' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தட்டி வான்

 



"தட்டி வான்"
-------------------

 
'தட்டி வான்' 
எங்கள் ஊர் 
எல்லைகளை 
தொட்டுச் 
செல்லும் 
'சிற்றி' வான்

அச்சுவேலி 
தொடங்கி
ஆவரங்கால் 
ஊடறுத்து 
'குரும்பசிட்டி'க்கு
கூடச் சென்று 

சில்லாலை, 
பண்டத்தரிப்பில் 
சிலிர்த்து நிற்கும்

'கொத்தியாலடி' 
ஆசுப்பத்திரிக்கும் 
'கூத்தஞ்சிமா' 
சந்தைக்கும் 
அத்தனாசியாரின் 
'சித்த' 
வைத்தியசாலைக்கும் 
சிறப்பான 
சேவை செய்யும்

காலைப் பொழுது 
'தெல்லிப்பளை'யில் 
'கரிக்கோச்சி'
இரயிலின் 
வருகைக்காய்
'படலை' ஓரம் 
பார்த்து நிற்கும்

விவசாயிகளின் 
விளைச்சல்களை 
சலிக்காமல் 
சுமந்து செல்லும்

இரயிலடி அம்மனையும் 
'தவளக்கிரி'முத்துமாரியையும 
தப்பாமல் தரிசிக்கும்

'அம்பனை' 
சந்தியில் 
அளவோடு 
ஓய்வெடுக்கும்

'முருகன் விலாஸ்'
தேனீர் கடையும் 
சாரதிகளை
சந்திக்கும்

'கும்பிளாவளையான்'
திருவிழாவிற்கு 
கூட மாடாய் 
உதவி செய்யும்

பண்டத்தரிப்பு 'பாண்' 
பேக்கரிக்கும் - இதன் 
பங்களிப்புண்டு

பள்ளித்
தோழர், தோழிகளை 
பக்குவமாய் 
காவிச்செல்லும்

ஓடிப் பாய்ந்தேறி 
ஒற்றைக்கால் 
ஊன்றி 
ஒற்றைக்கை 
ஏந்தி 
வாசல் கதவோரம் 
தொங்கிச் 
செல்கையில்
எதிர்க்காற்று 
முகத்தை 
தடவிச் செல்ல 
எண்ணங்கள் 
வண்ண வண்ண
சிறகடிக்கும்

'ஒருதலை ராகம்' 
'அலைகள் ஓய்வதில்லை' 
'உயிர் உள்ளவரை உஷா'
'பயணங்கள் முடிவதில்லை' 
பாடல்கள் ஒலிக்கையில் 
பயணங்களின் சிந்தனையை
சிதறவிடும்

இறங்கும் இடம் 
தவறி விடும்

தூரத்தே வரும் 
'உறுமல்' 
ஒலிகேட்டு 
வயல்வெளி 
வரம்புகள் ஊடே 
வழுக்கி 
விழுந்தெழும்பி
ஓடிவரும் 
கமக்காரர்களுக்காய் 
காத்திருக்கும்

எங்கள் 
கல்லூரி வாசலில் 
'கடலை' விற்கும் 
'இலட்சுமி' ஆச்சியின் 
நாளாந்த 
பயண ஊர்தியும் கூட

வாழ்வோடு 
ஊன்றிய 
விழாக்களுக்கு 
உலாப்போகும் 
'தங்க இரதம்'
எங்கள் தோழன் 
ஏழைகளின் தோழன்.

- இ.ஜெயக்குமார் -
(Scotland

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...