தக்கையின் மீது நான்கு கண்கள்
சா.கந்தசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதை
கிழவனும் சிறுவனும்
‘‘நான் ஒருமுறை எழுதிவிட்டு மீண்டும் படிக்கும்போது, அந்த எழுத்தில் இருக்கும் ஜோடனைகளை, கடினமான வார்த்தைகளை நீக்கி விடுவேன். மிக எளிமையான, நேரடியான பொருள் உணர்த்தும் வார்த்தைகளையே அதிகம் தெரிவு செய்வேன். எழுத்தில் இருக்கும் ஜோடனைகளை விட, என் எழுத்து வாசகப் பரப்பில் அதனுடைய கதைச் செறிவின் மூலம் ஏற்படுத்தும் அதிர்வே முக்கியமானது’’ என்பார் எழுத்தாளர் சா.கந்தசாமி.
அவர் தன்னுடைய எழுத்தின் வழியே வாசகப்பரப்பில் ருத்ரதாண்டவம் ஆடிய ஒரு சிறுகதைதான் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. இந்தச் சிறுகதையை வெகுசில மாற்றங்களுடன் குறும்படமாக எடுத்திருக்கிறார் திரைப்பட இயக்குனர் வஸந்த்.
குளங்களில், ஆற்றுப்படுகைகளில் மீன் பிடிப்பதில் வல்லவரான தாத்தாவுக்குத் துணையாக அவரது பேரனும் செல்கிறான். வெற்றிலை இடித்துத் தருவது, வலையை சீர்படுத்துவது, கண்ணியை சரி செய்வது போன்ற வேலைகளை பேரன்தான் பார்த்துக்கொள்கிறான். ஆனாலும், ‘தாத்தாவைப் போல தானும் மீன்பிடிப்பதில் வல்லவனாக வர வேண்டும்’ என்பதே அவனுடைய இலக்காக இருக்கிறது. சில நாட்களாக தாத்தாவின் தூண்டிலில் மீன்கள் சிக்குவதாகத் தெரியவில்லை.
தாத்தா எப்போதும் ஒரே இடத்தில் இருந்துதான் தூண்டிலை வீசுகிறார். ஆனால் பேரன், தூண்டிலை வேறொரு இடத்தில் இருந்து வீசுகிறான். பேரனின் தூண்டிலில் மீன் சிக்குகிறது. ‘‘ஒரே இடத்தில் இருந்து பிடித்து தான், உங்க தாத்தன் இந்த அளவுக்கு மீன் பிடிப்பதில் வல்லவனாக இருக்க முடிகிறது’’ என்று பெருமை பேசிக்கொண்ட தாத்தாவின் முகம் வாடி, பேரன் மீது வன்மம் வெடிக்கத் தொடங்குகிறது. போதாக்குறைக்கு பாட்டியும், ‘‘பேரன் பிடித்து வரும் மீனில் ஒரு தனி சுவை இருக்கிறது’’ என்று பெருமை பேசுகிறாள்.
ஆற்றிலிருந்து வஞ்சரம் மீன் ஒன்று நம்முடைய குளத்திற்கு வந்திருக்கிறது என்று ஒருநாள் ஆச்சரியமாக தாத்தாவிடம் தெரிவிக்கிறான் பேரன். அதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என தாத்தா சபதம் எடுக்கிறார். ‘‘உங்க அப்பனோ, நீயோ இந்த மீனைப் பிடிக்க முடியாது. என்னால் மட்டுமே முடியும்’’ என்று தாத்தா பெருமை பேசுகிறார்.
நாட்கள் ஓடியும் தாத்தாவால் அந்த வஞ்சரத்தைப் பிடிக்க முடியவில்லை; ஆனால் பேரன் பிடித்து விடுகிறான். தலைமுறை இடைவெளியால் எழுகிற எரிச்சலும், முதுமையின் இயலாமையும், பாசத்தைப் பொழியும் பேரன் மீதே வன்மத்தைக் கொட்ட வைக்கும் என்ற வாழ்க்கையின் நிஜத்தை உணர்த்தும் சிறந்த சிறுகதை இது.
எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி, புலிட்சர் மற்றும் நோபல் பரிசு பெற்ற ‘கிழவனும் கடலும்’ நாவலுக்கு மிக நெருக்கமான சிறுகதை இந்த ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. ஹெமிங்வேயின் நாவல் அனிமேஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தில் இருக்கும் அமைதியும், ஆழமான காட்சிகளும், இந்தக் குறும்படத்தில் இல்லையென்றாலும், தமிழ்க் குறும்பட வெளியில் இருந்த வெற்றிடத்தை இது அகற்றியிருக்கிறது.
சிறுகதையில் தாத்தாவின் மன இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை பெரிதுபடுத்தாமல், ‘இது மனித இயல்பு’ என்கிற விதத்தில்தான் அணுகியிருப்பார்கள். ஆனால் இயக்குனர் வஸந்த் இதைக் காட்சிப்படுத்துவதை ஒரு சவாலாக நினைத்திருக்கிறார்.
மனித மனதில் படிந்திருக்கும் ஆழ்மன குரூரத்தைக் காட்சிப்படுத்துவதிலும், சிறுகதையில் அதனைக் கையாள்வதிலும் மிகுந்த நிபுணத்துவம் தேவை. காரணம், மனித குரூரத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும்போது, அதை சமன் செய்யவேண்டும். பவா செல்லத்துரையின் ‘நீர்’ சிறுகதையில், கிணறு வெட்ட வரும் ஒரு குழுவின் தலைவன், வாங்கிய பணத்திற்கு வேலையை முடிக்காமல், வேறு ஒரு இடத்திற்குச் சென்று கிணறு வெட்ட ஆயத்தமாவான்.
ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளருடைய மனைவி, அரைகுறையாக வெட்டிய கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து வருவதைக் கண்டு மகிழ்ந்து, தன்னுடைய கைகளிலிருந்து தங்க வளையல்களைக் கழற்றி அவர்களுக்குப் பரிசளிப்பாள். அந்த நன்றியை மனதில் வைத்துக்கொண்டு, கிணறு வெட்டும் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண், ஒட்டுமொத்த வேலையை முடிக்காமல் இங்கிருந்து நகரக்கூடாது என்று கிணற்றுக்கடியில் ஒளிந்துகொள்வாள். ஒரு மனிதனின் குரூரத்தை வெளிப்படுத்தும் அடுத்த கணத்தில், அதனைத் தகர்த்தெறியும் மனித மனதின் மாண்பை பவா இந்தக் கதையில் பதிவு செய்திருப்பார்.
இந்தக் குறும்படத்தில் வஸந்த்தும், தாத்தாவின் குரூரமான மனநிலையைப் பதிவுசெய்து விட்டு, அடுத்த கணமே அவரது இளகிய மனதைப் பதிவு செய்திருப்பார். சிறுகதையில் இல்லாத ஒரு புதிய கதாபாத்திரமாக ‘தாயத்து’ என்கிற வஸ்து ஒன்றை குறும்படத்தில் இடைசொருகியிருப்பார்.
பேரன் எப்போதுமே தாத்தாவிடம், ‘‘இந்த தாயத்தை எனக்குக் கொடுத்து விடு தாத்தா... இது இருக்கிறதுனாலதானே நீ நிறைய மீன் பிடிச்சிக்கிட்டு வர்றே?’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பான். இறுதியில், தாத்தாவால் பிடிக்க முடியாத வஞ்சரம் மீனை பேரன் பிடித்துக்கொண்டு வரும்போது, அவன் மீது வன்மத்தை வெளிப்படுத்தும் தாத்தா, அவனது கன்னத்தில் அறைந்துவிடுவார்.
ஆனால் அன்று இரவே தன்னுடைய தாயத்தை, உறங்கும் பேரனுக்கு அருகில் கழற்றி வைப்பார். குரூரம் வெளிப்படும் அடுத்த கணமே, மனிதமும் வெளிப்பட வேண்டும் என்பதைத்தான் படைப்புகள் அனைத்தும் பார்வையாளனுக்கு சொல்ல விழைகின்றன. ஒரு சிறுகதையை காட்சி வடிவத்திற்கு மாற்றுவது அத்தனை எளிதானதல்ல.
