' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்


ஜே கிருஷ்ணமூர்த்தி

(11.05.1895 – 17.02.1986)

 

ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார்.

எந்தவிதமான ஆளுமையும் ஆதிக்கமும் மிடுக்கும் இல்லாத இவரது நேர்கொண்ட பேச்சு கேட்பவர் நெஞ்சில் கருத்தூன்றி சிந்திக்கத் தூண்டியது. அதனால் மதங்களின் மீது நம்பிக்கை இழந்து மன விடுதலை தேடிச் சோர்ந்தவர்களுக்குப் புத்துணர்வூட்டும் அருமருந்தாக ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் விளங்கின.

ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கைக் குறிப்பு

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 1895-ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள மதனபள்ளியில் பிறந்தார். இவரது பன்னிரண்டாம் வயதில் அன்னி பெசந்த் அம்மையாரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார். 1929-ம் ஆண்டு, உலக வழிகாட்டி என்னும் பெரும் பதவியையும், அன்னி பெசந்த் அம்மையாரால் அவருக்கென எழுப்பப்பட்ட ஆன்மிக நிலையத்தையும் கிருஷ்ணமூர்த்தி துறந்தார்.

உண்மையைப் பிறர் வாயிலாக அறிதல் முடியாது; உண்மையை அடையப் பாதையொன்றும் இல்லை. உண்மை அனுபவத்தை எக்காலத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் வெளியிட முடியாது . அப்படி வெளியிட முற்பட்டால் அது உண்மை அனுபவமாக மலராது. இவ்வனுபவத்துக்கான காரணத்தைத் தான் வெளியிட முடியுமேயன்றி, உண்மை அனுபவத்தை வெளியிட முடியாது என்ற பேருண்மையை உணர்ந்து சுதந்திரமான சிந்தனை முறையைப் போதித்தார்.

கிருஷ்ணமூர்த்தி புத்தக அறிவு நிரம்பப் பெற்றவரோ எந்தவொரு பல்கலைக்கழகப் பட்டதாரியோ அல்லர். எனினும் ‘வாழ்க்கை’ என்னும் அழியாத, ஒப்பற்ற நூலிலிருந்து தம் அறிவையும் பண்பையும் பெருக்கிக் கொண்டவர் அவர். பல்லாயிரக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களது மனம், எண்ணம், செயல் ஆகியவற்றை அணுகி நின்று உரைநடத்தினார். யார் பிரச்சினைக்கும் போலியான ஆறுதல்மொழி கூறாமல், பிரச்சினையைச் சரியான கண்ணோட்டத்தில் பார்த்து அதன் தன்மையைக் கண்டறிந்து களையுமாறு அறிவுறுத்தினார்.

ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள்

கவனிப்பவரும் கவனிக்கப்படுவதும் ஒன்றே (Observer is the observed)

நாம் ஒரு மரம் அல்லது மலரைப் பார்க்கும்போது உண்மையாக அவற்றைப் பார்ப்பதில்லை. மரம் அல்லது மலர் என்ற சொல் உருவாக்கியுள்ள உருவகத்தையே பார்க்கிறோம். அவ்வாறு மேம்போக்காக நோக்காமல், ஒரு மரத்தை, விருப்பு வெறுப்பில்லால், அதைப் பற்றிய நமது கருத்து என்பது இல்லாமல், நமது மொத்த ஆற்றலுடன் கவனித்துப் பார்க்கும்போது, கவனிப்பவர் என்றொருவர் இல்லை என்பதையும், அங்கிருப்பதெல்லாம் கவனம் மட்டுமே என்பதையும் கண்டு கொள்ளலாம். கவனக் குறைவிலேதான், கவனிப்பவர், கவனிக்கப்படும் பொருள் என்ற இருமைக்கு இடம் உண்டு. ஒரு பொருளை நமது முழுமையான கவனத்துடன் உற்றுப் பார்க்கின்ற போது, கவனிப்பவருக்கும் கவனிக்கப்படும் பொருளுக்கும் நடுவே இடைவெளி இருக்காமல் அவை இரண்டும் ஒன்றே என்னும் உண்மை புலப்படும்.

இதேபோல், எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும், அந்தப் பேச்சை மிகுந்த கவனத்துடன், எந்தவித முன்கருத்தும் இல்லாமல், கேட்டோமானால் நம் மனம் இடும் திரை விலகி உள்ளதை உள்ளதாகக் காணவும் கேட்கவும் தெளிவு பிறக்கும்..

