' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

யாழ் பொது நூலகம்

 தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய 

யாழ் பொது நூலகம்

 


 

தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய காலம் அது.

பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த எமது பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும், கல்வியிலும் முக்கியம் வகிக்கும் யாழ் பொது நூலகம் பற்றி ஒரு நோக்கு..

நூலக வரலாறு

இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பான நீதிமன்றத்தில் கரியதரிசியாக இருந்தவர். அதாவது சக்கடத்தார். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில் சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளர்ந்துள்ளது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில் 1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது.

இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது. அன்றைய காலத்தில் அது ஒரு பெரிய மூலதனம் தான். இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடக அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 01-01-1935 இல் வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.

யாழ்ப்பாண பொது நூலகம் கட்டிடம்

 சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.

நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல்நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.

பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.1959ல் அதி விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.

பொது நூலகம் எரிப்பு.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்.

1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது. (இன்று 2020 – 39 ஆண்டுகள் கடந்தது). இது 20ம் நூற்றாண்டின் இன நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார். நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவையே!

 

 இத்தகவல் பின்வரும் இணையத்தளத்திலிருந்து பதிவுசெய்யப்பட்டது.

ttps://newuthayan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/ 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...