' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பெண்ணுறுப்பில் திணிக்கப்படும் ஆதி அரசியல்..! - ஒரு வலி நிரம்பிய கடிதம்

 


பெண்ணுறுப்பு இருப்பதால்... அதில் பயம், எச்சரிக்கை, ஒழுக்கம், அதிகாரம், ஒடுக்குமுறை என அத்தனையும் பிணைக்கப்பட்டு நடமாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தி பேசுகிறேன். இதை, உங்களைப் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தாலும் அதைவிடப் பலமடங்கு இத்தனை ஆண்டுகளில் நாங்கள் புண்பட்டிருக்கிறோம் என்பதை, இதைப் படிக்கும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைத் திணிக்கும் ஆண்களைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கத் தோன்றுகிறது, நீங்கள் எப்படி இரவுகளில் தனியே தைரியமாக நடமாடுகிறீர்கள்? உங்களுக்கு, உங்கள் பிறப்புறுப்புகளில் இரும்புக்கம்பிகளால் செருகப்படும் பாதிப்புகள் எதுவும் இல்லையா? அப்படிச் செருகப்பட்டால் உயிரைக் குடிக்கும் அந்த வலி எப்படியிருக்கும் என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால், எங்களுக்கு ஏன் அப்படியான சாபங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆறு வருடங்களுக்கு முன்பு என்னைப் போன்ற சக மனுஷி ஒருத்தி டெல்லியில், இரவில் அதுவும் தனியாகக்கூட இல்லை, நண்பனுடன்தான் ஒரு பேருந்தில் ஏறிப் பயணம் செய்தாள். அவளை அதே பேருந்தில் இருந்த ஆறு ஆண்கள் கூட்டாகப் பாலியல் வன்புணர்வு செய்து அந்த நண்பனைத் தாக்கிவிட்டு இருவரையும் பேருந்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டுக் கடந்தார்கள். வன்புணர்ந்தவர்களில் ஒருவன் மைனர். வன்புணரப்பட்ட அந்தப் பெண்ணின் குடல், இரும்புக்கம்பியால் இழுக்கப்பட்டு வெளியே கிடந்தது. அடுத்த 13 நாள்களில் மருத்துவச் சிகிச்சைப் பலனின்றி அவள் இறந்ததாக அறிவிக்கப்பட்டாள். ‘நிர்பயா’ என்று பெயரிடப்பட்டு கெளரவிக்கப்பட்டாள் அந்தச் சக மனுஷி.  அவள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சூழலில் அரசைச் சேர்ந்த சிலராலேயே, ''பெண்கள் எப்படித் தைரியமாக இரவில் உலாவலாம்? அதுவும் ஓர் ஆணுடன்... அதனால்தான் அவள் வன்புணரப்பட்டாள்” என்று இரக்கமற்ற விளக்கங்கள் அந்த ஆறு பேரின் செயலுக்கு அளிக்கப்பட்டது. பெண் இரவில் உலவலாமா... வேண்டாமா என்னும் வாதம் ஒருபக்கம். மறுபக்கம், பெண் இரவில் உலாவினால் அவளது பிறப்புறுப்பில் வன்மத்தைச் செலுத்த வேண்டும் என்கிற கொடூர எண்ணம் எப்படி உருவானது?

