' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மாக்ஸிம் கார்க்கியின் வழித்துணை

 


தமிழில்: எஸ்.சங்கரன்

     
 
 

ஒடெஸ்ஸா (Odessa) துறைமுகம்

1
அவனை நான் ஒடெஸ்ஸா துறைமுகத்தில் சந்தித்தேன். காகேஸிய மக்களைப் போன்ற முகமும், அழகான தாடியும் அமைந்த ஆஜானுபாகுவான அவனது உருவத்தின் மீது மூன்று தினங்களாகவே என் கவனம் பதிந்திருந்தது. அவ்வப்போது அவன் என் கண் பார்வையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தான். ஒரு சிறு கற்குன்றின் மீது அசையாமல் மணிக்கணக்காக - நின்று கொண்டு தன் கையிலிருந்த சிறுபிரம்பின் தலைக்குமிழை வாய்ப்புறம் வைத்த வண்ணம் வாதுமை போன்ற தன் கண்களால் கடல் நீரையே பார்த்துக்கொண்டிருந்தான். எதைப் பற்றியுமே கவலைப்படாதவனைப் போல் தினம் பத்து தடவைக்குக் குறையாமல் என்னைக் கடந்து அவன் செல்வான். அவன் யார்.........?

அவனை நான் கவனிக்கத் தொடங்கினேன். அவனும், வேண்டுமென்றே செய்வதுபோல் அடிக்கடி என் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தான். நவ நாகரிக முறையிலிருந்த அவனது உடையும், நாடகக்காரனைப்போல் தலையில் வைத்துக் கொண்டிருந்த கருப்புக் குல்லாயும், அலட்சியமான நடையும், ஒளியற்று வெறிச்சோடிய அவனது பார்வையும் பார்த்துப் பார்த்து எனக்குப் பழக்கமாகி விட்டது. சந்தடி நிரம்பிய துறைமுகத்திலே, நீராவிக் கப்பல்களும் ரயில் இஞ்சின்களும் ஓலமிடுகின்ற அப்பிரதேசத்திலே, நங்கூரச் சங்கிலிகளின் சப்தமும், தொழிலாளர்களின் கூச்சலும் மக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டு கலகலப்பாயிருக்கிற அந்த இடத்திலே அவன் ஒரு புரியாத மனிதனாகப் புலப்பட்டான். துறைமுகத்தில் வேலை செய்த அனைவரும் ராட்சஸ இயந்திரங்களுக்கு அடிமைப் பட்டிருந்தனர். கப்பல்களில் சாமான்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக தொழிலாளர்கள் இயந்திரம்போல் இயங்கிக் கொண்டிருந்தனர். உழைத்துக்களைத்த அவர்கள் அலுப்புத் தாங்காது, உடலில் படிகின்ற தூசியையும், கொட்டுகின்ற வியர்வையையும் பொருட்படுத்தாது தங்கள் வாக்கில் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே அந்த விசித்திரமான மனிதன் யாரையுமே லட்சியம் செய்யாமல் திரிந்து கொண்டிருந்தான்.

நான்காவது தினம், சாப்பாட்டு வேளையின்போது எப்படியாவது அவன் யாரென்று தெரிந்துகொள்ளவேண்டும்; என்னவந்தாலும் வரட்டுமென்று நினைத்து தடுக்கி விழுந்தது போல் அவன் மேல் மோதிக் கொண்டு சென்றேன். அவன் அருகே அமர்ந்து என்னிடமிருந்த ரொட்டியையும் முலாம் பழத்தையும் சாப்பிட்டவாறே எப்படி அவனுடன் பேச்சைத் தொடங்குவது என்று யோசித்த வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேயிலைப் பெட்டிகளின்மீது சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்த அவன், சுற்று முற்றும் எவ்வித நோக்கமுமின்றி தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவனது கைவிரல்கள் பிரம்பின் மீது தாளம் போட்டுக்கொண்டிருந்தன.
நாடோடியைப்போல் உடையணிந்திருந்த என் உடலெல்லாம் கரித்தூள் படர்ந்து அழுக்காயிருந்தது. வலிய அவனைப் பேச்சுக்கிழுப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் என்ன ஆச்சர்யம்! அவன் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். குரூரமான ஒரு மிருகத்தைப்போல் அவனுடைய கண்கள் ஜ்வலித்துக்கொண்டிருந்தன. அவன் பசியோடிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன். "உனக்குச் சாப்பிட ஏதாவது வேண்டுமா?'' என்று கேட்டேன்.
அவன் தன் தோள்களை ஒரு தரம் குலுக்கி விட்டுக் கொண்டான். வரிசைப் பற்கள் அத்தனையும் தெரிய இளித்தவாறே சந்தேகத்துடன், சுற்றிலும் தன் கண் பார்வையைச் செலுத்தினான். எங்களை யாருமே கவனிக்கவில்லை. முலாம் பழத்தில் பாதியையும், ஒரு துண்டு ரொட்டியையும் அவனிடம் நீட்டினேன். அதைச் சட்டென்று பறித்துக்கொண்டு ஓடிப்போய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான்.

அங்கிருந்தபடியே சில சமயம் எட்டிப் பார்க்கும்பொழுது அவனது அழுக்கேறிய நெற்றி என் கண்ணுக்குப்புலப்பட்டது. அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. எதற்காகவோ அவன் என்னைப் பார்த்துக் கண்ணைக் கொட்டிக்கொண்டேயிருந்தான். அவன் வாய் மென்று கொண்டிருத்தது. கொஞ்சம் காத்திருக்குமாறு சைகை செய்து விட்டு நான் இறைச்சி வாங்கச் சென்றேன். இறைச்சியை வாங்கிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு யாரும் அவனைப் பார்க்கா வண்ணம் மறைத்துக் கொண்டு நின்றேன். உணவை அருந்தியவாறே கவலை தோய்ந்த முகத்துடன் அவன், நாலாபுறமும் தன் கண் பார்வையை ஓட்டிக்கொண்டேயிருந்தான், தன்னிடமுள்ள உணவை யாராவது பறித்துக்கொண்டு போய் விடுவார்களோ என்று அவன் பயப்படுவதைப் போலிருந்தது. 'பரக்கப் பரக்க' அவன் சாப்பிடுவதைக் கண்டு எனக்குப் பரிதாபமாக இருந்தது திரும்பி நின்று கொண்டேன்.

''வந்தனம்... ரொம்ப வந்தனம்'' என் தோள்களைப் பிடித்து அவன் உலுக்கினான். பின்னர் என் கையைப் பிடித்துக் கொண்டு காட்டுத் தனமாகக் குலுக்கினான்.
ஐந்தே நிமிஷத்தில் அவன் யாரென்பதை எனக்குச் சொல்லி விட்டான்.

அவன் ஜார்ஜியாவைச் சேர்ந்தவன். ஷாக்ரோடாட்ஜி என்று பெயர். அப்பாவுக்கு ஒரே பிள்ளை. குத்தாய்சியாவிலிருந்த ஒரு பணக்கார நிலப்பிரபு அவர். அவன் ட்ரான்ஸ்காகேஸியன் ரயில்வேயில் உள்ள ஒரு ஸ்டேஷனில் கொஞ்ச நாள் குமாஸ்தாவாக இருந்தான். அப்பொழுது அவன் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து வசித்தான். அந்த நண்பன் ஒரு நாள் வாக்ரோவின் பணம், மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு மறைந்துவிட்டான்.
அவனை எப்படியும் பிடித்துவிடவேண்டுமென்று புறப்பட்டான் ஷாக்ரோ.
அந்த நண்பன், பட்டூமுக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு புறப்பட்டான் என்று எதேச்சையாக அவனுக்குத் தெரிய வந்தது. பாட்டுமுக்குப் போய்ப் பார்த்த பொழுது அவன் ஒடெஸ்ஸாவுக்குப் போய் விட்டதாகக் கேள்விப்பட்டான். பின்னர் ஷாக்ரோ, தன் வயதை ஒத்த க்ஷவரத் தொழிலாளி ஒருவருடைய 'பாஸ் போர்ட்டை வாங்கிக்கொண்டு ஒடெஸ்ஸாவுக்குப் புறப்பட்டான் அங்கே திருட்டைப் பற்றிப் போலிஸாரிடம் புகார் செய்தான் அவர்கள் கண்டுபிடித்துத் சருவதாக வாக்களித்ததின் பேரில் இரண்டு வாரம் காலத்தைக் கழித்தான். கையிலிருந்த பண மெல்லாம் கரைந்து விட்டது. கடந்த நான்கு தினங்களாக அவன் ஒரு கவளம் கூடச் சாப்பிடவில்லை.

அவன் கதையை நான் கேட்டேன்.. நிஜம் போலவே தோன்றியது. அதை அப்படியே நம்பிய நான் அந்த இளைஞனுக்காக வருத்தப் பட்டேன். அவனுக்கு வயது இருபதுதான் இருக்கும். கபடமற்ற அவன் முகத்தைப் பார்த்தால் இன்னும் குறைவாகவே மதிப்பிடத் தோன்றும்.
அந்தத் திருடனுடன் தனக்கிருந்த சினேகம் பற்றி அடிக்கடி அவன் குறிப்பிட்டான். இழந்த பொருள்களைக் கண்டு பிடித்துத் திரும்பப் பெறாவிட்டால் தனது தந்தை தன்னைக் குத்திக் கொன்றுவிடக் கூடத் தயங்க மாட்டார் என்று அவன் சொன்னான்.
அந்த இளைஞனுக்கு யாரும் உதவாவிட்டால் பேராசை பிடித்த மக்கள் நிறைந்த அந்த நகரத்திலே அவன் அழிந்து விடுவான் என்று நினைத்தேன். இம்மாதிரியான சம்பவங்கள் பலரை நாடோடிக் கூட்டத்தில் சேர்த்திருக்கின்றன என்பதை நானறிவேன். அவனுக்கு நான் உதவி செய்ய விரும்பினேன், ஆனால் என்னுடைய சம்பாத்தியம் அவனுக்குப் பாட்டூமூக்கு ஒரு டிக்கெட் வாங்கிக்கொடுக்கக்கூட போதுமானதாக இல்லை, அதனால் ஷாக்ரோவுக்கு ஒரு இலவச டிக்கட் பெறுவதற் காக காரியாலயத்துக்குச் சென்றேன். அவனுக்கு உதவுவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை மிக மிக வற்புறுத்திச் சொன்னேன். அவர்களும் கண்டிப்பாக மறுத்து விட்டனர். ஷாக்ரோ, போலீஸ் தலைமை அதிகாரியிடம் சென்று தனக்கு ஒரு டிக்கட் கொடுக்குமாறு கேட்க வேண்டுமென்று சொன்னேன். இதைக் கேட்டு கலவரமடைந்த அவன் தான் போகமுடியாதென்றான், ஏன்? அவன் தங்கி யிருந்த இடத்துக்கு வாடகை கொடுக்கவில்லையாம். அதை அவர்கள் கேட்டபொழுது யாரையோ அடித்துவிட்டானாம்! அதனால் பயந்து, ஒளிந்து திரிந்து கொண்டிருந்த தனக்கு போலீஸ்காரர்கள் நிச்சயமாக – உதவமாட்டார்கள் என்று அவன் நினைத்தான். அடித்தது ஒரு அடியா இரண்டு அடிகளா அல்லது மூன்று நான்கு அடிகளா என்பதுகூடத் தனக்கு ஞாபகமில்லை என்றான்.

நிலைமை சிக்கலாக இருந்தது. பாட்டூமுக்கு டிக்கட் வாங்க எவ்வளவு பணம் வேண்டுமோ அதை சம்பாதிக்கும்வரை உழைப்பதென்று - தீர்மானித்தேன். ஆனால் இது சீக்கிரத்தில் ஆகக்கூடிய காரியமாகத் தெரியவில்லை ஏளென்றால் ஷாக்ரோவுக்கு சாப்பாட்டுக்கே தினம் இரண்டு மூன்று செ வாயிற்று.
அச்சமயம் துறைமுகத் தொழிலாளர்களின் தினக் கூலி மிகக் குறைவாக இருந்தது. எனக்குக் கிடைத்த 80 கோபெக் கூலியிலே, இருவருக்கும் சாப்பாட்டுக்கே 60 கோபெக்குகள் செலவாயிற்று. கிரிமியாவுக்குப்போய் விடவேண்டுமென்றும், ஒடெஸ்ஸாவில் அதிக காலம் இருக்கக்கூடாதென்றும் அவனைப் பார்ப்பதற்கு முன் முடிவு செய்திருந்தேன். கால் நடையாக என்னுடன் வருமாறு ஷாக்ரோவிடம் சொல்லி பின்வரும் நிபந்தனைகளையும் விதித்தேன். டிப்லிஸிற்குப் போவதற்கு வழித்துணையாரும் கிடைக்காவிட்டால் நானே உன் கூட வருவேன். யாராவது கிடைத்தால் அத்துடன் நாம் பிரிந்துவிட வேண்டும் என்றேன். அவன் தன் ஜோடுகளைப் பார்த்தான்- தொப்பியைப் பார்த்தான்-கால் சராயைப் பார்த்தான். தன் சட்டையைத் தட்டி விட்டுக்கொண்டான்- ஏதோ யோசித்தான். பெருமூச்சு விட்டான் -ஒரு முறையல்ல பல முறை. கடைசியாக சம்மதித்தான். ஒடெஸ்ஸாவிலிருந்து கால்நடையாக டிப்லிஸுக்கு நாங்களிருவரும் புறப்பட்டோம்.

