' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இன்று உலக கவிதை தினம்....! (21.03.2021)

1999ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 21ஆம் தேதி, உலக கவிதை தினமாக (World Poetry Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்ததன்படி இது அனுசரிக்கப்படுகிறது. 

இலக்கிய அமைப்புகள் மற்றும் கவிஞர்களின் திறனையும் செயல்பாட்டையும் ஊக்கப்படுத்தும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் விதத்திலும் உலக கவிதை தினத்தைக் கொண்டாட யுனெஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தபோதிலும், சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி மார்ச் 21-ஐ கவிதை தினமாக கடைபிடித்து வருகின்றன.  சர்வதேச கவிதை அமைப்புகளுக்கு புதிய அங்கீகாரம் மற்றும் கவிதைகளைப் படித்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டது உலக கவிதை தினம்.

காதலித்துப்பார் உனக்கும் கவிதை வரும்  என்பார் கவிஞர் வைரமுத்து.கவிதை என்றதும், உடன் நினைவுக்கு வருவது காதல் தான். தமிழைக் காதலித்த ஈழத்து கவிஞர் மாவை சச்சிதானந்தனின் நினைவு நாளும் உலக கவிதை தினமான இன்று தான்.

இன்று (21.03.2021) கவிஞரின் 

13ம் ஆண்டு நினைவு நாள்.

  

கவிஞர் முனைவர் மாவை சச்சிதானந்தன் B.A (Hons) London. M.Phil in Psychology (London) Ph. D (Jaffna)    (10.10.1921 - 21.03.2008)
 
அவரின் தமிழ்க் காதலின் ஆழத்தினை வெளிப்படுத்தும் கவிதையும் அதன் பாதிப்பில் எழுந்த தமிழ்க் காதலும் தொடர்ந்து வருகின்றன.

தமிழ்க் கவிப் பித்து

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - எனைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்கு
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடியவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
 
 
 
 தமிழும் நானும்

வான்தமிழில் வாய்திறந்து அழுது கொண்டே

வையகத்தில் நான்வந்து பிறக்க வேண்டும்

பிறந்தபின் நான்பேசும் பேச்சு எல்லாம்

இறவாத புகழுடைய தமிழாதல் வேண்டும்


கண்ணினிலே காணுகின்ற காட்சி எல்லாம்

கவின் தமிழே களிநடனம் புரியவேண்டும்

உண்ணுதற்கு உட்கார்ந்தால் உணவில் கூட‌

உயிரான தமிழங்கே மணக்க வேண்டும்


எண்ணுகின்ற எண்ணங்களி லெல்லாம் எங்கள்

எடுப்பான தமிழங்கே இருக்க வேண்டும்

எழுதுதற்கு எடுத்தால் பேனா கூட‌

ஏட்டினிலே தமிழாக ஓட வேண்டும்


தினமெந்தன் செவி கேட்கும் இசையின்பம்

தேமதுரத் தமிழாக ஒலிக்க வேண்டும்

மனந்தன்னில் குடிகொள்ளும் மங்கை தானும்

மாணிக்கத் தமிழணங்காய் இருக்க வேண்டும்


பாடையிலே பிணமேகிப் போகும் போதும்

பைந்தமிழே பாய் விரித்து செல்ல வேண்டும்

கூடி நின்றோர் கொள்ளியினை வைக்கும் போதும்

குதூகலமாய் தமிழங்கே எரிய வேண்டும்


கடலினிலே என்சாம்பல் கரையும் போதும்

கன்னித்தமிழ் சலசலத்து ஓட வேண்டும்

உடலினிலே துடிக்கின்ற ஒவ்வோ ரணுவும்

உயிர் தமிழிற்கென்றங்கே ஓத வேண்டும்.


இக்கவிதை கவிஞர் மாவை சச்சிதானந்தத்தின் கவியில் ஈர்க்கப்பட்டு அது போன்றே 1971ம் ஆண்டில் கனகரத்தினம் மத்திய மகாவித்தியால உயர்தர மாணவர் மன்ற கவியரங்கில், இன்று தமிழாசான் செந்தமிழ் கோடையிடி குமரன் என்று அறியப்படுகின்ற‌வரால் கவிஞர் தமிழ் மாறன் என்ற புனைபெயரில் எழுதப்பட்டது.
 

 தமிழ்த்தாகம்

 கோடையிலே எரிவெயிலிற் காயும்போது
கொப்பளிக்கும் தமிழ்வெள்ளம் தோயவேண்டும்.
வாடைதரு மூதலிலே நடுங்கும் போது
வயந்ததமிழ்க் கதிரென்னைக் காயவேண்டும்.
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்.
ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.
                                     - மட்டக்களப்புக் கவிஞர் ராஜபாரதி -

 

 காசி ஆனந்தன் பாடல்

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?

-காசிஆனந்தன்-




கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...