' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி

 

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் மலையக மாணவிக்கு கிடைத்த கௌரவம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு மலையகத்தை சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் நாளையும் நடைபெறுகின்றது.

24.02.2021 இன்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

இதன்மூலம்  அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு  யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் முன்னைய ஆண்டு யாழ்ப்பாணம் கோண்டாவில் குமரகோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொண்ட  செல்வி முனியப்பன் துலாபரணியுடனான கருத்துப் பகிர்விலிருந்து……,

“எனது பெயர் முனியப்பன் துலாபரணி. எனது சொந்த ஊர் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமம் ஆகும். எனது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நான் ஆரம்பக் கல்வியை மாத்தளை இந்து தேசிய கல்லூரியிலும், தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியில் கல்வி கற்றேன்.

உயர் தரத்தில் 1A, 2B ஐ பெற்றுக் கொண்ட நான், எனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தெரிவே அமைந்தது. வரலாறு மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற நான், இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாக பயின்றேன். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.

எமது பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் என் மனதில் எழவே செய்தது. ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அவ் அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.

செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் கமரா மீது கொண்ட ஆர்வமே என்னைத் தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியது எனலாம். முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற நாம், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டோம்.

சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழிற்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும். ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழிற்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தது.

பாட திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் நாம் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது. இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அதிகமானது என்றே கூறலாம். ஊடகத் துறையில் எழுத்துத்துறைச் சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவாக உள்ளது. அன்று எமக்கு வழிகாட்டிகளாக இருந்த எமது ஊடகக் கற்கைகள் துறை சகோதர சகோதரிகள் பலர் இன்று இலங்கையில் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றமை எங்களுக்கும், எமக்கு அடுத்தபடியாக உள்ள சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நம்பிக்கையளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி எம்மை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு. யூட் தினேஸ் கொடுதோர், திருமதி. பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோருக்கும் மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

 மீள்பதிப்பு: நன்றி குருவி.lk

 

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...