2


செர்ஸன் (Cherson) வந்து சேர்ந்தோம், என்னுடன் வந்தவன் கபடமற்ற இளைஞன். உலக அனுபவ மில்லாதவன். வயிறு நிறைந்திருக்கும்போது உற்சாகத்துடனிருப்பான். பட்டினி கிடக்கும் போது சோர்ந்து விடுவான். காகஸஸைப் பற்றியும், ஜ்யார்ஜியாவிலுள்ள நிலப்பிரப்புக்களின் வாழ்க்கைப்பற்றியும், அவர்கள் விவசாயிகளை நடத்துகின்ற விதம் பற்றியும் வழியெல்லாம் அவன் சொல்லிக் கொண்டு வந்தான் அதைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. அவன் சொன்ன பல கதைகளில் இது ஒன்று:
செல்வந்தன் ஒருவனுடைய வீட்டிற்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஒரு நாள் விருந்திற்கு வந்தனர். அவர்கள் பலவிதமான பதார்த்தங்களையும். பானவகைகளையும் உண்ட பின்னர் செல்வந்தன், விருந்தினர்களை லாயத்திற்கு அழைத்துச் சென்றான் அனைவரும் குதிரைகள் மீது ஏறிக்கொண்டனர். மிகச் சிறந்த குதிரை ஒன்றின் மீது செல்வந்தனும் ஏறிக்கொண்டான். அது மிகவும் ரோஸமான குதிரை. அதனுடைய தோற்றத்தையும் வேகத்தையும் கண்டு விருந்தினர்கள் புகழ்ந்ததைக் கேட்டு செல்வந்தன் நாலு கால் பாய்ச்சலில் குதிரையை விரட்டினான். ஆனால் வெள்ளைக் குதிரை ஒன்றின் மீது ஏறி வந்த விவசாயி ஒருவன் பந்தயத்தில் செல்வந்தனைத் தோற்கடித்து விட்டான். செல்வந்தனுக்கு அவமானமாகப் போய் விட்டது. தன் புருவங்களை உயர்த்தி அவ்விவசாயியை தன்னிடம் வருமாறு கம்பீரமாக அழைத்தான். அவன் அருகில் வந்ததும் தன் கையிலிருந்த கத்தியால் அவன் கழுத்தை வெட்டி விட்டான். துப்பாக்கியினால் குதிரையின் காதில் சுட்டு அதையும் கொன்று விட்டான், தானே அதிகாரிகளிடம் போய் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்து விட்டான். அக்குற்றத்திற்கேற்ற தண்டனை அவனுக்கு வழங்கப்பட்டது.
அந்த செல்வந்தனுக்காக வருத்தப்படுவதைப்போல் ஷாக்ரோ இக்கதையை என்னிடம் கூறினான். அனுதாபப்படுவதற்கு இதில் இடமே இல்லையே என்று எடுத்துக் கூறினேன். ஆனால் உறுதியாக அவன் சொன்னான்.
”நிலப்பிரபுக்கள் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளோ ஏராளமாக இருக்கிறார்கள். விவசாயியின் உயிருக்காக ஒரு நிலப்பிரபுவை தண்டிக்கக் கூடாது'' என்றான். அத்துடன் நின்று விடவில்லை. "யார் இந்த விவசாயிகள்?'' என்று கூறிக்கொண்டே தரையில் கிடந்த மண்ணாங் கட்டியைக்காட்டி, நிலப்பிரப்புக்கள் எங்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்றான். வாக்குவாதம் வலுத்தது. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. கோபம் வந்துவிட்டால் ஓநாயைப்போல் அவன் பல்லை பல்லை இளிப்பான். முகம் குரூரமாக மாறிவிடும்.
''வாயை மூடு மாக்ஸிம்! காகேஸியாவில் உள்ள நிலைமை பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவன் கத்தினான்.
எனது வாதங்களெல்லாம் சக்தியற்றவைகளாக இருந்தன. எனக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களைக் கண்டு அவன் நகைத்தான், எனது வாத விளக்கம் அவன் மூளையில் உறைக்கவில்லை. நான் சொல்வது சரி என்பதை ஸ்தாபிப்பதற்காக பல ஆதாரங்களை எடுத்துக் காட்டிய போதும் அவன் அசையவில்லை.
"காகஸஸிற்குப்போய் கொஞ்ச நாள் இருந்து பார். நான் சொல்வது உண்மை தான் என்பதைக் காண்பாய். அவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள், இப்படித்தான் நடக்கிறது என்று ஆயிரக்கணக்கான பேர் சொல்வதை நம்பாமல் அப்படி நடக்கவில்லையென்று நீ ஒருவன் மட்டுமே சொல்வதை நான் ஏன் நம்ப வேண்டும்?'' என்றான்.
நான் மௌனமானேன். வார்த்தைகளால் அவனுக்குச் சொல்லிப் பயனில்லை யென்றும் நேரிடையாகக் காட்டவேண்டுமென்றும் முடிவு செய்தேன். நான் மௌனமாக இருந்ததால் வாதத்தில் தான் ஜெயித்து விட்டதாக' அவன் நினைத்துக் கொண்டான். காகஸிய மக்களைப் பற்றிக் கதை சொல்லும் போதெல்லாம் உர்த்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். கேட்பதற்கு ரஸமாக இருந்தன. ஆனாலும் அவர்களது கொடுமையையும், பலத்தையும், பணத்தையுமே பிரதானமாகக் கருதும் தன்மையையும், மனிதப் பண்பை மதியாத அவர்கள் நடத்தையும் கண்டு எனக்குக் கோபமேற்பட்டது.
ஒரு சமயம் ஏசு நாதர் என்ன சொல்லி யிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டேன். நன்றாகத் தெரியுமென்றான் அவன், தன் தோள்களை அசைத்தபடியே.
மேலும் கேட்டபோது அவனுக்குத் தெரிந்த தெல்லாம் இவ்வளவு தான் என்றறிந்தேன்:
யூதர்களின் கிறிஸ்து என்று ஒருவர் இருந்தார். சட்டத்தை எதிர்த்து அவர் கிளர்ச்சி செய்தார். அதற்காக அவரைச் சிலுவையில் அறைந்தனர். ஆனால், அவர் கடவுளானபடியால் சிலுவையிலே இறக்கவில்லை. அப்படியே சுவர்க்கத்துக்குப்போய் மக்களுக்கு புதிய வாழ்க்கை விதிமுறை ஒன்றை வழங்கினார்..........
'' எப்படி !'' என்று கேட்டேன்.
அசடு வழிய என்னைப் பார்த்துக் கொண்டே அவன் கேட்டான்: " நீ ஒரு கிறிஸ்தவனா? நானும் கிறிஸ்தவன் தான். அநேகமாக பூமியில் உள்ள எல்லாருமே கிறிஸ்தவர்கள் தான். ஆமாம்! நீ என்ன கேட்டாய்?... இப்பொழுது எல்லோரும் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்கிறாய் அல்லவா? அதுதான் ஏசு விதித்த முறை....''
கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு சொல்லத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கவனத்துடன் கேட்டான். ஆனால் கவனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசியில் கொட்டாவியில் போய் முடிந்தது. அவனது கவனம் நான் சொல்வதில் இல்லையென்பதைத் தெரிந்து கொண்டு அவன் மனதை திருப்புவதற்காக பரஸ்பரம் உதவிக் கொள்வதில் உள்ள நன்மைகளைப்பற்றி -எல்லா நன்மைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தேன். பலமுள்ளவனுக்கு அவன் வைத்ததுதான் சட்டம். எதையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே அவனுக்குக் கிடையாது. அவன் குருடனாயிருந்தால் கூடச் சமாளித்துக் கொள்ள முடியும் என்று கூறி ஆட்சேபித்தான்
இவ்விஷயத்தில் அவன் உறுதியாக இருந்தான். ஆனால் எனக்கு அவனிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்று. அவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக இருந்தான். அவன் மீது ஏதோ ஒரு வெறுப்புணர்ச்சி தோன்றுவதாக சில சமயம் உணர்ந்தேன். ஆனாலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளமுடியும்; இருவருக்கும் பொதுவான ஒரு அம்சத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நான் இழக்கவில்லை.
அவனுக்குப் புரியவைப்பதற்காக, தெளிவாக அவனிடம் பேச ஆரம்பித்தேன். தான் சொல்வது தான் சரி என்ற அசைக்க முடியாத உறுதியுடன் தான் அவன் அதைக் கேட்டான். உலகத்தைப் பற்றி அசைக்க முடியாத விதத்தில் உறுதியாக அவன் கொண்டிருந்த அபிப்பிராயத்தின் முன் எனது வாதங்களெல்லாம் தவிடு பொடியாயின.
பெரிக்கோப்பைக் கடந்து, கிரிமியா மலைச்சாரலுக்கு வந்து சேர்ந்தோம். இரண்டாவது தினத்திலேயே அடி வானத்தில் மலைத்தொடர் என் கண்களுக்குப் புலனாயிற்று. நீல நிறமாகக் காட்சியளித்த அவற்றின் விளிம்பிலே மேகங்கள் சூழ்ந்திருந்தன. எட்ட இருந்தே இக்காட்சியைக் கவனித்த நான் கிரிமியாவின் தென்புறத்திலுள்ள கடற்கரையைப் பற்றிக் கற்பனை செய்துகொண்டிருந்தேன். ஆனால் அவனோ, லேசான குரலில் ஜார்ஜியா தேசப்பாட்டுக்களை உற்சாகமின்றிப் பாடிக்கொண்டிருந்தான். எங்கள் கையிலிருந்த காசெல்லாம் கரைத்து விட்டது. அப்போதைக்கு சம்பாதிக்க வேறு வழியே இல்லை. டியோடாஸியாவுக்குச் சென்றோம். அங்கே துறைமுகக் கட்டிட வேலை ஏற்கனவே ஆரம்பமாகியிருந்தது.
தானும் வேலை செய்வதாகவும், இருவருமாகப் பணம் சம்பாதித்து கடல் வழியாக பாட்ரூம் செல்லலாமென்றும், அங்கே தனக்குத் தெரிந்தவர்கள் நிறையப் பேர்கள் இருப்பதாகவும் அங்கே எனக்கொரு வேலை வாங்கித் தருவதாகவும் அவன் கூறினான். என் தோளின்மீது அன்புடன் தட்டியவாறே நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு அவன் சொன்னான்: "நான் ஏற்பாடு செய்கிறேன். ஜோராக வாழலாம்! அடடா! நீ, எவ்வளவு வேண்டுமானாலும் சாராயம் குடிக்கலாம் வேண்டிய அளவு இறைச்சி சாப்பிடலாம். ஜோரான ஒரு ஜார்ஜியா குட்டியை மணந்து கொள்ளலாம்......... அறுசுவையோடு உணவளிப்பாள் அவள்...ஏராளமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பாள் அடடா.........?''
அடடா என்று அவன் சொல்லிக் கொண்டு வந்தது ஆரம்பத்தில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வர வர அது ஒரேயடியாக என் கோபத்தைக் கிளப்பிவிட்டது. ரஷ்யாவில் பன்றிகளை அப்படித்தான் கூப்பிடுவார்கள், ஆனால் காகஸஸில் ஆனந்தம், அனுதாபம் ஆகியவற்றைத் தெரிவிக்க அவ்வாறு உபயோகிக்கிறார்கள்.
ஷாக்ரோவின் கால் சராய் பல இடங்களில் கந்தலாகி விட்டது. அவனுடைய பூட்ஸும் பல இடங்களில் கிழிந்து விட்டது. அவனுடைய தொப்பியையும் கைப்பிரம்பையும், செர்ஸனில் நாங்கள் விற்றுவிட்டோம். தொப்பிக்குப் பதிலாக ரயில்வே உத்தியோகஸ்தர் ஒருவரின் பழைய குல்லாய் ஒன்றை அவன் வாங்கிக் கொண்டான். அதைத் தன் தலையில் ஒரு புறமாகச் சாய்த்து வைத்துக் கொண்டு தனக்குப் பொருத்தமாக இருக்கிறதா? நன்றாக இருக்கிறதா? என்று அவன் கேட்டான்.