உலவாமல் வீட்டில் இருந்தாலும் அதே நிலைதானே? அதற்கு என்ன விளக்கத்தை உங்களால் அளித்துவிட முடியும்? இந்நேரம் கேரளத்தின் ஏதோ ஒரு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடிக்கொண்டிருக்க வேண்டிய ஜிஷாவின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தது அவளது வீட்டில்தான். இதோ தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி தனம், தற்போது பிறப்புறுப்பில் இரண்டு தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அவளது உள்ளாடைகள் ரத்த வெள்ளத்தில் கிடக்க... அவள் மீட்கப்பட்டதும் அவளது வீட்டிலிருந்துதான். புது டெல்லியைச் சேர்ந்த எட்டுமாதக் குழந்தை சுட்கி தனக்கு ஏற்பட்ட வலியைச் சொல்லக் கூடத் தெரியாத சூழலில் கதறி அழுதபடி வீட்டில்தான் கிடந்தாள். ஜிஷாவுக்கும் தனத்துக்கும் உள்ள ஒற்றுமை, இருவரும் பெண்கள்..இருவருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே ஒடுக்கப்பட்டவர்கள் மீதான உச்சகட்ட ஆதிக்கமாகத்தான் பெண்களின் பிறப்புறுப்புகளில் வன்மம் திணிக்கப்படுகிறது. தனத்தைத் தாக்கி வன்புணர்ந்தவர்கள் உயர்சாதியினர் என்று கூறப்படுகிறது. மற்றொருபக்கம் இல்லை தலித்கள்தாம் என்றும் சொல்லப்படுகிறது, உண்மை சரிவரத் தெரியவில்லை. தெரியவராமலேகூடப் போகலாம். ஆனால், வன்புணர்ந்த அந்த ஆணின் (ஆண்களின்) மூளைக்கு இங்கே கீழானதும் ஒடுக்கக்கூடியதும் பெண்ணின் பிறப்புறுப்புதான் என்று பதியப்பட்டிருப்பது எந்த வகையிலான நியாயம்? இங்கே உயர்ந்தவர்கள்... தாழ்ந்தவர்கள்... என எத்தனை பிரிவுகள் இருந்தாலும், அவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாகப் பெண்களாகிய நாங்கள் மட்டுமே இருக்கிறோம். எங்கள் பிறப்புறுப்புகளால் ஒடுக்கப்படுகிறோம். இது மட்டுமே நிதர்சனம். சக உயிரின் உறுப்பினைச் சிறுமைப்படுத்தித்தான் உங்களது அரசியலையும் அதிகாரத்தையும் ஆசைகளையும் வளர்த்தெடுத்துக்கொள்ள வேண்டுமா? அதிகாரம் என்ன செய்தது என்று கேட்காதீர்கள்? வாட்ஸ்அப்பும் முகநூலும் இல்லாத காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வாச்சாத்தி கொடூரத்தை நான் உங்களுக்கு உதாரணமாகச் சொல்வேன். வாச்சாத்தியில் உள்ள எம் பெண்களுக்கு தாங்கள் காவல் நிலையத்தில்வைத்து அதிகாரத்தின் பெயரால் வயது வித்தியாசமில்லாமல் வன்புணரப்பட்டதுதான் 25 வருடங்கள் கடந்து இன்றளவும் நினைவில் இருக்கிறது. அதே அதிகாரம் அமைத்த  ஆயுதப்படை, சிறப்பு அதிகாரச் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டுதான் வட கிழக்குப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்தது. தங்களுக்கு இழைக்கப்பட்ட வலிமிக்க அநீதிக்கான நியாயத்தை இன்றளவும் பெறமுடியாமல் அதிகாரத்திடம் தோற்றார்கள் எம் பெண்கள். 

நான், எம் பெண்கள் என்று மீண்டும் மீண்டுமாகப் பதிவதற்கும் காரணம் இருக்கிறது. இங்கே சிறுகிராமத்தில் இருந்தாலும், எல்லை தாண்டிய ஏதோ ஒரு நாட்டில் இருந்தாலும் யோனி என்பது எங்கள் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதன்மீது அத்தனை வன்மங்களைத் திணிப்பவர்களும் ஆண்களாகவே இருக்கிறார்கள். இந்தச் சூழலில் எம் பெண்களை இப்படியான வார்த்தையில்லாமல் வேறு எதன் வழியாக என்னால் அரவணைத்துக்கொள்ள முடியும்?