நீதான் உலகம் (You are the world)

உலகில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உள்ளுணர்வு ( basic consciousness ) என்பது ஒன்றே. நம்மைப்போல் மற்றவர்களுக்கும் கோபம், தனிமை, கவலை போன்ற உணர்வுகள் இருப்பதனால், நாம் அனைவரும் உள்ளுணர்வால் ஒன்றாகிறோம். அதனால் நாம்தான் உலகம் என்னும் உண்மையை உணர்தல் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஒரு தனி மனிதன் கொள்ளும் வன்முறை எண்ணமும், காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும், பிரிவினைவாதமும் இங்கு யாவர்க்கும் பொதுவாக இருக்கும் உள்ளுணர்வில் சென்று கலந்து அதை மாசுபடுத்தி விடுகிறது. அதேபோல், நம் மனத்தில் உதிக்கும் ஒவ்வொரு நல்ல எண்ணமும் அந்த உள்ளுணர்வுக் கடலில் (Sea of consciousness) சென்று சேர்ந்து அதை வளப்படுத்துகிறது. எனவே, இந்த பொது உள்ளுணர்வை மாசுபடுத்தாமல் காப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் பொறுப்பாளி ஆகிறான்.

அறியப்பட்டவற்றிலிருந்து விடுதலை (Freedom from the known)

நம் இனம், மரபுமுறை, சுற்றுச் சூழல் போன்ற பல விஷயங்களின் பாதிப்பால் விளைந்த கடந்த கால அறிவின் துணைகொண்டே நம் நிகழ்காலச் செயல்களை நடத்துகிறோம். கடந்த கால அறிவு என்பது ஒரு கட்டுண்ட(conditioned) அறிவே ஆகும். நான் கிறிந்தவன், இந்து, புத்த மதத்தான் என்று நம்மை நாமே குறுகிய வட்டத்துக்குள் முடக்கி வைத்துக்கொண்டு இந்த குறைபட்ட பார்வையுடனே செய்யும் எந்தச் செயலும் அதைப்போலவே குறையுள்ளதாக இருக்கும். ஒரு பொருளை எந்த ஒரு முன்கருத்தோ முன் அபிமானமோ இன்றி அப்பொருளைப் பற்றி முன்னர் அறிந்த தகவல்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு புதிதாக நோக்கினால்தான் அந்தப் பொருளின் தற்போதைய நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க நம்மால் முடியும்.

கடந்த கால அறிவு என்னும் திரைக்குள் இருந்து ஒரு பொருளைப் பார்த்தால், நாம் அந்த பொருளை உண்மையில் பார்ப்பதாக அர்த்தமாகி விடாது; முன்கூட்டியே சேகரித்து வைத்திருந்த அறிவின் துணைகொண்டு பார்க்கும்போது அந்தப் பொருளின் மனப்பிம்பத்தை மட்டுமே காண்கிறோம்; அந்த பொருளின் நிஜத்தை அல்ல. எனவே நாம் அறிந்த அறிவிலிருந்து நாம் விடுபட்டால் ஒழிய நம் வாழ்வின் பிரச்சனைகளை ஒவ்வொரு நிமிடமும் புதிய பார்வையோடு அணுக முடியாது..தெளிந்த அறிவு என்பது ஒவ்வொரு நொடியும் தன்னைப் புதுப்பித்துக் கொண்ட இருக்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் மனத்துக்குள் என்றும் நிகழ்ந்துகொண்டிருந்தால் அன்றலர்ந்த மலர் போல நம் வாழ்க்கை செழிக்கும்.

கடவுள் என்று ஒன்று உண்டா? (Is there a God?)

மனிதன் நிலையற்ற தனது வாழ்வுக்கு மாறாக நிலையான ஒன்றைத் தேட முயல்கிறான். அத்தகைய முயற்சிகளால் தெய்வங்களைப் படைத்து வருகிறான். தன்னுடைய சொந்த உருவத்துக்கேற்பவும், கற்பனைக்கேற்பவும், தன்னுடைய குறுகிய எல்லைக்கேற்பவும், அச்சங்கள்,வேதனைகள்,நம்பிக்கைகள் போன்றவற்றுக்கேற்பவும் பல உருவங்களையும் குறியீடுகளையும் உருவாக்கியவண்ணம் மனிதன் இருந்து வந்துள்ளான். உருவத்தைப் புனைந்து உருவாக்கி, அதனை வணங்கத் தொடங்கினான். மரணத்திலிருந்தும், வானத்தின் தாக்குதல்களிலிருந்தும் தனக்கொரு பாதுகாப்பைக் காணவேண்டி, அந்த உருவத்திடம் தவறாது சென்றுவந்தான்.