3


கிரிமியா (Crimean) வந்து சேர்ந்தோம். சிம்வராபோல்(Simferopol) வழியே யால்டாவிற்குச் (Jalta) சென்றோம்.
சுற்றிலும் கடல் சூழ்ந்த இந்த பிரதேசத்தின் இயற்கையழகைக் கண்டு வியந்தவாறே மௌனமாக நான் நடந்தேன். அவனோ, ஆழ்ந்த பெருமூச்சுவிட்ட வண்ணம் கவலை தோய்ந்த கண்களுடன் வயிற்றை நிரப்ப ஏதேனும் கிடைக்காதா என்ற எண்ணத்துடன் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தான்.
சம்பாதிப்பதற்கு வழியெதுவும் எங்களுக்குப் புலனாகவில்லை. உண்பதற்கு ஒரு துண்டு ரொட்டிக்கூட இல்லாததால் பழங்களைத் தின்றே காலத்தை ஓட்டினோம். ஷாக்ரோ ஏற்கனவே நான் சோம்பேறி என்று சொல்ல ஆரம்பித்து விட்டான். அவன் எனக்கொரு சுமையாக ஆகிவிட்டான். அதைவிடத் தாங்க முடியாமல் இருந்தது, அவனது கற்பனைக் கெட்டாது கதைகள் .... அவன் கூறியதைப் பார்த்தால் பனிரெண்டு மணிக்கெல்லாம் ஒரு முழு ஆட்டுக்குட்டியையும், மூன்று பாட்டில் சாராயத்தையும் சாப்பிட்டுவிட்டு இரண்டு பணிக்கெல்லாம் மீண்டும் ஒரு விருந்து சாப்பிட்டுப் பழக்கப்பட்டவனைப்போல் தோன்றியது. தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி நாள் கணக்காக அவன் பேசினான்;உதடுகளைக் கடித்துக் கொண்டு, கண்களில் கோபம் கொதிக்க, பல்லை இளித்து சூள் கொட்டி பலவிதமான அங்க சேஷ்டைகளுடன் அவன் கதை சொல்லுவான்.
ஒரு சமயம் யால்டாவில், ஒரு பழத்தோட்டத்தைச் சுத்தப்படுத்தும் வேலையை மேற்கொண்டேன். முன்னதாகவே கூலியையும் பெற்றுக்கொண்டு அரை ரூபிளுக்கு ரொட்டியும், இறைச்சியும் வாங்கி வந்தேன். அப்பொழுது என்னைத் தோட்டக்காரன்கூப்பிடவே, அவற்றையெல்லாம் ஷாக்ரோவிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன். அவன் தனக்குத் தலைவலி என்று சொல்லி என்னுடன் வேலை செய்ய மறுத்துவிட்டான்.
ஒரு மணி கழித்து நான் திரும்பி வந்த பொழுது தன்னுடைய ஜீரணசக்தியைப் பற்றி ஷாக்ரோ பெருமையடித்துக் கொண்டதில் உண்மைக்குப் புறம்பானது எதுவுமில்லை என்பதைக் கண்டேன். நான் வாங்கி வந்த பொருள்களில் ஒரு துண்டு கூட மீதி இருக்கவில்லை. ஆனாலும் நான் எதுவும் சொல்லவில்லை. ஏன் சொல்லாமற் போனோம் என்பதற்காகப் பின்னர் வருந்தினேன். எனது மௌனத்தைக் கண்ட ஷாக்ரோ தனது வழக்கமான விதத்தில் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் அப்பொழுதிலிருந்து அசிங்கமான ஏதோ ஒன்று ஆரம்பமாயிற்று.
நான் உழைத்தேன். அவன் ஏதேதோ சாக்குச் சொல்லி வேலை செய்யாமலே உண்டு களித்து உறங்கியதோடு இல்லாமல், என்னையும் மிரட்டிக் கொண்டிருந்தான். நான் டால்ஸ்டாயைப் பின்பற்றி நடப்பவனல்ல. உழைத்துக்களைத்து சோர்வுடன் அயர்ந்து தள்ளாடி வேலை முடிந்து திரும்புகின்ற பொழுது அடர்ந்த நிழலடியிலே அமர்ந்து பேராசைக் கண்களால் என்னைப் பார்த்தவாறே நகைக்கின்ற உருட்டுக் கட்டை போன்றிருந்த அந்த உடல் வலுக்குன்றாத இளைஞனைப் பார்க்க எனக்கு ஏளனமாக இருந்தது. அவன் சிரித்தான், ஏனெனில் இரந்து வாழ அவன் கற்றுக்கொண்டு விட்டான். அவன் கண்களுக்கு உயிரற்ற ஜடப்பொருளாகவே நான் பட்டேன். அவன் பிச்சையெடுக்கத் தொடங்கியபோது முதலில் எனக்குச் சங்கடமாயிருந்தது. ஒரு தாத்தாரிய கிராமத்திற்குச் சென்றபொழுது, இதற்கான வேஷத்தை அவன் போட ஆரம்பித்தான். தன் கைத்தடியின் மீது சாய்ந்தவாறே கால்களைத் தரையில் தேய்த்து நடந்து, வலியால் துடிப்பது போல் அவன் பாசாங்கு செய்தான். கருமிகளானதாத்தாரியர்கள் உருட்டுக்கட்டை போலிருக்கிற பிச்சைக்காரர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டார்கள் என்பதை அவன் அறிந்துகொண்டிருந்தான். நான் அவ னுடன் சண்டை போட்டேன்; பிச்சையெடுப்பது எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் என்பதை எடுத்துச் சொன்னேன். அவன் சிரித்தான்.
''என்னால் வேலை செய்ய முடியவில்லை என்றான். அவனுக்குப் போதுமான அளவுக்கே பிச்சை கிடைத்தது. அச்சமயம் என் உடல் நிலை குன்றியது. ஒவ்வொரு நாளும் நிலைமை கஷ்டமாயிற்று. ஷாக்ரோவுடன் எனது உறவு சகிக்க முடியாத அளவுக்கு சுமையாக ஆகிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் நான்தான் அவனுக்குச் சோறு போட வேண்டு மென்றான். ' நீதானே என்னை அழைத்து வந்தாய், அது உன்னுடைய அவ்வளவு தூரம் என்னால் நடக்க முடியாது- எனக்கு நடந்து பழக்கமில்லை. அதனால் நான் இறந்து விடுவேன். என்னை எதற்காக வதைக்கிறாய்; கொல்லுகிறாய். நான் இறந்தால் என்ன ஆகும்? என் தாய் அழுவாள், தந்தை கதறுவார், உறவினர்கள் ஓலமிடுவார்கள். எவ்வளவு பேர் கண்ணீர் வடிப்பார்கள் தெரியுமா?''
இவ்வாறு அவன் கூறியதைப் பேசாமல் கேட்டேன். ஆனால் கோபமடையவில்லை. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும்படியாக ஏதோ ஒரு விசித்திரமான எண்ணம் என் மனதில் குடி கொண்டது. அவன் தூங்கிக் கொண்டிருப்பான், பக்கத்தில் அமர்ந்தவாறே அசைவற்ற-அமைதி நிலவும் அவன் முகத்தைப் பார்த்தவாறே ஏதோ சிந்தனையில் சொல்லுவேன்:
"எனது வழித்துணை!.....எனது வழித்துணை!''
இந்த உணர்வுடன் நான் இருத்தபோது என் எண்ணம் குழப்ப மடைந்தது. துணிவுடன் உறுதியாகவும், உரிமையைக் கேட்பவன் போல் என்னிடமிருந்து ஆதரவையும் அக்கறையையும் அவன் நாடினான். அவன் என்னை ஆட்டி வைத்தான். அதற்கு நான் விட்டுக் கொடுத்தேன். அவனது குணங்களை நன்கு ஆராய்ந்தேன். மகிழ்வுடன் அவன் இருந்தான்; பாடினான்; தூங்கினான். இஷ்டப்பட்ட போதெல்லாம் என்னைக் கேலியும் செய்தான்.
சிலசமயம் வெவ்வேறு திசைகளில் இரண்டு மூன்று தினங்களுக்கு நாங்கள் பிரிந்து சென்றிருக்கிறோம். என்னிடம் பணமோ உணவோ இருந்தால் அதை அவனிடம் கொடுத்து மீண்டும் எங்கே சந்திக்க வேண்டும் என்பதைக் கூறி அனுப்புவேன். மீண்டும் நாங்கள் சந்திக்கும்பொழுது கவலையும் கடுகடுப்பும் மிகுந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே உற்சாகத்துடன் சொல்லுவான்: "என்னைத் தனியே விட்டு விட்டு ஓடிவிட்டாய் என்றல்லவா நினைத்தேன். அஹ்ஹஹா....”
அவனுக்கு நான் உணவளித்தேன்; நான் பார்த்த அழகிய இடங்களைப் பற்றியெல்லாம் சொன்னேன். ஒரு தடவை பச்சிசராயைப் பற்றிக் குறிப்பிட்டு அவன் கூறியவற்றைச் சொன்னேன். அது அவனிடம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை.
“ஓ! கவிதைகளா?... அவை பாடல்கள். கவிதைகள் அல்ல. எனக்கு ஜார்ஜியள் ஒருவளைத் தெரியும். மாட்டோ லெஷாவ் என்பது அவள் பெயர், அவள் பாடுவாள்....... என்ன பாட்டு! அவள் பாட ஆரம்பிப்பாள். அடாடா!
ரொம்ப உரக்க... குரல் வளையில் கத்தியால் குத்திவிட்டதைப் போல. இப்பொழுது அவள் சைபீரியாவுக்குப்போய் விட்டாள்''
எங்களுடைய விவகாரங்கள், இப்பொழுதெல்லாம் சுமுகமாக இல்லை. வாரத்திற்கு ஒன்றரை அல்லது ஒரு ரூபிள் சம்பாதிப்பதற்குக் கூட மார்க்கமில்லை இது இரண்டு பேருக்கும் போதவே போதாது என்று சொல்லத் தேவையில்லை. உணவு விஷயத்தில் சிக்கனம் செய்வ தென்பதே ஷாக்ரோவுக்குத் தெரியாது. அவனது வயிறு, வண்ணான்சால்போல். திராட்சையோ, முலாம் பழமோ, மீனோ, ரொட்டியோ, உலர்ந்த பழங்களோ-எது கிடைத்தாலும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.
கிரிமியாவை விட்டுப் போய்விட வேண்டு மென்று ஷாக்ரோ அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். விரைவிலேயே இலையுதிர் காலம் வந்துவிடு மென்றும் இன்னும் வழி வெகு தூரம் இருக்கிற தென்றும் கூறினான். அதை நானும் ஆமோதித்தேன். டியோடேஸியாவுக்குப் போனால் ஏதேனும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றோம். அங்கும் பழங்களைத் தின்றே காலம் கடத்தும் படியாகவே நேரிட்டது. ஆனாலும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை மட்டும் இருக்கத்தான் செய்தது. ஹும்...என்ன எதிர்காலம்! மக்கள் அளவுக்கு மீறி நம்பிக்கை கொள்வதால் தான் அது தனது மதிப்பை இழந்து விடுகிறது.
அனுஷ்டாவிலிருந்து இருபது வெர்ஸ்ட் தூரம் சென்றதும் இரவைக் கழிப்பதற்காகத் தங்கினோம். கடற்கரை ஓரமாகப் போகலாம் என்று கூறினேன். அந்த வழி தூரமானது என்றாலும் கடற்காற்றை அனுபவிக்க விரும்பினேன். கணப்புத் தீயை மூட்டி அதன் அருகில் தான் படுத்துக் கொண்டோம். அற்புதமான இரவு அது. கரும்பச்சை நிறமாகக் காட்சியளித்த கடல் எங்கள் காலடியில் இருந்தது. அலைகள், பாறைகள் மீது வந்து மோதின. அழகிய நீல ஆகாயம் நிச்சலனமாக இருந்தது. சுற்றிலுமிருந்த செடிகளும் புதர்களும் லேசாக சலசலத்தன. சந்திரன் தோன்றினான். மரங்களின் நிழல் கற்பாறைகள் மீது விழுந்தது, ஏதோ ஒரு பறவை உரக்க, வேகமாகப் பாடிக் கொண்டிருந்தது அதனுடைய வெண்கல நாதம், அலைகளின் லேசான சப்தம் நிலவிய அவ்வெளியிலே மங்கிக் கொண்டே வந்தது. இடையிடையே வண்டுகளின் ரீங்காரம் ஏதாவது கேட்கும். கணப்புத் தீ 'தகதக' வென்று எரிந்தது. சிவப்பும் மஞ்சளும் கலந்த பூக்களைக் கொண்டு கட்டப்பட்ட புஷ்பச் செண்டைப் போல் இருந்தது தீ ஜ்வாலை. அவற்றின் நிழல்கள் தரையிலே படர்ந்து குதித்தன. சில சமயம் விசித்திரமான சப்தங்கள் அவ்வெளியிலே கேட்கும்.
பரந்து கிடந்த கடல் ஆளரவமற்றிருந்தது. ஆகாயத்திலே ஒரு மேகம் கூட இல்லை. பூமியின் ஒரு விளிப் பிலே இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன் அமைதி நிரம்பிய இந்த அழகிய இடங்களில் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் போல் உள்ளத்தில் பட்டது. வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க முடியாமல் எனது இதயம் தத்தளித்துத் தடுமாறியது.
திடீரென்று ஷாக்ரோ உரக்கச் சிரித்தான் : ''ஹஹ்ஹா….எத்தகய முட்டாள் உனக்குக் கிடைத்திருக்கிறான்? ஹஹ்ஹா...''
என்மீது ஏதோ இடி விழிந்ததைப் போல் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதைவிட மோசமானது - நகைப்புக்கிடமானது -கோப மூட்டுவதும் கூட.
ஷக்ரோ சிரித்துக்கொண்டே கத்தினான். நானும் கத்தத் தயாராயிருப்பது போல் உணர்ந்தேன்-ஆனால் வேறு காரணத்திற்காக என் தொண்டையில் ஏதோ அடைத்தாற் போலிருந்தது. என்னால் பேச முடியவில்லை. அவனைக் கோபமாகப் பார்த்தேன். அதனால் அவனது சிரிப்புதான் அதிகமாகியது. தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையிலே உருண்டான். என்னை அவன் நிந்தித்ததிலிருந்து மீண்டும் நிலைக்கு வரமுடியவில்லை-மிகப் பெரிய நிந்தனை அது. இதைப் போன்ற ஒன்றை எப்போதாவது அனுபவித்திருக்கும் ஒரு சிலராவது அதை உணர முடியும் என்று நம்புகிறேன்.
"போதும் நிறுத்து'' என்று கோபமாகக் கத்தினேன். அவன் பயந்துவிட்டான். உடல் நடுங்கியது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிரிப்பை அவனால் அடக்கமுடியவில்லை. வாயை மூடிக்கொண்டு அவன் சிரித்தான். கண்கள் அகல விரிந்தன. மீண்டும் வெடி போல் கிளம்பியது சிரிப்பு. நான் எழுந்து அவனிடமிருந்து விலகிச் சென்று எந்தவிதமான சிந்தனையுமின்றி, தன்னுணர்வற்றுத் தனிமை உணர்ச்சியுடன் கோபமும் வாட்டியெடுக்க வெகுநேரம் நடந்து கொண்டிருந்தேன். கவிஞனைப்போல் இயற்கையழகை அள்ளிப்பருகினேன். ஆனால் இயற்கையன்னையோ ஷாக்ரோவின் உருவில் எனது உற்சாகத்தைக் கண்டு எள்ளி நகையாடுவது போல் என்னைப்பார்த்துச் சிரித்தாள். என் பின்னே யாரோ வேகமாக நடந்து வருவதைப்போலிருந்தது.
“கோபித்துக் கொள்ளாதே'' என்றான் ஷாக்ரோ, என் தோள்களை லேசாகத் தொட்டவாறே “பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாயா? எனக்குத் தெரியாது நான் பிரார்த்தனையே செய்வதில்லை.''
ஒருவிஷமக்காரக்குழந்தை சாதுவாகப் பேசுவதைப்போல் அவன் பேசினான். எனது கோபம் ஒருபுற மிருக்க பீதியும், பயமும் நிறைந்து விசித்திரமாக காட்சியளிக்கும் அசடு வழியும் அவன் முகத்தைப் பார்க்க சகிக்க முடியவில்லை.
"இனி உனக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டேன். நிஜமாக...மாட்டவே மாட்டேன்'' என்று கூறி இல்லை என்ற பாவனையில் தன் தலையைப் பலமாக ஆட்டினான்.
“நீ ரொம்ப அடக்கமாக இருக்கிறாய், உழைக்கிறாய். என்னை வற்புறுத்துவதில்லை. ஏன்... முட்டாள் அதனால் தான்.....”
இதுதான் அவன் கூறிய சமாதானம். கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகு அவனை மன்னிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த காலத்தில் செய்ததை மட்டுமல்ல-எதிர் காலத்தில் செய்யப்போவதைகூட அரை மணி நேரத்தில் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிவிட்டான்.
பக்கத்தில் உட்கார்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தூக்கத்தில் மிகுந்த பலசாலிகள் கூட பாதுகாப்பற்றவராகவும், உதவியற்றவராகவும் இருக்கிறார்கள். ஷாக்ரோவின் நிலைமை இரங்கற்குரியது. அவனது தடித்த உதடுகள் பாதி திறந்து இருந்தன. புருவங்கள் உயர்ந்திருந்த முகத்தில் பயமும் அதிசயமும் ததும்பும் குழந்தையின் பாவம் குடி கொண்டிருந்தது. ஒழுங்காக அமைதியாக அவன் மூச்சுவிட்டான். இடையிடையே ஜார்ஜியா பாஷையில் ஏதேதோ பிதற்றினான். எங்களைச் சுற்றிப் பரிபூரண அமைதி நிலவியது. தொடர்ந்து அது நீடித்திருந்தால் மனம் எங்கெல்லாமோ இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அலைகளின் லேசான சலசலப்பு எங்கள் காதுகளுக்கெட்டவில்லை.
அடர்ந்த புதர்களுக்கு இடையிலிருந்த குழியைப் போன்ற ஒரு இடத்தில் நாங்கள் இருந்தோம். ஷாக்ரோவைப்பற்றி இவ்வாறு என் சிந்தனை ஓடியது.
அவன் எனது வழித்துணை அவனை இங்கு விட்டு விட்டுச் சென்று விட முடியுமா? ஆனாலும் அவனிடமிருந்து என்னாலும் போக முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் அவன் என்னுடைய வழித்துணைவன் கல்லறைக்கும் கூட வருவான்...

