' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மரங்களைப் பாடுவோம்

 

மரங்களைப் பாடுவோம்

இராஜபாளையம் உமாசங்கர் 

கவிஞர் ஏகாதசிமரங்களைப் பாட மறந்துவிட்டோம்
அதன் மடியினில் தூக்கம் தொலைத்து விட்டோம் (2)

ப‌றவைக்கெல்லாம் ஒரு கூடு
மனிதருக்கோ அது வீடு (2)

மரங்களைப் பாடுவோம் (4)

ஆதியில் மனிதனுக்கு ஆடைகள் தந்ததும் மரமே!
சாதிகள் அற்ற சமத்துவ ஜீவனும் மரமே!

தீக்குச்சி, காகிதம், கதவும் தந்தது
காய்களும், கனிகளும், பூக்களும் தந்தது

தொட்டில் கட்டி குழந்தையைத் தூங்க வைக்கலாம்.
முட்டியிட்டுக் குருவிகள் அடையும் காக்கலாம்

கிளையில் அமரும் பறவையிடம் வாடகை வாங்காது
மரம் சுள்ளி பொறுக்கும் கிழவியிடம் விலையும் பேசாது

மரங்களைப் பாட மறந்துவிட்டோம்
அதன் மடியினில் தூக்கம் தொலைத்து விட்டோம்
ப‌றவைக்கெல்லாம் ஒரு கூடு
மனிதருக்கோ அது வீடு

மரங்களைப் பாடுவோம் (4)

கிளையாய்க் கைநீட்டி மழையைப் பறிப்பதும் மரமே!
அலைகடல் மேலே உழைப்பவர் சுமப்பதும் மரமே!

குடைபோல் விரிந்து நிழல் தந்து காக்கும்
தடைகளைத் தாண்டி போராடித் தழைக்கும்
காலடியில் உட்கார்ந்தால் கதைகள் பேசும்
காற்றோடு சேர்ந்து கவிதைகள் பாடும்

குட்டிககுட்டி மரங்களெல்லாம் குழந்தை தானப்பா
நீ வெட்டுகின்ற மரங்கள் உந்தன் அம்மா தானப்பா

மரங்களைப் பாட மறந்துவிட்டோம்
அதன் மடியினில் தூக்கம் தொலைத்து விட்டோம் 

ப‌றவைக்கெல்லாம் ஒரு கூடு
மனிதருக்கோ அது வீடு

மரங்களைப் பாடுவோம் (4)


மரங்களைப் பாடுவேன்

கவிஞர்வைரமுத்து 
வாரும் வள்ளுவரே
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?

வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அத்தனை இழிவா?

பக்கத்தில் யாரது
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?

மரம்
சிருஷ்டியில் ஒரு சித்திரம்
பூமியின் ஆச்சரியக்குறி
நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்

விண்மீனுக்குத் தூண்டில்போடும்
கிளைகள்
சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்
உயிர் ஒழுகும்
மலர்கள்
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு

மனிதன் தோன்றுமுன்
மரம் தோன்றிற்று
மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்

மனித ஆயுள்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்
மரம் அப்படியா..?
வளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்

மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி
மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்
வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?

மரத்தை அறுத்தால்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்
மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்

மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்
நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?

மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?

மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?

பறவைக்கும் விலங்குக்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?

மனிதனின் முதல் நண்பன்
மரம்

மரத்தின் முதல் எதிரி
மனிதன்

ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்

உண்ணக்கனி - ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்

பிறந்தோம்
தொட்டில்
மரத்தின் உபயம்

எழுதினோம்
பென்சில் பலகை
மரத்தின் உபயம் மணந்தோம்
மாலை சந்தனம்
மரத்தின் உபயம்

புணர்ந்தோம்
கட்டில் என்பது
மரத்தின் உபயம்

துயின்றோம்
தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்

நடந்தோம்
பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்

எரிந்தோம்
சுடலை விறகு
மரத்தின் உபயம்

மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்

மனிதா
மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா

ஒவ்வொரு மரமும்
போதிமரம்

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...