நம் வாழ்வின் துயரத்துக்கான பதிலைக் காண முடியாதபோது, மெய்யுணர்வினைப் பெறுவதில் கவனம் செலுத்தாமல், நம் முன்னோர்கள் உருவாக்கிய கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று தஞ்சமடைகிறோம். இதிலெல்லாம் பொருளேதும் இல்லை.

கடவுள் என்று ஒன்று உண்டா என்று கண்டறிய, நம்பிக்கையும் அதற்கு எதிர்மறையான அவநம்பிக்கையும் தடையாகவே உள்ளன. எனவே அவற்றை முதலில் விலக்கி வைத்து விட்டு இந்தக் கேள்வியை அணுகவேண்டும். நம்பிக்கையிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டால் தான் இந்த விஷயத்தை மனம் உற்று நோக்க முடியும். ஏனென்றால், நம் மனத்தின் கண்ணை நம்பிக்கை என்னும் திரை மூடி உண்மையைச் சரியாக நோக்க முடியாதபடி செய்துவிடும். அதே போல், அவநம்பிக்கையும் நம் கவனிப்பைத் தடுக்கும்.

நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா நம்பவில்லையா என்பதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. உங்கள் கடவுள் நம்பிக்கை என்பது நீங்கள் வயக்கப்பட்டிருப்பதன் விளைபொருளேயாகும் (Result of your conditioning).

இதைப் புரிந்து கொண்ட பின், ‘கடவுள் உண்டா?’ என்ற கேள்விக்கு ஒரு புதிய அர்த்தம் பிறக்கிறது. ‘கடவுள்’ என்ற சொல் கடவுள் அல்ல; அது வெறும் வார்த்தை தான்; அந்த வார்த்தை நிஜக்கடவுள் ஆகிவிட முடியாது. ‘கடவுள்’ என்ற வார்த்தையையும் அதன் தொடர்புடைய சம்பிரதாயம், பூசைகள், கோட்பாடுகள், உணர்வுபூர்வமான அனுபவங்கள் போன்றவற்றை விலக்கி வைத்த பின்னரே இந்தக் கேள்விக்குண்டான பொருளை உற்று நோக்க முடியும்.

‘கடவுள்’ என்ற வார்த்தை எந்த ஒரு நிஜமான பொருளையும் சுட்டிக் காட்டுவதாக இல்லாததால், அச்சொல் பலரால் பல விதமாகக் கற்பனை செய்யப்பட்டு தத்தம் கலாச்சாரத்துக்கேற்ப உருவகப்படுத்தப்படுகிறது. மதவாதிகள் கோவில், சிலை, மற்றும் புனித நூல்களைக் கொண்டு தாங்கள் உருவாக்கிய இந்தக் கற்பனையைத் தாமே வழிபடுகின்றனர். அறிவாளிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்களோ தங்கள் கோட்பாடுகளைப் பெரிதென நம்பிப் போற்றுகின்றனர்.

‘கடவுள்’ என்ற வார்த்தையும் அந்த சொல்லால் தோற்றுவிக்கப்படும் உருவகமும் வெறும் கற்பனையே என்றால், புனிதம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. கற்பனைகளெல்லாம் நீங்கினால் கிடைக்கும் தெளிவில் உள்ளதை உள்ளபடி காண முடியும். அந்த நிலையில் ‘நான்’ என்ற நினைவு அறவே நீங்கி அன்பு மட்டுமே இருக்கும். அத்தகைய கற்பனையற்ற தெளிவையே புனிதம் எனலாம். அதையே கடவுள் அல்லது மற்ற பிற சொற்களால் குறிப்பிடலாம்.

தேர்வற்ற விழிப்புணர்வு (Choiceless awareness)

ஒரு பிரச்சினை தீர முழுமையான கவனத்தை நாம் செலுத்த வேண்டும். ‘நான்’, ‘எனது’ என்னும் மையத்தில் நம்மைச் சுற்றி ஒரு குறுகிய வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு எந்த பிரச்சினையையும் பார்த்தால் அது முழு கவனம் ஆகாது. ‘நான்’ அற்ற நன்னிலையில், தன் முனைப்பு (Effort) இல்லாமல் பார்த்தால் தான் ஒரு பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய முழு ஆற்றல் நமக்கு வாய்க்கும்.