4


டியோடேஸியாவில் எங்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. நாங்கள் அங்கு வந்தது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். ஏற்கனவே எங்களைப்போல் நானூறு பேர் அங்கே துருக்கியர்கள், கிரேக்கர்கள், ஜார்ஜியர்கள் -மான்ஸ்க், வால்டோவியா இன்னும் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்திருந்தவர்கள் அங்கிருந்தனர். நகரிலும் சுற்றுப்புறத்திலும் எங்கெங்கும் பட்டினிப்பட்டாளமே காணப்பட்டது.
அந்தமாதிரியானவர்களென்றே எங்களையும் நினைத்துக் கொண்டார்கள் போலும்! கூட்டத்தில் அவர்கள் ஷாக்ரோவின் கோட்டைப் பறித்துக் கொண்டார்கள். அவனுக்கு நான் வாங்கிக் கொடுத்தது அது. என்னுடைய பையையும் கத்தரித்து விட்டார்கள். ஆனால் விஷயத்தை எடுத்துச் சொன்னதின் பேரில் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு ஆத்மார்த்திக உறவு இருப்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். நாடோடிகள், அயோக்கியர்கள் தானென்றாலும் தாராள மனதுடையவர்கள். .
இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொண்டதின் பேரில் கர்ச் என்ற ஊருக்குப் புறப்பட்டோம்.
எனது சகபிரயாணி எவ்வித தொந்தரவும் கொடுக்காமல் தன் வார்த்தையைக் காப்பாற்றிக்கொண்டு வந்தான். அவன் மிகப் பசியோடு இருந்தான். யாராவது சாப்பிடுவதைப் பார்த்து விட்டால் அவன் ஓநாயைப் போல் பல்லை 'நற நற, வென்று கடித்தான். எவ்வளவு சாப்பிட்டால் தன்னுடைய பசி அடங்கும் என்பதை அவன் சொன்னபோது பயந்து விட்டேன். சமீபகாலமாக பெண்களைப் பற்றிய நினைவு அவனுக்கு ஏற்பட்டுக் கொண்டுவந்தது. ஆரம்பத்தில் பெண்களைப்பார்த்து எப்பொழுதாவது பெருமூச்சுவிட்டான். பின்னர் அடிக்கடி பெருமூச்சு விடத் தொடங்கினான். நாளடைவில் கீழ் நாட்டுக் கனவானைப்போல் புன்னகையாக அது மாறியது.
இது எவ்வளவு தூரத்திற்குப் போய்விட்டதென்றால், பெண்ணுடையில் யார் சென்றாலும்--வயதும் உருவமும் எப்படி இருந்தாலும் விடமாட்டான் போலிருந்தது.
பெண்களைப்பற்றி தனக்கு எல்லாம் தெரிந்ததைப்போல் அவன் பேசினான் அவன் பெண்களைப் பார்த்த பார்வையைக் கண்டு எனக்கு வயிற்றைக் கலக்கியது. ஒருசமயம் அவனைவிட பெண்கள் எந்த விதத்திலும் மோசமானவர்களல்ல என்பதை எடுத்துக் கூறினேன். அதைக் கேட்டு அவன் கோபமடைந்தான். அதற்காக என்னுடன் சண்டைபோடக்கூடத் தயாராகிவிட்டான். வயிறு நிரம்புகிறவரை ஒன்றும் சொல்லவேண்டாம் என்று பேசாமலிருந்து விட்டேன்.
கர்ச்சுக்கு கடலோரமாக நாங்கள் செல்லவில்லை. குறுக்கு வழியாகவே சென்றோம். எங்களுடைய பையில் கடைசியாக மிஞ்சிய ஐந்து கோபேக்குகளைக் கொடுத்து தத்தாரியன் ஒருவனிடமிருந்து வாங்கிய மூன்று பவுண்டு எடையுள்ள பார்லி ரொட்டித்துண்டு ஒன்று மட்டுமே இருந்தது. கர்ச்சுக்கு வந்தபொழுது எங்களுக்கு வேலை கிடைக்காதது மட்டுமல்ல. நடக்கக்கூட முடியவில்லை. ஷாக்ரோ எவ்வளவோ அலைந்தும் அவனுக்குப் பிச்சை கிடைக்கவில்லை எங்கும் 'உங்களைப்போல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்' என்ற பதிலே வந்தது--அது உண்மைதான்--மகத்தான உண்மை, பிச்சையெடுத்துப் பிழைக்கின்றவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தனர். அவர்கள் கால் நடையாக, இரண்டு மூன்று பேராகவும், கூட்டம் கூட்டமாகவும் தங்கள் கையிலே குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அல்லது அவர்களை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள், சோகை பிடித்து நீலம் பாய்ந்த மேனியுடைய அந்தக் குழந்தைகளைப் பார்த்தால் அவர்கள் உடலிலே ரத்தம் ஓடுவதாகத் தோன்றவில்லை. ஆனால் சேறு நிரம்பிய அழுக்கடைந்த ஆபாச நீர் ஏதோ ஒன்று ஓடுவதைப் போலிருந்தது. எலும்புகள் உடலைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடும் போல் நீட்டிக் கொண்டிருந்தன. ஒரு தடவை அவர்களைப் பார்த்தாலேபோதும். சகிக்க முடியாத வேதனையால் பார்த்தவர்களின் இதயம் துடிக்கத் தொடங்கிவிடும். பசியோடு அரைநிர்வாணமாக வழி நடந்த களைப்பால் வாடியிருந்த குழந்தைகள் அழக்கூட இல்லை. அவர்களது பல வர்ணக்கண்கள் சுற்றும் முற்றும் எதையோ துழாவிக் கொண்டிருந்தன. முலாம் பழத்தோட்டத்தையோ, அல்லது கோதுமை விளையும் வயல்களையோ கண்டுவிட்டால் அவர்கள் கண்களில் ஆவல் ஒளி வீசும், அவர்கள் தங்கள் பெரியவர்களின் முகத்தை ஏறிட்டு நோக்கும்பொழுது எங்களை இந்த உலகத்தில் எதற்காகப் பிறப்பித்தீர்கள் என்று கேட்பதைப்போலிருந்தது. சில சமயம் ஏதாவதொரு வண்டி குறுக்கே செல்லும். அதிலே எலும்புக்கூட்டைப் போன்று ஒரு கிழவி அமர்ந்து குதிரையை ஓட்டிக்கொண்டிருப்பாள். வண்டிக்குள்ளேயிருந்து சோகம் ததும்பும் குழந்தைகளின் கண்கள், தாங்கள் இதற்கு முன் பார்த்திராத உலகத்தை அதிசயத்துடன் பார்க்கும்.
இன்றோ. நாளையோ என்றிருக்கும் குதிரை நடப்பதாகச் சொல்ல முடியாது; அசைந்து கொண்டிருக்கும். அதைச் சுற்றிலும் பெரியவர்கள் சாரிசாரியாக மெதுவாக தொங்கிய தலையுடனும், ஒளியிழந்த கண்களுடனும் செல்வதைப் பார்த்தால் துக்ககரமான சூழ் நிலையே தோன்றும். மெள்ள மெள்ள திருட்டுத்தனமாக இவர்கள் செல்வதைப் பார்த்தால் அமைதியுடன் ஆனந்தமாக வாழ்கின்ற மக்களின் நிம்மதியைக் குலைக்க அவர்கள் விரும்பவில்லை போல் தோன்றுகிறது. இதைப் போன்ற பலரைக் கடந்து நாங்கள் வந்தோம். பிணமில்லாத பிண ஊர்வலங்கள் எங்கள் பக்கமாக வரும்போதோ அல்லது அவர்களைக் கடந்து நாங்கள் செல்லும்பொழுதோ லேசான குரலில் பயந்துகொண்டே அவர்கள் கேட்பார்கள்:
“கிராமத்துக்கு இன்னும் அதிக தூரம் இருக்கிறதா?" நாங்கள் பதிலளிப்பதைக் கேட்டு பெருமூக்சு விடுவார்களேயன்றி எதுவுமே சொல்லமாட்டார்கள். எனது சக பிரயாணிக்கு பிச்சைத் தொழிலில் தனக்குப் போட்டியாகக் கிளம்பிய இவர்களைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அவன் சொல்வான் : மீண்டும் வந்துவிட்டார்கள். சேச்சே! எதற்காக இவர்கள் வருகிறார்கள்? எங்கே போகிறார்கள்? ரஷ்யாவிலே வேறு இடமா இல்லை? ஒன்றும் புரியவில்லையே, சே! ரஷ்ய மக்கள் எல்லோரும் முட்டாள்கள்…”
முட்டாள் ரஷ்ய மக்கள் ஏன் கிரிமியாவுக்கு வர நேர்ந்தது என்பதை நான் எடுத்துச் சொல்லும்பொழுது அதை நம்பாதவனைப்போல் தலையை ஆட்டிக்கொண்டே அவன் சொல்வான்: "எனக்குப் புரியவில்லை. அது எப்படி நடக்க முடியும்? ஜார்ஜியாவிலே, அம்மாதிரி முட்டாள் தனம் எங்களிடையே இல்லையே''
மிகுந்த பசியுடனும், களைப்புடனும் கர்ச் வந்து சேர்ந்தோம். நாங்கள் வரும்பொழுது இருட்டிவிட்டது நாங்கள் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமலில்லை. நாங்கள் வருவதற்குச் சற்று முன்புதான் சந்தேகாஸ்பதமான பேர்வழிகளும், நாடோடிகளும், அங் கிருந்து விரட்டப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியும். போலிஸாரிடம் சிக்கிவிடுவோமோ என்ற பயம் எங்களுக்கிருந்தது. அதோடு ஷாக்ரோ வேறொவருடைய 'பாஸ் போர்ட்'டில் பிரயாணம் செய்து கொண்டு வந்தான். அது பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம்.
கடலருகே ஒரு மறைவிடத்தில் நாங்கள் தங்கியதால் இரவு பூராவும் அலைகள் தாராளமாக எங்கள் மீது நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தன. உடலெல்லாம் நனைந்து, நடுக்கம் தாங்காமல், ஊர்ந்து கொண்டே மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டோம். நாள் பூராவும் கடல் ஓரமாகவே சென்று கொண்டிருந்தோம். எங்களால் சம்பாதிக்க முடிந்ததெல்லாம் பத்து கோபெக்குகள்தான். பாதிரியாரின் மனைவி, கடைத் தெருவில் வாங்கிய பழங்களைத் தூக்கிக் கொண்டு வந்ததற்காக கொடுத்த கூலி அது.
நாங்கள் ஒரு ஜலசந்தியைக் கடக்க வேண்டியிருந்தது. நாங்கள் துடுப்புப் போடுவதாகச் சொல்லியும் எந்த படகுக்காரனும் எங்களை ஏற்றிச் செல்ல ஒத்துக்கொள்ளவில்லை.
மாலை வந்தது. துணிகரமான காரியம் ஒன்றைச் செய்வதென முடிவு செய்தேன். இரவு அதைச் செய்தும் விட்டேன்.

