' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பன்னாட்டுத் தாய்மொழி நாள் இன்று 21.02.2021

 

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) 21.02.2021இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாஹக்காவில் (Dhaka) வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடாத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

ஷாஹீத் மினார் (Shaheed Minar) எனப்படும் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக  டாஹக்காவில் (Dhaka) அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ (UNESCO)) அமைப்பின் 21.02.1999 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை பன்னாட்டுத் தாய்மொழி நாளாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நாளில் எமது தாய் மொழி தமிழை கவிஞர் காசி ஆனந்தன் கவிதை பாடிக் 

கொண்டாடுவோம்.

 


கவிஞர் காசி ஆனந்தன்

தமிழே! உயிரே!

தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!

தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!


அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!

தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!
 

அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?

தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்

அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!

தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!

அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!

 


 

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...