய், ஸ்ட்ரோக் என்ற மூளை செயல் இழப்பு ஆகியவற்றுக்கு மனஅழுத்தமே முதன்மைக் காரணமாக உள்ளது என்று ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. பிற நாட்பட்ட நோய் நிலைமைகளுக்கும் நோய்களுக்கும்கூட இதுவே காரணமாக உள்ளது. எனவே மனஅழுத்தத்தை சமாளிக்கும் மேலாண்மைக்கும் எதிர்மறையான உணர்வு நிலைகளை குறைப்பதற்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதன்மூலம் நேர்மறையாக நோய் கட்டுப்படுத்தப்படுகின்றது. யோகா ஒரு முழுமையான மனஅழுத்தக் கட்டுப் பாட்டு மேலாண்மை உத்தியாகப் பார்க்கப்படுகின்றது. யோகா ஒரு சி.ஏ.எம் (CAM) வகை யாகும். உடலில் தொடர்ச்சியான இயக்கச் செயல்பாடுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் மனஅழுத்தத்துக்கான எதிர்வினை குறைக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளில் யோகாவை விஞ்ஞானரீதியாக ஆராய்வது என்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து உள்ளது. யோகாவின் சிகிச்சை விளைவுகளும் பலன்களும் எவ்வாறு உள்ளன என்று மதிப்பிடுவதற்காக மருத்துவமனை சார்ந்த பல ஆய்வுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
யோகா விஞ்ஞானம்
யோக சிகிச்சைக்கான மாதிரியில் உள்ள முதன்மையான உண்மை எதுவெனில் அது மனித அமைப்பை விஞ்ஞானப்பூர்வமானதாகவும் அதே சமயம் முழுமை நிறைந்த பார்வையிலும் அணுகுவதே ஆகும். மனித உடல் செயல்படுவதற்கு தேவையான பிராணனின் (உயிராற்றல்) பங்கு பற்றிய விரிவான அறிவு இங்கு முக்கியமானதாகும். யோகா விஞ்ஞானத்தின் அடிப்படையில் நோய்கள் ஆதி என்பதன் காரணமாக ஏற்படுகின்றன. மேலும் பிராணனில் ஏற்படும் விலகல்கள் மற்றும் பற்றாக்குறையாலும் நோய்கள் ஏற்படுகின்றன. யோகா விஞ்ஞானம் நோய்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றது
- சூழ்நிலையால் ஏற்படக் கூடிய நோய்கள்,
- "ப்ராரப்த" கர்மாவால் ஏற்படும் நோய்கள்.
இந்த இருபிரிவுகளிலும் பிராணாவின் பாய்வு தடைபடுகின்றது; அலைக்கழிக்கப்படுகின்றது. எனவே அவற்றைக் குணப்படுத்துவதிலும் வித்தியாசம் இருக்கிறது. யோக சிகிச்சை முறையில், பிராணாவை சுத்தப்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் வாழ்க்கை முறையும் வாழ்க்கை பற்றிய பார்வையும் முக்கிய பங்காற்றுகின்றன.
யோகா விஞ்ஞானமானது பிராணாவின் ஒத்திசைவே நமது வாழ்வின் அனைத்து கூறுகளையும் நிர்ணயிக்கிறது என நிரூபிக்கிறது. பிராணா அதன் அனைத்து பல்வேறுபட்ட வடிவங்களிலும் நமது உடலுக்குள் பாய்ந்து கொண்டே இருக்கிறது. நவீன விஞ் ஞானம் பிராணாவை "வாழ்வுக்கான சக்தி, நோய்களை எதிர்ப்பதற்கான திறன், உயிர் மின்சாரம் அல்லது மின்காந்த ஆற்றல் என அர்த்தப்படுத்துகின்றது. உண்மையில் இவை எல்லாம் பிராணாவின் பல்வேறு வடிவங்களாகவே உள்ளன. பிராணாவின் இயல்பை ஓரளவே புரிந்துகொண்டவர்கள்கூட பிராணா சிகிச்சை (பிராணிக் ஹீலிங்), ரைக்கி போன்ற சிகிச்சை முறைகளின் உத்திகளை வகுத்துவிட முடியும். தங்களது இத்தகைய அறிவைக் கொண்டே அவர்கள் இதனைச் செய்துவிட முடியும். ஆனால் யோகாவில் பிராணா குறித்த விரிவான, ஆழமான அறிவு இன்றியமையாது தேவைப்படுகின்றது.
பிராணா
பிராணா பாய்வு தடைபட்டால், நமது ஒட்டுமொத்த முழுமையான பெளதீக உடலானது (ஸ்தூல உடல்) சூஷ்ம உடலில் இருந்து பிரிந்துவிடும் என யோகா நம்புகின்றது. உடலியங்கியல் ரீதியில் இது மரணத்தைக் குறிக்கிறது.
நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு பிராணாவை பாதுகாப்பாக பராமரிப்பதும் அதனை மேம்படுத்துவதும் அவசியமானதாகும். யோகமுறையிலான வாழ்க்கை முறைகளை புறக்கணிப்பதுதான் நோய்களுக்கான காரணமாக உள்ளது என யோகா நிபுணர்கள் நம்புகிறார்கள். யோக முறையிலான வாழ்க்கை முறையை சீராகத் தொடர்ந்து பராமரித்தால், சுற்றுப்புறச்சூழல்களால் ஏற்படும் நோய்களில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். இவற்றை எல்லாம் வைத்துப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வை யோகா உறுதியளிக்கின்றது.