5


இரவில் நானும் ஷாக்ரோவும், சுங்கக் காவல் கப்பலுக்குச் சென்றோம். அதன் அருகே மூன்று படகுகள் கரையிலிருந்த கல் முளையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. படகுகள் அசைந்தாடி ஒன்றொடொன்று மோதிக் கொண்டிருந்தன. முளையில் கட்டியுள்ள சங்கிலியை எடுத்து படகுகளை விடுவிப்பது சுலபமாக இருந்தது.
எங்களுக்கு மேலே பனிரெண்டடி உயரத்தில் சுங்கக்காவல் சிப்பாய்கள் சீட்டியடித்தவாறே நடை போட்டுக்கொண்டிருந்தனர். எங்கள் அருகே அவன் வந்தபோது வேலையை நிறுத்தி விட்டு நான் பேசாமலிருந்தேன். இந்த முன் ஜாக்கிரதையும் அவசியமற்றதுதான். அலைகளால் அடித்துக் கொண்டு போகக் கூடிய அபாயத்தில், கழுத்தளவு நீரில் ஒருவன் இருக்க முடியும் என்று அவன் எதிர்பார்க்க முடியாதல்லவா? மேலும் சங்கிலிகள் வேறு உராய்ந்து மோதி சத்தமிட்டுக்கொண்டிருந்தன. ஷாக்ரோ ஏற்கனவே படகிலேறி நீட்டிப் படுத்து விட்டான். அங்கிருந்தபடியே அவன் ஏதோ முணு முணுத்தான். அலைகளின் இரைச்சல்களுக்கிடையில் அது என் காதுகளில் விழவில்லை. சங்கிலியை முளையிலிருந்து கழட்டி விட்டேன். திடீரென்று ஒரு அலை படகைக் கரையிலிருந்து முப்பது அடிக்கப்பால் அடித்துக் கொண்டுபோய்விட்டது. சங்கிலியைக் கையில் பிடித்தவாறே நீந்திச்சென்று படகில் ஏறிக்கொண்டேன். எங்களிடம் இரு மரப்பலகைகள் இருந்தன. அதையே துடுப்பாக உபயோகித்து படகைச் செலுத்தினேன்.
ஆகாயத்திலே மேகங்கள் ஊர்ந்து சென்றன. அலை ஓயாது அடித்துக் கொண்டிருந்தது. படகு ஒரு புறம் தாழ்ந்து திடீரென உயர எழும்பியது. ஷாக்ரோ அலறிகொண்டே என் மீது வந்து விழுந்தான். காலை படகில் அழுத்தமாக ஊன்றிக் கொள்ளுமாறும், கத்த வேண்டா மென்றும் கத்தினால் காவலாளியின் காதில் விழுந்துவிடுமென்றும் அவனுக்குச் சொன்னேன். அதன்பிறகு அவன் மௌனமானான். அவன் முகம் வெளுத்துக் கொண்டே வந்ததைக் கண்டேன். சுக்கானைப் பிடித்தபடியே அவன் உட்கார்ந்திருந்தான். நாங்கள் இடம் மாறி அமர அவகாசமில்லை. படகில் அவ்வாறு செய்யப் பயந்தேன். சுக்கானை எப்படித் திருப்பவேண்டுமென்று என்னிடத்திலிருந்தபடியே சொன்னேன் அதை அவன் புரிந்து கொண்டு நீண்ட நாள் பழக்கப்பட்டவனைப்போல் சுக்கானைக் கையாண்டான். துடுப்புகளாக உபயோகப்படுத்திய மரப்பலகை என் கையை எல்லாம் சிராய்த்துவிட்டது. காற்று எங்களை நோக்கியடித்தது. படகை அது எங்கே இழுத்துச் செல்லுமென்று தெரியவில்லை. கர்ச்சில் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்ததால் எங்களுடைய பாதை தெரிவது ஒன்றும் சிரமமாயில்லை. அலைகள் பலமாக அடித்து படகைத் தள்ளிக்கொண்டு சென்றன. அவ்வப்போது உள்ளத்திலும் உணர்விலும் பயமூட்டும் ஒருவித சப்தம் எங்கள் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. கடலைக் கிழித்துக் கொண்டு படகு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அதை நாங்கள் கட்டுப்படுத்த முடியவில்லை. படகு அதல பாதாளத்தில் தாழ்ந்தும் திடீரென்று உயர்ந்தும் சென்றுகொண்டிருந்தது. அதனால் போகின்ற பாதை தெரியாமல் பயங்கரமாக இருந்தது. கோபத்துடன் கொந்தளிக்கின்ற கடலுக்குக் கரையே இல்லை போல் தோன்றியது. ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கிற அலையைத் தவிர வேறதுவும் கண்ணுக்குப் புலனாகவில்லை.
பலமாக அடித்த ஒரு அலை என் கையிலிருந்த மரப்பலகைகளில் ஒன்றைப் பறித்துக்கொண்டு விட்டது. மற்றொரு பலகையை படகிலேயே போட்டுவிட்டு இரு புறமும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். படகு உயர எழும்பிய போதெல்லாம் ஷாக்ரோ உரத்துக் கூச்சலிட்டான். காது செவிடு படும்படியான இரைச்சலுக் கிடையே அந்த இருளில் நான் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தேன். சுற்றிலும் மரண பயமே நிலவியது. மரணம் தவிர்க்க முடியாததுதான். தீயில் வெந்து இறப்பதா அல்லது நீரில் மூழ்கிச் சாவதா என்ற பிரச்சனை எழுந்தால் முதலாவதைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன்.
”பாய்மரம் கட்டிப் படகைச் செலுத்துவோம்” என்றான் ஷாக்ரோ.
”பாய்மரத்துக்கு எங்கே போவது” என்று கேட்டேன்.
”என்னுடைய கோட் இருக்கிறது'' என்றான்.
”அதை இங்கே விட்டெறி. சுக்கானை விட்டுவிடாதே!"
ஷாக்ரோ கோட்டைக் கழற்றிப் பிடித்துக்கொள் என்று சொல்லி என்னிடம் வீசி எறிந்தான். . எப்படியோ படகின் மேல் பலகை ஒன்றைக் கழட்டி விட்டேன். கோட்டின் ஒரு கையை அதிலே நுழைத்து ஆசனத்தில் நிறுத்தி உறுதியாகப் பிடித்துக்கொண்டு கோட்டின் இன்னொரு கையை நுழைப்பதற்காகக் கையை எடுத்தபோது திடீரென்று எதிர்பாராதது நடந்தது. படகு உயரே எழுப்பி அதள பாதாளத்திலே தாழ்ந்தது.
நான் கடலில் தூக்கி யெறியப்பட்டேன். ஒரு கையில் கோட்டு இருந்தது. இன்னொரு கை படகிலிருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தது. உப்பு நீர் காது மூக்கு வாய் எல்லாவற்றிலும் புகுந்து விட்டது. இரு கைகளாலும் கயிற்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். கோட்டை படகுக்குள் வீசி யெறிந்து விட்டு படகில் ஏறி விட முயன்று கொண்டிருந்தேன். பத்து தடவை முயன்றபின் வெற்றி பெற்றேன்.
படகிலேறி உட்கார்ந்ததும் தலை கீழாக ஷாக்ரோ நீரில் விழுவதைக் கண்டேன். நான் பிடித்துக் கொண்டிருந்த கயிற்றை அவன் தன் இருகைகளிலும் பற்றியிருந்தான். 'ஜாக்கிரதை'' என்று கத்தினேன்.
அச்சமயம் நீர் மட்டம் மேலே உயர்ந்து படகின் அருகிலே அவன் தள்ளப்பட்டான். சட்டென்று அவனைப் பிடித்துக் கொண்டேன். எங்கள் இருவர் முகமும் நேருக்கு நேராக இருந்தது. குதிரை மீதமர்ந்திருப்பதைப்போல் படகில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். எச்சமயமும் அலை என்னைக் கீழே தள்ளி விடலாம் என்ற அபாயம் இருந்தது. என்முன் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டான் ஷாக்ரோ. அவன் உடலெல்லாம் வெட வெட வென்று நடுங்கியது. பற்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. உடனே ஏதாவது செய்தாக வேண்டும். படகின் அடியிலே கொழுப்பைத் தடவியதுபோல் வழவழ வென்றிருந்தது. நீரில் குதித்து ஒரு புறம் கயிற்றைப் பிடித்துக்கொள்ளுமாறும் நானும் மறுபுறம் அவ்வாறே செய்வதாகவும் ஷாக்ரோவிடம் கூறினேன். பதிலெதுவும் சொல்லாமல் அவன் தன் தலையினால் மார்பில் மோதினான். கோர நடனம் புரிந்த அலைகள் நீரை வாரியடித்துக் கொண்டிருந்தன. என் காலிலே சுற்றிக் கொண்ட கயிறு காலில் உராய்ந்து அறுத்துக் கொண்டிருந்தது. கண்ணுக் கெட்டிய தூரம் வரை எழும்பி எழும்பி அடங்குகின்ற அலைகளைத்தவிர வேறெதுவும் புலனாகவில்லை.
முன்பு சொன்னதையே ஷாக்ரோவிடம் மீண்டும் ஒருமுறை கட்டளையிடுவதைப்போல் சொன்னேன். அவன் அசைந்து கொடுக்க வில்லை. அச்சமயம் தாமதம் செய்வதற்கில்லை. என்னைப்பற்றி யிருந்த அவன் கைகளை விடுவித்து அவனை நீரில் தள்ள முயன்றேன். அப்பொழுது மிகப்பயங்கரமான ஒன்று நடந்தது; “என்னை மூழ்கடிக்கப் போகிறாயா?'' என்று என் முகத்தைப்பார்த்தவாறே ஷாக்ரோ கேட்டான்.
எவ்வளவு பயங்கரமான விஷயம்! அவன் கேட்ட கேள்வி மட்டுமல்ல கேட்ட விஷயம் இன்னும் பயங்கரமானது. இறக்குந்தறுவாயில் இருக்கும் ஒருவன் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்து இரக்கம் காட்டுமாறு கெஞ்சிக் கேட்பதைப் போலிருந்தது. பிணைத்தைப்போல் வெளுத்திருந்த நனைந்த அவன் முகத்திலிருந்த கண்கள் இன்னும் பயங்கரமாக இருந்தன.
"பலமாகப் பிடித்துக்கொள்'' என்று கூவி கயிற்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு நானும் நீரில் இறங்கினேன், மிதந்துகொண்டிருந்த எங்களுக்கு கரை அருகே இருப்பதற்கான அறிகுறி எதுவும் புலனாகவில்லை. அந்த இடத்தில் கடல் சற்று அமைதியாக இருந்தது. ஏதோ முணு முணுத்தவாறே சிரித்தான். சுற்றிலும் ஆவலுடன் பயங்கரமாக இருந்தன. என் காலிலே ஏதோ மோதியதைப்போலிருந்தது. திடீரென்ற ஏற்பட்ட வலிக்குக் காரணம் தெரியவில்லை. ஏதோ ஒரு உணர்வு என்னுள் எழுந்தது. வெறி பிடித்தவனைப் போலாம் விட்டேன். முன்னெப்போதையும்விட அதிகமான பலம் எனக்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன். ''அதோ கரை என்று கத்தினேன்.
புதிதாக நாடுகளைக் கண்டு பிடிக்கச் செல்பவர்கள் இதே வார்த்தையை இன்னும் அதிக உணர்வுடன் சொல்வார்களோ என்னவோ? என்னைவிட உரக்கக் கத்தியிருக்க முடியாது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஷாக்ரோ ஊளையிட்டான். இருவரும் நீரில் கிடந்தோம்.
மார்பளவு நீரிலே மிதந்துகொண்டிருந்த எங்களுக்கு கரை அருகே இருப்பதற்கான அறிகுறி எதுவும் புலனாகவில்லை. அந்த இத்தில் கடல் சற்று அமைதியாக இருந்தது. அலைகள் லேசாகத்தான் அடித்துக்கொண்டிருந்தன.
அதிருஷ்ட வசமாக படகை நாங்கள் விட்டுவிடவில்லை கயிற்றைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, படகு பின்னேவர நீரில் நீந்திக்கொண்டிருந்தோம். ஷாக்ரோ ஏதோ முணுமுணுத்தவாறே சிரித்தான். சுற்றிலும் ஆவலுடன் பார்த்தேன். இருள் சூழ்ந்திருந்தது.
எங்களுக்குப் பின்னேயும் வலப்புறமும் அலை ஓசை அதிகமாகவும், இடப்புறம் அமைதியாகவும் இருக்கவே இடப்புறம் சென்றோம். காலடியில் மணல் தட்டுப்பட்டது. ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் இருந்தன. சில இடங்களில் முழங்கால் அளவுதான் நீர் இருந்தது. பெரும் பள்ளங்கள் எதிர்ப்படும்போதெல்லாம் ஷாக்ரோ அலறினான். பயத்தினால் என் உடல் நடுங்கியது. திடீரென்று எங்கள் முன்னே 'முணு முணுக்' கென்று எரியும் தீ ஜ்வாலை கண்ணுக்குப்பட்டது. தனது பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி ஷாக்ரோ கத்தத் தொடங்கினான். அவனை நான் அடக்கினேன். அவன் கத்துவதை நிறுத்திய போதிலும் விம்மியழுவது மட்டும் வெகுநேரம் கேட்டது. என்ன சொல்லியும் அவனை சமாதானப் படுத்த முடியவில்லை. நீர்மட்டம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது...... 'முழங்காலளவிலிருந்து இப்பொழுது கணுக்காலளவே இருந்தது....... இப்பொழுது தண்ணிரே இல்லை. இதுவரை படகைப் பிடித்துக் கொண்டு வந்த நாங்கள் அதை நீரிலே விட்டுவிட்டோம். முறிந்து விழுந்திருந்த மரம் ஒன்று எங்கள் பாதையிலே எதிர்ப்பட்டது. அதைத் தாண்டிக் குதித்தோம். கால்களிலே ஏராளமான முட்கள் குத்துவதைப் போலிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் தீயை நோக்கி ஓடினோம். ஒரு வெர்ஸ்ட் தூரத்திலே இருந்த தீஜ்வாலை எங்களைச் சந்தித்ததிலே மகிழ்வடைந்ததைப் போல் கொழுந்துவிட்டெரிந்தது தரையிலே படர்ந்த அதன் நிழல்கள் பயங்கரமாக இருந்தன.........