நம் கண்முன் நிகழும் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, இது முக்கியம், அது முக்கியமல்ல, இது தேவை, அது தேவையல்ல, இது வேண்டும், அது வேண்டாம் என்று வகைப்படுத்திப் பார்ப்பதால் கவனம் சிதறுகிறது. அவ்வாறு இது நன்று அது தீது என்று தேர்ந்தெடுத்து நோக்காமல், மன ஒருங்கிணைப்போடு எல்லாவற்றையும் முழுமையாக நோக்கினால் பிரச்சினையின் செயல்பாட்டை நாம் முற்றும் உணர முடியும்.

எனவே ஒரு பிரச்சினையைத் தனித்து நோக்காமல், தேர்வற்ற விழிப்புணர்வுடன் பார்த்தால், அதைத் தீர்க்க உதவும் நுண்ணறிவு (Intelligence) தானே தோன்றும். அந்த நுண்ணறிவினால் பிரச்சினைகள் கரைந்து போகக்கூடும்.

தியானம் என்றால் என்ன ( What is Meditation)

தியானம் என்பது ஒரு மூலையில் அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு நம் கவனத்தையெல்லாம் ஒருமுகப்படுத்த முயற்சிக்கும் செயல் அல்ல. மந்திரங்கள் சொல்லி முணுமுணுப்பதோ, பிரார்த்தனைகள் செய்வதோ அல்ல. தியானம் என்பது எண்ணங்கள் நுழையாத நன்னிலை; தன்னைத் தனிமைப்படுத்தி வேறுபடுத்தும் ‘நான்’ , ‘எனது’ என்னும் வெறும் கருத்துருவான மையம் தியானத்தில் இருக்காது; தியானம் ஒரு திறந்தவெளியைப் போன்றது; அது மறைமுகம் எதுவும் இல்லாமல் எதையும் தெளிவுற வெளிப்படுத்திப் பார்க்கும் இயல்புடையது.

தன்முனைவின்றி அமைதியாக அமர்ந்து எண்ணங்களைக் கவனிப்பதன் மூலம், அவற்றைத் தொடர்ந்து சென்று விசாரணை செய்ய ஏன் ஒவ்வொரு எண்ணமும் உதிக்கிறது என்பது புரியும்; நம் முயற்சி இல்லாமலே எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அர்த்தங்கள் வெளிப்படும். அதனால், ஓர் எண்ணம் தோன்றும்போது, இது நன்று அது தீது இது சரி அது தவறு என்று வகைப்படுத்தாமல் பார்ப்பது முக்கியம். எந்த விதமான திரிபும் இல்லாத இந்த பார்வையோடு எண்ணங்களை ஆழ்ந்து உற்று நோக்கும்போது தான் ஒவ்வொரு எண்ணத்திலும் மறைந்துள்ள இரகசியங்களையும், எண்ணத்தின் நோக்கத்தையும் நாம் கண்டுணர முடியும். இந்தத் தெள்ளத் தெளிந்த பார்வையை உடைய மனம் ஓர் உயிர்ப்புமிக்க விழிப்பு நிலையில் இருக்கும். இதுவே தியானத்தின் முதற்படியாகும்.

எண்ணங்கள் அமைதியுற்ற இந்த விழிப்பு நிலையில் ஒருவித வெற்றிடம் தோன்றும்; இந்த வெற்றிடத்திலிருந்தே அன்பு பிறக்கும்; மனம் விடுதலை பெறும்; சீரான செயல்திறன் தோன்றும்; எந்தவித நம்பிக்கைகளையோ கொள்கை கோட்பாடுகளையோ சார்ந்திடாத தெளிந்த மனம் பிறக்கும்.

குறிப்புகள்

இந்தப் பதிவிலுள்ள கருத்துகள் ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘விவேகத்தின் விழிப்பு’ (The Awakening of Intelligence) என்னும் புத்தகத்தையும், ‘செந்தமிழ்’ என்னும் இதழில் வெளிவந்த க.சி. அகமுடை நம்பி அவர்களின் கட்டுரைகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.

 

கருத்துகள் இல்லை