தனக்குள் பொதிந்துள்ள பிராணாவை மனிதன் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்ற உண்மையை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பற்றாக்குறையால் ஏற்படும் துன்பங்களுக்காக பிற்பாடு மனிதன் வருந்துகின்றான். பிராணாவை நாம் சான்யம் (சுயகட்டுப்பாடு) மூலம் பாதுகாக்கலாம். வாழ்க்கையை பேரின்பம் உடையதாக மாற்றும் வகையில் அதனை சரியாகப் பயன்படுத்தலாம்.
ஆனால் அந்தோ பரிதாபம்! மனிதன் அறியாமையின் காரணமாக தனக்குள் உள்ள தணியாத மிருக வேட்கையை கட்டுப்பாடற்ற இன்பநுகர்வு மூலம் தீர்த்துவிடலாம் என முயல்கின்றான, எனவே அவன் தவிர்க்க இயலாமல் ஒரு மிருக வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியவன் ஆகின்றான். யோக வாழ்வு முறை என்பது வெளிப்புற மற்றும் உட்புற வாழ்வுகளை சமநிலையில் பேணி வாழ்கின்ற ஒரு முறையாகும். வாழ்க்கை சரியான முறையில் சமநிலையில் பேணப்பட்டால், திறன், நிபுணத்துவம் மற்றும் வெற்றி ஆகியன வாழ்க்கையில் தானாகவே கிடைக்கும். சரியான வாழ்க்கை முறையின் இயல்பான விளைவு என்னவென்றால் தடையில்லாமல் பிராணா பாய்வதே ஆகும்.
வாழ்க்கை குறித்த சரியான பார்வை
நோயற்ற வாழ்க்கைக்கு மதிப்பில்லாத கோட்பாடு என்னவென்றால் யோக முறையிலான வாழ்க்கை முறையே என்றால் அது மிகையாகாது. பிராணா இல்லையென்றால் நோய்கள் உண்டாவதை தடுக்க முடியாது. ஆசனம், பிராணாயாமம், பந்தம், முத்ரா மற்றும் யோக கிரியைகள் பிராணா பாய்வதில் உள்ள தடுப்புகளையும் தடைகளையும் நீக்கி வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்குகின்றன.
யோக சிகிச்சை முறையில் வாழ்க்கையைப் பற்றிய யோக முறையிலான பார்வைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இன்று உலகில் உள்ள பல விஞ்ஞானிகளும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும் அம்சம் எதுவென்றால் மனிதருக்கு ஏற்படும் நோய்களில் பெரும்பான்மையானவை இயல்பில் உடலும் உள்ளமும் சார்ந்தவையே ஆகும் என்பது தான். வாழ்க்கை குறித்த சரியான பார்வை இல்லாததின் விளைவாகத்தான் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை குறித்த நமது நம்பிக்கைகள், முடிவுகள், குறிக்கோள்கள், இலக்குகள் சரியாக இருந்தால் மற்றும் நமக்கு வாழ்க்கை குறித்த சரியான, சமநிலையான பார்வை இருந்தால், நமது வாழ்வாற்றல் சரியாகப் பயன்படுத்தப்படும். இதனால் உளவியல் உளைச்சல் மற்றும் கவலைகளில் இருந்து விடுபடுவதற்கான சரியான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட முடியும். மன அழுத்தம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக விரயம் ஆகும் பிராணாவை நாம் சரியான யோக முறையிலான வாழ்க்கை பற்றிய பார்வையை ஏற்றுக் கொள்வதன் மூலமாகத் தடுத்து விடலாம்.
எனவே, முழுமையான விஞ்ஞானமாக யோகாவைக் கருதினால், நோயறிதலுக்குப் பின்பு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என்றில்லாமல், அதனை ஒரு மாற்றமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை, கதிரிக்க சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை ஆகியவற்றின் பர்க்க விளைவுகளையும்கூடதாம் குறைத்துக்கொள்ள முடியும். அரவமற்ற ஆசனம், மெதுவான மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகப் பயிற்சிகள் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கும் சமநிலைபடுத்துவதற்கும் உதவுகின்றன.
யோகா பற்றிய ஆய்வுகள் சிறந்தவையாக மாறி வருவதோடு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, பல நோய்களைக் குணப்படுத்துவதில் யோகாவின் ஆற்றலை ஆய்வுகள் ஆவணப்படுத்தி உள்ளன. முதுகுவலி, திசுச்சிதைவு நோய், தூக்கமின்மை, புற்றுநோய், இதயநோய்கள், காசநோய் போன்ற நோய்நிலைமைகளை சீரமைப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. யோகா எவ்விதம் வேலை செய்கிறது என்பதை ஆவணப்படுத்தக்கூடிய ஆய்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. யோகா தரும் பல பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், வலிமை, நெகிழ்ச்சி, சமநிலை ஆகியவற்றை யோகா மேம்படுத்துவதை உணரலாம். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல், உளவியல்ரீதியான நலத்தை மேம்படுத்துதல் ஆகிய பலன்களும் யோகாவால் ஏற்படுவதைப் பார்க்கலாம். இதையெல்லாம் தாண்டி யோகாவின் முதன்மை பலனாக மன அழுத்தத்தை குறைக்கும் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டலாம்.
ஆதாரம் : “திட்டம்” மாத இதழ்
கருத்துகள் இல்லை