6


மயிரடர்ந்த மூன்று பெரிய நாய்கள் திடீரென்று இருளிலிருந்து தாவி எங்கள் மீது பாய்ந்தன. தேம்பிக் கொண்டிருந்த ஷாக்ரோ பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டே தரையில் சாய்ந்தான். கையிலிருந்த ஈரக் கோட்டை நாய்களின் மீது விட்டெறிந்துவிட்டு கல்லாவது கம்பாவது கிடக்கிறதா என்று பார்ப்பதற்காகக் கீழே குனிந்தான். புல்லைத்தவிர அங்கு வேறொன்றுமே இல்லை. நாய்கள் மூர்க்கத்தனமாக எங்களைத் தாக்கின; இருவிரல்களை வாயிலே வைத்துக்கொண்டு பலமாகச் சீட்டியடித்தேன். அவை பின்னோக்கி ஓடின. எங்களை நோக்கிப் பலர் ஓடி வருவது போலவும், பேச்சுக்குரலும் கேட்கத் தொடங்கியது.... சற்று நேரத்துக்கெல்லாம் கணப்புத் தீயைச்சுற்றி நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ஆட்டுத்தோல் உடையணிந்திருந்த நான்கு இடையர்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்கள் சந்தேகத்துடன் எங்களைப் பார்த்தவாறே மௌனமாக நான் சொன்ன கதையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இரண்டு பேர் தரையிலமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள்; அடர்ந்து கருத்த தாடியுடையவனும். உயரமானவனுமான ஒருவன் தன் கைத்தடி மீது சாய்ந்தவாறே பின்புறம் நின்று கொண்டிருந்தான். நான்காமவன் சுருண்ட கேசமுடைய இளைஞன். அவன் அழுது கொண்டிருந்த ஷாக்ரோவுக்கு உடையைக் கழற்ற உதவிக் கொண்டிருந்தான் அருகே அவர்களின் தடி கிடந்தது.
முப்பதடிக்கப்பால் தரையில் சாம்பல் நிறத்தில் ஏதோ அடர்த்தியாகப் படர்ந்திருப்பதைப்போல் இருந்தது. கூர்ந்து நோக்கிய பின்னர் தான் அது நெருங்கிப் படுத்திருந்த ஆட்டுமந்தையென்று தெரிந்தது. சில சமயம் அவை இரக்கமாகக் கத்தின.
நெருப்பில் கோட்டைக் காய வைத்தபடியே நடந்ததனைத்தையும் அவர்களிடம் சொன்னேன், படகு எங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதையும் கூறினேன். “இப்போது அந்தப் படகு எங்கே?'' என்று கேட்டான் நரைத்த தலையையுடைய கிழவன் என்மீது வைத்த கண் வாங்காமல். நான் சொன்னேன். “மைக்கேல் போய்த்தேடிப்பார்'' என்றான்.
கருத்த தாடியையுடைய மைக்கேல், தன் கைத்தடியைத் தோளில் சாய்த்துக்கொண்டு கரையை நோக்கிச் சென்றான். கோட்டு நன்றாகக் காய்ந்து விட்டது. ஷாக்ரோ, தன் வெற்றுடம்பில் அதைப் போட்டுக் கொள்ளப்போன போது ''முதலில் உன் உடலை உஷ்ணப்படுத்திக்கொள்'' என்றான் கிழவன். முதலில் ஷாக்ரோவுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவன் நிர்வாணமாக நெருப்பைச் சுற்றிக் குதித்தோடத் தொடங்கினான். அது பயங்கரமான நடனத்தைப் போலிருந்தது. இதைப் பார்த்து இரண்டு இடையர்கள் உரத்த குரலில் விழுந்து சிரித்தனர். கிழவர் அவனுடைய ஆட்டத்துக்குத் தகுந்தாற்போல் ஏதோ ஒரு விதமான தாளம் போட்டுக்கொண்டிருந்தார். மீசையை முறுக்கிக்கொண்டு தலையை ஆட்டிய படியே கவனமாக அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, 'சபாஷ்' 'பேஷ்' என் றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். கணப்புத்தீயின் ஒளியிலே அவன் பாம்பைப்போல் நெளிந்தான். குதித்தும் குட்டிக்கரணம் போட்டும் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பான் அவன், உடலிலேயே அரும்பிய வியர்வைத் துளிகள் தீ ஜ்வாலை பட்டு ஜ்வலித்தன. அவை ரத்தத்துளிகளைப்போல் செந்நிறமாகக் காட்சியளித்தன.
இப்பொழுது மூன்று இடையர்களும் கையால் தாளம் போடத் தொடங்கினர். குளிரினால் வெட வெடத்துக் கொண்டிருந்த நான் அக்கினியிலே குளிர் காய்ந்து கொண்டிருந்தேன். ஷாக்ரோ தரையிலமர்ந்து கோட்டை உடல் மீது சுற்றிக்கொண்டு தன் கரிய கண்களால் என்னைப் பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வேதனை தரும் உணர்வெழுப்பிய ஏதோ ஒன்று அவன் பார்வையிலே தொனித்தது. அவர்கள் எனக்கும்; ரொட்டியும் உப்புப்போட்ட கொழுப்பும் தின்னக் கொடுத்தார்கள்.
மைக்கேல் வந்து மௌனமாக கிழவன் அருகில் அமர்ந்தான்.
''என்ன ஆயிற்று?'' என்று கேட்டான் கிழவன், "அடித்துக் கொண்டு போகவில்லையா?"
'இல்லை''
மீண்டும் என்னை வெறித்துப் பார்த்தவாறே மௌனமாயிருந்தனர். யாரையும் குறிப்பாகப் பார்க்காமல் மைக்கேல் சொன்னான்: ''என்ன செய்வது? அவர்களை எங்கே அழைத்துச் செல்வது! ஸ்டேஷனுக்கா? சுங்கக் காரியாலயத்துக்கா?" ஓ! இவ்வளவு தானா? என்று நான் நினைத்தேன். மைக்கேலுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஷாக்ரோ மென்று விழுங்கி உதட்டைக் கடித்துக் கொண்டான். "ஸ்டேஷன், சுங்கம் இரண்டிடத்திற்கும் அழைத்துக் கொண்டு போகலாம். முதலாவது தான் நல்லது.... ......... மற்றது.............?'' என்றான் சற்று நேர மௌனத்துக்குப் பின் கிழவன். ''சர்க்காருக்குச் சொந்தமான எதையாவது திருடினால் அதன் பலனை அனுபவிக்க வேண்டியது தான்”
தாத்தா! கொஞ்சம் பொறுங்கள்'' என்றேன். ஆனால் நான் சொன்னதை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை. திருடக்கூடாது. அதற்குத் தண்டனை கொடுக்காவிட்டால் மீண்டும் திருடத்தான் தூண்டும்'' அலட்சியமாகப் பேசினார் கிழவர். அதை ஆமோதிப்பது போல் மற்றவர்கள் மௌனமாகத் தலையை ஆட்டினர். "அதுதான் சரி. அவன் திருடினான். அகப்பட்டுக் கொண்டதால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.” ”மைக்கேல்! படகு அங்கே இருக்கிறதா?''
”ஆம்”
“தண்ணீர் அடித்துக் கொண்டுபோய் விடாதே”
"போகாது”
”அது அங்கேயே இருக்கட்டும். நாளை சர்ச்சுக்குப் போகும்போது அதை எடுத்துக் கொண்டு போகலாம். காலிப் படகைக் கொண்டு வந்திருக்கக் கூடாதா?'' ”நாடோடிப் பயல்களே! உங்களுக்குப் பயமில்லை? இன்னும் கொஞ்ச தூரம் போனால் கடலிலே மூழ்கி இருவரும் காலியாகி இருப்பீர்களே?'' கிழவன் மெளனமாகி கேலி செய்வதைப்போல் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். "ஏன் பேசாமல் இருக்கிறாய்?'' என்று அவன் என்னைக் கேட்டான். அவன் என்னைக் கேலி செய்வதாகவே பட்டது, "நீ கேட்பது தெரிகிறது'' என்றேன் . "அதற்கு என்ன சொல்கிறாய்?'' என்று கோபமாகக் கேட்டான் கிழவன். "ஒன்றுமில்லை'' "உனக்கு ஏன் கோபம் வருகிறது? உன்னைவிட வயதானவர்களிடம் கோபமாகப் பேசுவது சரியா?' அது சரியில்லை என்பதை உணர்ந்துதான் மௌன மாயிருந்தேன், "சாப்பிட இன்னும் கொஞ்சம் வேண்டாமா?'' என்று தொடர்ந்து கேட்டான் கிழவன், வேண்டாம், ''சரி சாப்பிடாதே. வேண்டா மென்றால் சாப்பிடாதே, வழிக்கு ரொட்டி மட்டும் போதுமா?'' சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தேன். ஆனாலும் விட்டுக் கொடுக்கவில்லை போகும்போது எடுத்துக் கொண்டு போகிறேன்,' என்றேன் நிதானமாக. " ஏய்! அவனுக்குப் பிரயாணத்திற்கு ரொட்டியும் கொழுப்பும் கொடு. வேறு எது இருந்தாலும் கொடு.'' அப்படியானால் அவர்கள் போகிறார்களா? என்று மைக்கேல் கேட்டான். மற்ற இருவரும் கண்களை உயர்த்திக் கிழவனைப் பார்த்தனர். ''பின் அவர்களை என்ன செய்வது?'' ''ஸ்டேஷனுக்காவது சுங்கக் காரியாலயத்துக்காவது அழைத்துப்போவதாக இருந்தோமே?'' என்றான் மைக்மேல் ஏமாற்றம் தொனிக்க. ஷாக்ரோ நிம்மதியாகத் தீயருகில் உட்கார்ந்திருந்தான். 'அதமானில் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்வதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை வேண்டுமென்றால் அவர்களே போகட்டும்.” “படகை என்ன செய்வது?' என்றான் மைக்கேல் விடாமல் ''படகா? இன்னும் இருக்கிறதா? என்று கேட்டான் கிழவன். 'ஆமாம்.''
அது அங்கேயே இருக்கட்டும். காலையில் இவாஷ்கா அதை எடுத்துக் கொண்டு போவான். வேறு என்ன செய்வது?'' அசையாமல் கிழவனையே பார்த்தேன். வெயிலிலும், மழையிலும் அடிபட்டுக் கருத்துப்போயிருந்த அவன் முகத்தில் எவ்வித சலனத்தையும் நான் காண முடியவில்லை. ''அசிங்கமாக ஏதாவது நடந்துவிட்டதா?'' என்றான் மைக்கேல். உன் நாக்கை அடக்காவிட்டால் ஒன்றுமே நடக்காது, அவர்களை அதமானுக்கு அழைத்துக்கொண்டு போனால் அவர்களுக்கும் நமக்கும் அதனால் தொந்தரவு. வேலையை நாம் கவனிக்க வேண்டியதுதான். அவர்கள் போகவேண்டியதுதான், ஏய் எதுவரை போக வேண்டும்,'' "டிப்லிஸ் வரை'
“ஓ! நீண்ட தூரம். உம் போகட்டும்''
“ சரி போகட்டும்'' என்று சொல்லி மற்றவர்களும் ஆமோதித்தார்கள். ”நீங்கள் போங்கள் இளைஞர்களே'' என்று சொல்லி கிழவன் கையை ஆட்டினான். ''படகை நாங்கள் அதன் இடத்துக்கு அனுப்பி விடுகிறோம். சரிதானே?'' ''வந்தனம் தாத்தா!'' என்று கூறி தொப்பியை எடுத்து வணங்கினேன். ''எதற்காக வந்தனம் கூறுகிறாய்' '? 'வந்தனம் சகோதரர்களே. வந்தனம் '' என்று தொடர்ந்து உற்சாகத்துடன் கூறினேன். ''எதற்காக இந்த வந்தனம்? விசித்திரமாக இருக்கிறதே! கடவுளிடம் போங்கள் என்கிறேன். அதற்கு வந்தனம் என்கிறானே ஒருவேளை பூதத்திடம் போகுமாறு நான் சொல்வேன் என்று பயப்படுகிறானோ"? ''உண்மையிலேயே நான் பயந்துகொண்டுதானிருந்தேன்'
''ஓ'' கிழவன் தன்புருவங்களை உயர்த்திக் கொண்டு சொன்னான் ''கெட்ட பாதையை ஓருவனுக்கு நான் ஏன் காட்டவேண்டும்? நான் செல்கின்ற பாதையையே காட்டுவது தான் நல்லது. ஒருவேளை நாம் மீண்டும் சந்திக்கலாம். அப்போது நாம் முன்பே அறிமுகமானவர்களாக இருப்போம். சில சமயம் பரஸ்பரம் உதவிக்கொள்ளத் தேவைப்படலாம் ... போய்வாருங்கள்'' அவன் தனது ஆட்டுரோமத்தினாலான தொப்பியை எடுத்து விட்டு வணங்கினான். இதர சகாக்களும் வணங்கினார் அனப்பாவுக்குப் போகும் வழியைக் கேட்டுத்தெரிந்துகொண்டு நாங்கள் கிளம்பினோம் . ஷாக்ரோ எதைப்பற்றியோ நினைத்துக்கொண்டு சிரித்தான்.