சிறுகதையில் வரும் சில காட்சிகளை தேவையில்லையென்றால் விட்டு விடலாம். ஆனால் ஏதாவது ஒரு காட்சி ஒட்டுமொத்த படத்தின் தன்மைக்குப் பயன்படுமென்றால், அதனை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. வெற்றிலையை மெதுவாக எப்படி இடிக்க வேண்டும் என்று பேரனுக்கு தாத்தா சொல்லித் தருவார். ஆனால் பேரன் நேர்மாறாக, வேக வேகமாக இடித்துக் கொண்டிருப்பான்.
இதே காட்சியை தாத்தாவின் அலைபாயும், வன்மம் படிந்த மனதின் நிலையை வெளிப்படுத்த இயக்குனர் இன்னொரு இடத்தில் பயன்படுத்திருப்பார். வஞ்சரம் மீனை பிடிக்க தாத்தா மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் தோல்வியடைய, தன்னிலை மறந்து, சுயநினைவை இழந்து, தொடர்ச்சியாக வேக வேகமாக ஈட்டியால் குளத்தில் குத்திக்கொண்டே இருப்பார் தாத்தா.
நிதானம் என்பதை பேரனுக்குக் கற்றுக்கொடுத்த தாத்தா, தன்னுடைய நிதானத்தை இழக்கும் இந்த இடத்தில், பேரன் வேகமாக வெற்றிலை பாக்கு இடிக்கும் காட்சியை ‘இன்டர்கட்’ படத்தொகுப்பு உத்தியில் காட்டியிருப்பார்கள்.
சிறுகதையில் வார்த்தைகளால் அவரது பித்த நிலையை சா.கந்தசாமி விவரித்திருப்பார். குறும்படத் தில் வஸந்த் அதனை காட்சி மொழியில் அணுகியிருப்பார். இந்தக் குறும்படத்தின் ஆதாரமே, தாத்தாவாக நடித்திருப்பவரின் நடிப்புதான். கொஞ்சம் பிசகினாலும் நாடகத் தன்மையாக மாறிவிடும்;
இறுக்கம் தளர்ந்தால் கதையின் தன்மை பாதிக்கும். ஆனால் இறுக்கம் தளராமல், இயலாமையின் பிடியில் ஆழ்ந்திருக்கும் ஒரு வயதான பெரியவரின் மனநிலையை அப்படியே தன்னுடைய நடிப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் வீராச்சாமி. தாயத்தை பேரனிடம் கழற்றி வைக்கும் அந்த இரவுப்பொழு தில், தன்னுடைய இறுமாப்புகளை, திமிரை, அகங்காரத்தைக் கழற்றி வைத்த உணர்வை அவரது நடிப்பு, பார்வையாளனுக்குக் கடத்துகிறது.
தலைமுறை இடைவெளியால் எழுகிற எரிச்சலும், முதுமையின் இயலாமையும், பாசத்தைப் பொழியும் பேரன் மீதே வன்மத்தைக் கொட்ட வைக்கும் என்பது வாழ்க்கையின் நிஜம்!
இந்தியா முழுவதிலும் பதினான்கு மொழிகளிலிருந்து, பதினான்கு எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தெரிவு செய்து, அவற்றை படமாக எடுக்க பதினான்கு இயக்குனர்களை தூர்தர்ஷன் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது.
‘இந்தியன் க்ளாசிக்ஸ்’ என்கிற பெயரில் இந்தக் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. தமிழிலிருந்து சா.கந்தசாமி எழுதிய ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதையை இயக்குனர் வஸந்த் குறும்படமாக எடுத்திருக்கிறார்.
பதினான்கு குறும்படங்களில் இந்தப் படமே, ‘சிறந்த குறும்படம்’, ‘சிறந்த இயக்குனர்’ என்கிற பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், உலகம் முழுக்க பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, நிறைய விருதுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
படம்: தக்கையின் மீது நான்கு கண்கள் இயக்கம்: வஸந்த்
நேரம்: 21.40 நிமிடங்கள் கதை: சா.கந்தசாமி
ஒளிப்பதிவு: பிஜு விஸ்வநாத் படத்தொகுப்பு: சசி மேனன்
பார்க்க: https://www.youtube.com/watch?v=Yp2ohq3nmaA
கருத்துகள் இல்லை