18 வயதான ஈராக்கைச் சேர்ந்த நிகாத் என்னும் பெண், கடந்த பதினைந்து மாதங்களுக்கு முன்பு பாலியல் கொத்தடிமையாக ஐ.எஸ்.ஐ.எஸுக்கு விற்கப்பட்டாள். அதிலிருந்து எப்படியோ தப்பித்து வெளியேறிய நிகாத், இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த ஈராக்கியர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர், “நான் எப்படியோ அந்தக் கொடூரர்களிடமிருந்து தப்பிவிட்டேன், என்னுடைய 13 வயது தங்கை எனக்கு அடுத்த அறையில் கிடத்தப்பட்டு வன்புணரப்பட்டபோது அவள் கதறிய ஓலம் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவள் தற்போது உயிரோடு இருக்கிறாளா என்று தெரியவில்லை. ஆனால், அவளைப் போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் இப்படியான கொடுமைகளுக்குப் பதிலாக உயிர் துறப்பதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எங்கள் பெண்களில் பலர் பாலியல் வன்புணர்விலிருந்து தப்பிக்க கூர்மையான பிளேடுகளால் தங்களது மணிக்கட்டை அறுத்துக்கொள்வதையும் கட்டடங்களின் உச்சியிலிருந்து குதித்து உயிர் துறப்பதையும் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்றார். அந்த யோனி, எங்கள் உடலில் இருப்பதுதான் தவறென்றால்... அதற்கு தண்டனையாகப் பெண்கள் நாங்கள் உயிரைத் துறக்க வேண்டுமா? 

’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னைக் கொளுத்துவோம்’ என்றார்கள். நிர்பயா, ஜிஷா, ஹாசினி, நந்தினி, மணிப்பூர் மற்றும் வாச்சாத்தி பெண்கள், ஈராக்கியப் பெண்கள், இதோ இன்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிறுமி தனம் என பிறப்புறுப்பால் தினமும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களின் சாட்சியாகவும் கேட்கிறேன், எங்களை இழிவுசெய்து கொல்லும் மடமையை என்ன செய்ய? 

இறுதியாக,

நான் என்பது நாளை இல்லாமற் போகலாம்.

வன்புணர்தல் விதிகளுக்கு பலியாகி இருக்கலாம்.

 

என் அப்பாவின் செல்லப்பெண் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

சுதந்திரம் எனக்குப் பிடித்தமென்று அறிந்திருக்க அவசியமில்லை. 

என் காதல் கதையை அறியப்போவதில்லை. 

சிறுமியா... கிழவியா எதுவும் தேவையில்லை. 

மரத்தடியில் சிறுநீர் கழிப்பது நீ சிதைக்கும் அளவுக்கான தவறில்லை.

என் கரு சுமக்கும் சிசு பற்றி உனக்குக் கவலையில்லை. 

என் பிள்ளையின் பசிபோக்கச் சோறு தந்தேனா? 

நீ எண்ணப்போவதில்லை... 

தேவை, உனக்கு என் பெண்ணுறுப்பே என்றபோது.  

உன்னால், 

நான் என்பது நாளை இல்லாமல் போகலாம் 

அதற்கு முன் இதைத் தெரிந்துகொள்,

என் இரவு பயணங்கள் நீ புணர்ந்து கொல்ல அல்ல,

எனைச் செதுக்கும் எனக்கான விடியல்களைத் தேடி.

என் சதைப் பிண்டம் உன் ஆதிக்கவெறிக்கு அல்ல, 

என் உடைகள் உன் வன்மத்துக்கானதல்ல,  

 

லட்சம் கனவுகளும், 

கோடிக் கொள்கைகளும்,

எட்டாம் வகுப்பானாலும் எனக்கும் உண்டு புரிந்துகொள்,

உடலை ஒடித்தாலும் உயிரை மட்டும் விட்டுவிடு, 

என் கனவுகளாவது சிறகுடன் இருக்கட்டும்.

உறைந்த உதிரம் நாளை உன் பெண்ணையேனும் காக்கட்டும்.

ஆண்பாலே, 

எம்மை அடக்கிவிட வன்புணரத் தேவையில்லை 

அன்பு செய் போதுமென்பேன், 

இந்த உலகை அடக்கிவிட அன்பு செய் போதுமென்பேன்!

இவள், 

பெண் 


https://www.vikatan.com/social-affairs/women/117687-an-open-letter-on-the-continuing-oppression-of-women-in-the-name-of-sexual-abuse

நன்றி: ஆனந்த விகடன் 

ஐஷ்வர்யா

மக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை!

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...