7

''எதைப்பார்த்து சிரிக்கிறாய்?'' என்று கேட்டேன். கிழவன் சொன்னதைக் கேட்டு எனக்கு ஒரேகுழப்பமாயிருந்தது. ஷாக்ரோ என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியவாறே இன்னும் உரக்கச்சிரித்தான். அதைப் பார்த்து நானும் புன்முறுவலித்தேன். கணப்புத் தீயருகில் அந்த இடையர்களுடன் இரண்டு மூன்று மணிநேரம் கழித்ததும் அவர்கள் அளித்த ரொட்டியும் கொழுப்பும் எங்கள் உடலில் வலியேற்படுத்தின. இதுவும் கொஞ்ச தூரம் நடந்தால் சரியாகப் போய்விடும். ''எதற்காக சிரிக்கிறாய்? இன்னும் உயிரோடு இருக்கிறோமேயென்று ஷாக்ரோ இல்லை யென்று தலையை ஆட்டினான் தன் முழங்கைகளால் நெட்டித் தள்ளி விட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தவன் சொன்னான்.
''உனக்குப் புரியவில்லையா? இல்லை? இப்பொழுதே தெரிந்து கொள்வாய். அதமானுக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தால் நான் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?... தெரியாது?...உன்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். அவன் என்னை மூழ்கடிக்க விரும்பினான் என்று அழுதிருக்க வேண்டும். என்மீது இரக்கம் கொண்டு என்னைச் சிறையில் தள்ளாமல் இருந்திருப்பார்கள். புரிகிறதா?'' முதலில் இதைத் தமாஷாகவே எடுத்துக்கொண்டேன். ஆனால் அவன் தமாஷாகச் சொல்லவில்லை என்பதை எனக்குப் புலப்படுத்தத் தொடங்கினான். முரட்டுத்தனமாக அவன் கூறியதைக் கேட்டு எனக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக இரக்க உணர்ச்சியே எழுந்தது.
நீ என்னைக் கொல்ல நினைத்தாய் என்று புன்னகையு டன் ஒருவன் நேருக்கு நேரே கூறும் பொழுது நான் என்ன தான் செய்வது? அவன் நினைப்பது தவறென்பதை விளக்க எவ்வளவோ முயன்றேன். அதை அட்சேபித்து அவன் விஷயத் தில்எனக்கு அக்கறை இல்லை என்பதாகச் சொன்னான். திடீரென்று ஒரு குரூரமான எண்ணம் எனக்கேற்பட்டது. "கொஞ்சம் இரு நான் உன்னை மூழ்கடிக்க விரும்பினேன் என்பதை உண்மையாகவே நம்பினாயா?'' 'இல்லை என்னை நீ நீரில் தள்ளிய பொழுது அப்படித்தான் நினைத்தேன். ஆனால் நீயும் இறங்கியதும் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.'
''கடவுள் வாழ்க'' என்று கத்தினேன் 'அதற்காக உனக்கு வந்தனம்.
"எனக்கெதற்கு வந்தனம்? நானல்லவா உனக்குக் கூற வேண்டும். கணப்புத் தீயருகே இருவரும் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தோம். அப்பொழுது உன்னுடைய கோட்டை காயவைத்து என்னிடம் தான் கொடுத்தாய். நீ போட்டுக் கொள்ளவில்லை. உனக்கென்று நீ எதையுமே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக உனக்கு வந்தனம். நீ மிகவும் நல்லவன்-டிப்லிஸுக்கு போனதும் எல்லாவற்றிற்கும் பிரதியாக உனக்குக் கிடைக்கும். உன்னை என் தந்தையிடம் அழைத்துப் போவேன் இவனுக்கு உணவும் உடையும் கொடுங்கள் என்று சொல்லுவேன். நீ எங்கள் உடனேயே இருக்கலாம் - எங்கள் தோட்டக்காரனாக. வேண்டியதை யெல்லாம் சாப்பிடலாம். குடிக்கலாம் அப்புறம் உனக்கு கஷ்டமே இருக்காது. இருவரும் சேர்ந்தே சுகமாக சுகமாக உண்டு களித்திருக்கலாம். டிப்லிஸில் உள்ள தன் வீட்டில் எனக்கு என்ன சௌகரியங்களை யெல்லாம் செய்து கொடுக்கப் போகிறாள் என்பதைப் பற்றி விரிவாகச் சொன்னான். புதிய லட்சியத்துடனும் அபிலாஷையுடனும் தனிவழியே செல்கின்ற மக்கள் சந்தோஷத்தை இழந்து அழிந்து போகிறார்கள் எப்படி என்பதைப்பற்றி எண்ணமிட்டேன். அவர்களுக்கு எதிர்ப்படுகின்ற வழித் துணைவர்கள் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள் தனித்துச் செல்கிற அவர்களுக்கு வாழ்க்கை பெரும் சுமையாக இருக்கும். பொழுது புலர்ந்தது. தூரத்தில் கடல் பொன்னிறமாக காட்சியளித்தது. ''தூக்கம் வருகிறது'' என்றான் ஷாக்ரோ. நாங்கள் நின்றோம். கரைக்கருகே மணலிலிருந்த ஒரு பள்ளத்தில் படுத்துக் கொண்ட அவன் விரைவிலேயே தூங்கிவிட்டான். அவன் அருகே அமர்ந்து கடலைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடல் குமுறிக் கொண்டிருத்தது. அலைகள் புரண்டடித்தவாறே மணல் மீது வந்தடங்கின. மணலில் நீர்பட்டு அதைத் தன்னுள் இழுத்துக்கொள்ளும் சப்தம் 'உஸ்' ஸென்றெழுந்து. ஒன்றன் பின் ஒன்றாக பெரிய பெரிய அலைகள் உயர எழும்பி உருண்டோடி வந்து கரையைத் தாக்கின. தனது எல்லையை விஸ்தரித்துக்கொள்ள விரும்புவதைப் போல் ஆக்ரோஷமாகப் பாய்ந்தடித்த அலைகள் நுங்கும் நுரையுமாகக் காட்சியளித்தன. அடிவானத்திலிருந்து கரைவரை அலைகள் ஒரே நோக்கத்துடன் ஒயாது அடித்துக் கொண்டிருந்தன. கதிரவன் ஒளிபட்டு அவை பளபளத்தன. தூரத்தில் கடல் ரத்த சிவப்பாக காட்சியளித்தது. ஏதோ ஒரு இசைக்கேற்ப தாளமிடும் வகையில் குறிப்பிட்ட ஒரு நோக்கத் திற்காக அந்நீர்ப்பரப்பில் ஒவ்வொரு துளியும் துளும்புவது போலிருந்தது.
அமைதியற்ற நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு பெரும் நீராவிக்கப்பல் ஒன்று கம்பீரமாக சென்று கொண்டிருந்தது. கப்பலின் பக்கவாட்டில் அலைகள், ஆத்திரத்துடன் குமுறியடித் துக்கொண்டிருந்தன. சூரியன் ஒளிபட்டுப் உறுதியுடன் அழகாக செல்லும் அந்தக்கப்பலை பார்க்கும் போது மனிதர்களையெல்லாம் ஆட்டிவைக்கின்ற ஆக்க சக்தி ஒன்றின் நினைவே எனக்கு எழுந்தது.

8

டையர்ஸ்கா வழியாக சென்றோம். எங்களுக்குப் போதுமான அளவு கூலி கிடைத்ததால் பசியோடில்லாதிருந்த போதிலும் ஷாக்ரோ ஏனோ கொதித்துக் குமுறிக் கொண்டிருந்தான். எந்த வேலையையும் தன்னால் செய்ய முடியாது என்று சொல்லிகொண்டு வந்தான். ஒரு யந்திரத்தில் அரைநாள் வேலை செய்வதற்குள்ளாகவே கையெல்லாம் காயப்பட்டு ரத்தக்களரியாக்கிக் கொண்டு விட்டான்.
ஒரு சமயம் இரண்டு நாள் வேலை செய்வோம். ஒருநாள் பிரயாணத்தைத் தொடர்வோம். இவ்வாறாக நாங்கள் மெல்லச் சென்று கொண்டிருந்தோம். ஷாக்ரோ வயிறு வெடிக்கத் தின்றான். அதனால் வேறு உடை வாங்குவதற்குக் காசு எதுவும் மீதம்பிடிக்க முடியவில்லை. அவனது உடையெல்லம் ஒரே பொத்தலாகவும் அங்கங்கே பலவர்ணத் துணிகளால் ஒட்டுப்போட்டதாகவும் இருந்தது. கிராம உணவு விடுதிக்குச் சென்று சாராயம் குடிக்கவேண்டாமென்று பல முறை சொல்லிப் பார்த்தேன். பலன் இல்லை ஒருசமயம் ஒரு கிராமத்திலிருந்தபொழுது, நான் மிகக் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருந்த ஐந்து ரூபிள்களை எனக்குத் தெரியாமல் என் பையிலிருந்து திருடிக்கொண்டு போய் விட்டான். மாலையில் நான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நன்றாகக் குடித்துவிட்டு ஒரு கொழுத்த கோஸாக் பெண்ணுடன் வந்து சேர்ந்தான். நாசமாகப் போகிறவனே! எப்படியிருக்கிறாய் ?' என்று வரும்போதே அவள் கேட்டுக் கொண்டு வந்தாள். ஆச்சரியமடைந்த நான் எதற்காக நான் எதற்காக என்னை அவ்வாறு அழைக்கிறாய் என்று கேட்ட பொழுது அவள் சொன்னாள். ஓ! அதுவா? பிசாசே! பெண்களை நேசிக்கக்கூடாது என்று இந்த இளைஞனைத் தடுக்கிறாயாமே. சட்டப்பூர்வமாக அனுமதிக்கப் பட்டிருப்பதை எப்படித் தடுக்கலாம்? ....... நீ நாசமாய்ப் போக!''
ஷாக்ரோ அவளருகில் நின்று அவள் கூறியதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான். அவன் ஏகமாகக் குடித்திருந்தான். உடல் நிலை கொள்ளாமல் தள்ளாடியது. அவனது கீழுதடு தொங்கிக் கொண்டிருந்தது. மங்கிய அவன் கண்கள் உணர்வற்று வெறித்து என்னை நோக்கிக்கொண்டிருந்தன. ''ஏய்! எதற்காக முறைத்துக் கொண்டிருக்கிறாய்? அவனுடைய பணத்தைக் கொடு என்று கத்தினாள் அந்தப் பெண்.
" எந்தப் பணம்? எனக்கொன்றும் புரியவில்லையே?''
''கொடுத்து விடு. இல்லாவிட்டால் போலீஸாரிடம் அழைத்துக் கொண்டு போவேன். அவனிடமிருந்து ஒடெஸ்ஸாவில் நூற்று ஐம்பது ரூபிள் வாங்கிக் கொண்டாயே அதை' எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. குடித்திருந்த அந்தப்பெண் பூதம் தான் சொன்னபடியே செய்துவிட்டால் எங்களிருவரையும் கைது செய்து விடுவார்கள். அப்புறம் என்ன நடக்குமோ யார் கண்டார்கள்? எனவே சாதுர்யமாக அவளை மடக்க நினைத்தேன். எனக்கு அதிக சிரமமாயில்லை அது மூன்று புட்டி சாராயத்தைக் கொடுத்து அவளைச் சாந்தப்படுத்தினேன். தரையில் மயங்கி விழுந்து அப்படியே தூங்கி விட்டாள். ஷாக்ரோவையும் படுக்க வைத்தேன். விடியற் காலையில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்த அவளை அங்கேயே விட்டுவிட்டு நானும் ஷாக்ரோவும் அக்கிராமத்தை விட்டே புறப்பட்டு விட்டோம். குடிவெறியில் ஏற்பட்ட தலைவலியும் உடல் வலியும் வாட்ட முகமெல்லாம் உப்பிப்போயிருந்த ஷாக்ரோ, எச்சிலை இடைவிடாது துப்பிக்கொண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டும் வந்தான். அவனுடன் பேச முயன்றேன். பதிலெதுவும் சொல்லவில்லை. வெயில் ஏறிக்கொண்டிருந்தது. எங்களைச் சுற்றி எங்கு திரும்பினாலும் கரும்பச்சை நிறமாகக் காட்சியளித்த கடலே 'வெல்வெட்டை விரித்தாற்போல் விரிந்து பரந்து கிடந்தது.
குறுக்கு வழி என்பதற்காக ஒரு குறுகலான பாதை வழியே சென்றோம். எங்கள் எதிரேயும், பக்க வாட்டிலும் காலடியிலே செந்நிறப் பூரான்கள் நெளிந்து கொண்டிருந்தன. வலப்புறம் அடிவானத்திலே படர்ந்திருந்த மேகங்கள் வெயிலின் ஒளிபட்டு வெள்ளிபோல் தகதகத்தன. சுற்றிலும் சூழ்ந்திருந்த அமைதி கனவுலகத்துக்கு அழைத்துச் செல்வதைப் போலிருந்தது.
மெள்ள மெள்ள கருமேகங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன. தூரத்தில் எங்கோ இடி இடித்துக் கொண்டிருந்தது. அது கொஞ்ச கொஞ்சமாக அருகே கேட்டது. பெரும் மழைத் துளிகள் விழத் தொடங்கின. அவை அடர்ந்திருந்த புற்களின் மீது விழுந்த போது ஏதோ ஒருவித உலோக நாதம் எழுந்தது.
எங்களுக்கு ஒதுங்குவதற்கு எங்குமே இடம் இல்லை. இருட்டிக்கொண்டு வந்தது. புற்களின் சலசலப்பு பயமூட்டுவதாக இருந்தது, இடி இடித்தது. மின்னல் பளிச்சிட்டது. வெள்ளிரேகை இட்டதுபோல் காட்சியளித்த மலைத்தொடர் விளிம்புகள் இருளில் மூழ்கி விட்டன. பெரும் மழை கொட்டத் தொடங்கியது. அவ்வெட்ட வெளியில் தொடர்ந்து இடி முழக்கம் பயங்கரமாகக் கேட்டது. கண்ணைப் பறிக்கும் மின்னல் அவ்வப்போது பளிச்சிட்டது. ஆகாயம் தனது கோபத்தை யெல்லாம் ஒருமிக்கக் காட்டுவதைப்போலவும் பூமி அதைக்கண்டு பயத்தால் நடுங்குவதுபோலவும் தோன்றியது. ஷாக்ரோ நடு நடுங்கி பயமடைந்த நாயைப்போல் ஊளையிட்டான். ஆனால் எனக்கோ அது மகிழ்வூட்டுவதாக இருந்தது, அங்கு நிலவிய சூழ் நிலையைக்கண்டு என் மனதில் எழுந்த கிளர்ச்சியைப் புலப்படுத்த எதையாவது செய்ய விரும்பினேன். இயற்கை அன்னையின் கோரதாண்டவத்தின் முன் நான் என்ன செய்யமுடியும்? என்பலத்தை யெல்லாம் ஒன்று திரட்டி உரத்த குரலில் பாடத் தொடங்கினேன். இடி முழக்கம் அதிர்ந்தது. மின்னல் ஒளி பாய்ச்சியது. புற்கள் சலசலத்தன. இந்த இரைச்சலுக்கிடையே எனது இசையும் ஒலித்தது. வெறி பிடித்தவனைப்போல் நான் நடந்து கொண்டேன். ஆனாலும் அதனால் என்னைத்தவிர யாருக்கும் தொந்தரவில்லை. இயற்கையின் வெறியாட்டத்துடன் நானும் இரண்டறக் கலந்துவிட விரும்பினேன். கடலிலே கடும்புயல். வெளியிலே இடிமுழக்கம். இதைவிடப் பெரிய இயற்கையின் கோரத்தை நான் அறிந்ததில்லை. யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் கத்திக்கொண்டே இருந்தேன். திடீரென்று யாரோ என் கால்களைப் பலமாகப் பிடித்திழுப்பது போல் உணர்ந்தேன், என்னை யறியாமலேயே நான் தரையில் சாய்ந்துவிட்டேன். கோபம் கொதிக்கும் கண்களுடன் ஷாக்ரோ என் முகத்தைப் பார்த்தான்.
''உன் புத்தி பிசகிவிட்டதா? கத்தாதே! கத்தினால் உன் குரல் வளையை நெறித்துவிடுவேன் தெரியுமா?'' எனக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. உனக்கு அதனால் என்ன கஷ்டம்?'' என்று கேட்டேன். “எனக்குப் பயமாக இருக்கிறது. தெரிகிறதா? இடி இடிக்கிறது. நீ வேறு கத்துகிறாய் உன்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?'' ''நான் விரும்பினால் உன்னைப்போல் எனக்கும் பாடுவதற்கு உரிமையுண்டு'' என்றேன். ''எனக்குப் பாட்டு தேவையில்லை'' என்றான். ”அப்படியானால் பாடாதே'' என்றேன். “நீயும் பாடக்கூடாது'' என்றான் உறுதியாக. 'அது என்னால் முடியாது.' "ஏய் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?'' ஷாக்ரோ கோபத்துடன் சொன்னான்: "நீயார்? உனக்கு வீடு வாசல் இருக்கிறதா? தாய் தந்தையர்கள் இருக்கிறார்களா? உற்றார் உறவினர் யாராவது உண்டா? சொந்த ஊர் எது? புவியில் நீ யார் ? நீ மனிதன் தானா? நான் மனிதன். எனக்கு இதெல்லாம் இருக்கிறது.' தன் மார்பிலே அவன் தட்டிக் கொண்டான். ''நான் ஒரு ராஜா. நீ....நீ ஒன்றுமில் லாதவன். ஆனால் என்னை டிப்லிஸில் எல்லோருக்கும் தெரியும். நீ எனக்கு சேவகம் செய்கிறாய். அதற்கு ஒன்றுக்குப் பத்தாக நான் பரிசளிக்கப்போகிறேன். உன்னால் அம்மாதிரி ஏதாவது செய்ய முடியுமா? பலனை எதிர்பார்க்காமலே எதையும் செய்ய வேண்டுமென்பது கடவுளின் கட்டளை என்று நீயே சொல்லியிருக்கிறாய். ஆனாலும் உனக்குப் பிரதியாக நான் பரிசளிக்கப்போகிறேன். என் மனதை ஏன் புண்படுத்து கிறாய் ? என்னை பயமுறுத்துகிறாய்? என்னையும் உன்னைப்போல் ஆக்கிவிடவேண்டுமென்று விரும்புகிறாயா? தன்னைப்போலவே பிறரும் ஆக வேண்டுமென்று நினைப்பது அழகல்ல.'
அவன் உதட்டைக் கடித்துக்கொண்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டுமிருந்தான். திகைப்படைந்து திறந்த வாய் மூடாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இது போதாதென்று அவ்வப்போது என் மார்பில் தன் விரலால் குத்தினான்; தோள்களைப் பிடித்து உலுக்கினான். எங்கள் மீது மழை கொட்டிக்கொண்டிருந்தது. இடி முழக்கத்தையும் மீறித் தன் குரல் கேட்க வேண்டுமென்பதற்காக உரக்க இரைந்து கொண்டிருந்தான் ஷாக்ரோ. அந்நிலையில் என் உணர்ச்சிகளெல்லாம் பீறிட்டுக் கொண்டு பலத்த சிரிப்பாக வெளிப்பட்டன. ஷாக்ரோ காரித் துப்பி விட்டுத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

9


டிப்லிஸை நெருங்க நெருங்க ஷாக்ரோவின் கடுகடுப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. முகத்தில் புதிய மாறுதல் ஒன்று காணப்பட்டது. விளாடிகாவ்காஸ்க் அருகே ஒரு கிராமத்தில் சோளக்கொல்லை ஒன்றில் வேலையை மேற்கொண்டோம். சர்க்காஸிய மக்களிடையே சம்பந்தமில்லாத தங்கள் பாஷையில் எங்களைப் பார்த்து விட்டானாம். அவனைத் துரத்திச் சென்று பிடித்து அவனிடம் கரண்டி இருப்பதைக் கண்டுவிட்ட அவர்கள் அவன் வயிற்றைக் கிழித்து அதற்குள் கரண்டியைச் செருகிவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்களாம்! உயிருக்குத் துடித்துக்கொண்டிருந்த அவனை சில கோஸாக்குகள் கண்டார்கள். தனக்கு நேர்ந்ததை அவனது உறுதியான இரண்டு தினங்கள் வேலை செய்தோம். ரஷ்ய மொழியுடன் அவர்கள் நகைத்துக்கொண்டும், வைதுகொண்டுமிருந்தனர். வளர்ந்துகொண்டே வந்த அவர்களது வெறுப்புணர்ச்சியைத் கண்டு பயந்த நாங்கள் அக்கிராமத்தை விட்டுப்போய் விடுவதென்று முடிவு செய்தோம். கிராமத்திலிருந்து 10 வெர்ஸ்ட் தூரம் சென்றதும் ஷாக்ரோ தனது கோட் உள் பையிலிருந்து 'லெஸ்ஜியன் மஸ்லின்' பொட்டலம் ஒன்றை எடுத்து நீட்டி வெற்றிக் குரலில் உரக்கச் சொன்னான் : இனி வேலை செய்ய வேண்டிய அவசியமே யில்லை. இதை விற்று வேண்டியதை யெல்லாம் வாங்குவோம். டிப்லிஸ்க்குப் போகும் வரை அது போதும்.'' எனக்கு வெறி பிடித்தாற்போல் கோபம் வந்து விட்டது. அந்த மஸ்லினைப் பிடுங்கித் தூர எறிந்தேன். சர்க்காஸியர்கள் லேசுப்பட்டவர்களல்ல. அவர்களைப்பற்றி ஒரு கதையை நான் கேள்விப்பட்டிருந்தேன். ஒரு சமயம் அவர்களுடன் வேலை செய்த ஒரு நாடோடி கிராமத்தை விட்டுப் போகும்போது தன்னுடன் கூட ஒரு இரும்புக் கரண்டியை எடுத்துச் சென்றுவிட்டானாம். அவனைத் துரத்திச் சென்று பிடித்து அவனிடம் கரண்டி இருப்பதைக் கண்டுவிட்ட அவர்கள் அவன் வயிற்றைக் கிழித்து அதற்குள் கரண்டியைச் செருகிவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்களாம். உயிருக்குத் துடித்துக்கொண்டிருந்த அவனை சில கொஸாக்குகள் கண்டார்கள். தனக்கு நேர்ந்தததை அவர்களிடம் சொல்லிவிட்டு அவன் இறந்துவிட்டான்! இதைப்போன்ற பல கதைகளை கோஸாக்குகள் எங்களிடம் சொல்லி எச்சரித் திருக்கிறார்கள்.
அதைப்பற்றி ஷாக்ரோவுக்கு நினைவூட்டினேன். என்னெதிரே நின்று கேட்டுக்கொண்டிருந்த அவன் கண்களைச் சுருக்கியவாறே பல்லை இளித்துக்கொண்டு பூனைபோல் என்மீது பாய்ந்தான். ஐந்து நிமிஷம் இருவரும் கட்டிப் புரண்ட பிறகு ஷாக்ரோ கோபமாகப் போதும்'' என்று கத்தினான். களைத்துப் போயிருந்த நாங்கள் எதிரெதிரே மௌனமாக வெகு நேரம் வீற்றிருந்தோம். நான் அந்த மஸ்லின் துணியை வீசிய பக்கத்தைப் பரிதாபமாகப் பார்த்தவாரே ஷாக்ரோ சொன்னான் : ''நாம் எதற்காகச் சண்டை போடுவது? சேச்சே மகா முட்டாள் தனம். உன்னுடைய பொருளையா திருடினேன். உனக்கேன் ஆத்திரம்? உன் நிலைக்காக வருந்துகிறேன். அதனாலேயே திருடினேன். நீ உழைக்கிறாய். என்னால் முடியவில்லை. நான் என்ன செய்வது? உனக்கு உதவ வேண்டுமென்று நினைத்தேன்.' திருட்டு என்றால் என்னவென்பதைப் பற்றி அவனுக்கு விவரிக்க ஆரம்பித்தேன். 'போதும் வாயை மூடு! உன் மண்டை மறத்துவிட்டது என்றான் வெறுப்பாக. “சாகின்ற நிலையில் இருக்கும்போது திருடாமல் என்ன செய்வது? அதுவும் இத்தகைய வாழ்க்கை வாழும்போது. போதும் உன் உபதேசம்.' அவனுக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாகுமோ என்று பயந்து நான் பேசாமலிருந்தேன். அவன் திருடுவது இது இரண்டாவது தடவை. இதற்குமுன் கருங்கடல் பிரதேசத்தில் இருந்தபோது ஒரு கிரேக்க செம்படவன் பையிலிருந்து திருடியிருக்கிறான். அப்பொழுதும்கூட நாங்கள் சண்டை போட்டிருக்கிறோம். இருவரும் கோபம் தணிந்து சற்று சாந்தமடைந்தபின் "சரி மேலே போவோமா?” என்றான்.
தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். தினமும் அவன் முகத்தில் படர்ந்திருந்த கவலை அதிகரிக்கத் தொடங்கியது. தனது கடைக்கண்களால் அவன் என்னைப் பார்க்கத் தொடங்கினான். ஒரு சமயம் அவன் சொன்னான். "இன்னும் இரண்டொரு தினங்களில் டிப்லிஸை அடைந்துவிடுவோம். அடாடா!'' என்று சொல்லி நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு மகிழ்வுடன் சொன்னான்; '' வீட்டை அடைந்து விடுவேன். இவ்வளவு நாள் எங்கே போயிருந்தேன்? ஊரெல்லாம் சுற்றினேன்?... ஆசை தீரும்வரை குளிப்பேன்- நிறைய ஏராளமாக சாப்பிடுவேன். நிரம்ப பசியாக இருக்கிறது என்று அம்மாவிடம் சொல்லுவேன். என்னை மன்னிக்குமாறு அப்பாவிடம் கேட்டுக்கொள்வேன்......கஷ்டங்களென்றால் என்ன கண்டு கொண்டேன். வேறு விதமான வாழ்க்கை நான் அனுபவித்து விட்டேன். நாடோடிகள் ரொம்ப நல்லவர்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ரூபிள் கொடுப்பேன். உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் நானும் சாராயம் குடிப்பேன், நானும் நாடோடியாகவே இருந்தவன் தானே! உன்னைப்பற்றி என் அப்பாவிடம் சொல்வேன். இதோ இவன் என் மூத்த சகோதரனைப் போன்றவன். எனக்கு எவ்வளவோ விஷயங்களை அவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான். என்னை அடித்துத் திருத்தினான், உணவளித்துக் காப்பாற்றினான். அதற்குப் பிரதியாக அவனை ஒரு வருஷம் வைத்துக் காப்பாற்றுங்கள் என்பேன்.... கேட்கிறாயா? மாக்ஸிம்''
இந்தவிதமாக அவன் பேசுவதைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதெல்லாம் குழந்தையைப்போல் வெகுளியாக அவன் பேசுவான். அவ்வாறு அவன் பேசுவதில் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும். ஷாக்ரோவின் பேச்சில் எனக்கு சற்று நம்பிக்கை ஏற்படத்தான் செய்தது. நாங்கள் வேகமாக நடந்தோம். நாளை டிப்லிஸுக்குப் போய்விடலாம். ஐந்து வெர்ஸ்ட் தூரம் சென்றதும் இருமலைகளுக்கிடையே காக்கஸஸின் தலை நகர் தெரிந்தது. 
 

எங்கள் பிராயணத்தின் முடிவு நெருங்கிவிட்டதைக் கண்டு நான் சந்தோஷமடைந்தேன். ஆனால் ஷாக்ரோ அலட்சியமாக இருந்தான். ஒளியிழந்த கண்களால் எதிரே வெறித்து நோக்கிய அவன் பசியினால் வாடும் தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். பசி தாங்காமல் வழியில் பச்சைக் கிழங்குகளைச் சாப்பிட்டுவிட்டான் அவன். ''நான்-ஜார்ஜிய கனவானாகிய நான் இந்த நிலையில் கிழிந்த உடையில் அலங்கோலமாகப் பகலில் ஊருக்குச் செல்வேன் என்று நினைக்கிறாயோ? இருட்டுகிறவரை இங்கேயே இருப்போம்'' என்றான். காலியாக இருந்த ஒருகட்டிடத்தில் சுவற்றை ஒட்டி உட்கார்ந்தபடியே உடல் நடுங்க கையில் இருந்த கடைசி சிகரெட்டைப் பற்றவைத்துப் பிடித்துக்கொண்டிருந்தோம். பலமான காற்றடித்துக் கொண்டிருந்தது. சோகமயமான ஒரு பாட்டை பாடியவாறே ஷாக்ரோ உட்கார்ந்து கொண்டிருந்தான்.
கதகதப்பான அறையில் சகலவிதமான சௌகரியங்களும் இருக்கின்ற சொர்க்க வாழ்க்கையைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். “போகலாம்'' என்றான் ஷாக்ரோ உறுதியாக. இருட்டிவிட்டது. சாரிசாரியாக எரிந்த நகரின் விளக்குகள் அழகாகத் தெரிந்தன. “உன் மேலங்கியைக் கொடு. என் முகத்தை மறைத்துக் கொள்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்கள்'' என்றான். அங்கியைக் கொடுத்தேன். ஆல்கின்ஸ்கி தெரு வழியாகச் சென்றோம். ஷாக்ரோ ஏதோ சீட்டியடித்துக்கொண்டே வந்தான். மாக்ஸிம்........ அதோ! பஸ் ஸ்டாண்ட் தெரிகிறதா? அங்கே காத்துக்கொண்டிரு. யார் வீட்டிலாவது புகுந்து என் தாய் தந்தையரைப் பற்றிக் கேட்டுக்கொண்டு வருகிறேன்'' "அதிக நேரமாகாதே'
"ஒரே நிமிஷத்தில் வந்து விடுகிறேன்.” குறுகலான இருண்டிருந்த ஒரு சந்தில் புகுந்து அவன் மறைந்து போனான். ஒரேயடியாக .....! அதற்குப்பிறகு அவனை நான் சந்திக்கவே இல்லை என் வாழ்விலே நான்கு மாதகாலம் வழித்துணையாக வந்த அவனை. ஆனாலும் அடிக்கடி அவன் நினைவு எனக்கு எழுகிறது. அப்போதெல்லாம் ஒருவித நல்லுணர்ச்சியும் நகைப்புமே எனக்கு ஏற்படும். சிறந்த அறிவாளிகள் எழுதிய பெரும் பெரும் புத்தகங்களில் கூடக் காணப்படாத பல விஷயங்களை அவன் எனக்குக் கற்றுக் கொடுத்தான். அறிவைவிட அனுபவம் விசால மானது தானே!

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...