திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..
பரந்து
விரிந்த தமிழ் இலக்கியப்
பரப்பில் எந்தளவு வளமும்
செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ
அந்தளவுக்குக் குழப்பங்களும்
தவறுகளும் இடம் பிடித்திருக்கின்றன.
முத்தொள்ளாயிரத்தில்
இடம்பெற்ற சில பாடல்கள்,
கம்ப
இராமாயணத்தில் இடம் பெற்ற
சில பாடல்கள்,
பாரதி
கவிதைத் தொகுப்புகளில்
இடம்பெற்ற சில பாடல்கள்
அந்தந்த கவிஞர்களால்
எழுதப்பட்டனவா?
என்ற
சர்ச்சை இன்றும் தொடர்கிறது.
முறையான
ஆவணப்படுத்தல்களும் ,
பதிவுகளும்
இடம்பெறாத அந்த காலத்தில்
மட்டுமல்ல,
நவீன
தொழில்நுட்ப வளர்ச்சியினால்
பெருகி விட்ட இணையத்தளங்கள்,
முகநூல்களில்
கூட இந்த நிலை நீடிக்கிறது.
வேண்டிய
தகவலை விரல் நுனியால் கொண்டு
வர முடிந்தாலும் தகவலின்
உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்திக்
கொள்ள இன்னமும் தேட வேண்டிய
தேவை ஏற்படுகின்றது.
இந்த
நிலையில் தான் நீண்ட நெடுங்காலமாக
தவறுதலாக அறியப்பட்டும்,
பதியப்பட்டும்,
பரவலாக
பேசப்பட்டு வரும் ஈழத்து
கவிதை வரிகள் இரண்டின்
சொந்தக்காரரை அவரது ஐந்தாவது
நினைவு நாளில் நமது இணையத்தளம்
மூலம் வெளிக்கொணருகிறோம்.
முனைவர்
மாவை சச்சிதானந்தன் B.A
(Hons) London. M.Phil in Psychology (London) Ph. D (Jaffna) அவர்கள்
ஈழத்து இலக்கிய உலகின் புகழ்
பெற்ற கவிஞர் ஆவார்.
தும்பளை
கணபதிப்பிள்ளை மாவிட்டபுரம்
தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின்
மகனான இவர்,
தமிழ்,
சமஸ்கிருதம்,
ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
கவிதை
மட்டுமன்றி சிறுகதைகள்,
வானியல்,
உளவியல்
கட்டுரைகள் முதலான பல்துறைகளிலும்
பணி செய்தவர்.
மதுரை
பண்டிதரான இவர் அப்பட்டம்
பெற்ற போது அன்றைய இலங்கை
இந்திய பட்டதாரிகளில்
முதலிடத்தையும் பெற்றிருந்தார்
என்பதுவும்,
சுவாமி
விபுலானந்தருக்கு ஆராச்சித்துணைவராக
பணிபுரிந்தார் என்பதுவும்
குறிப்பிடத்தக்கவைகள்.
இவரது
ஆனந்த தேன் கவிதைத்தொகுப்பில்
இடம் பெற்றுள்ள “பொன்னின்
குவையெனக்கு வேண்டியதில்லை
-
எனைப்
போற்றும் புகழெனக்கு
வேண்டியதில்லை” என்று
ஆரம்பமாகும் கவிதையின்
ஒன்பதாவது சரணமே இன்று
தமிழுலகில் பெரிதும்
அறியப்பட்டுள்ள “சாகும்
போதும் தமிழ் படித்து சாகவேண்டும்,
என்சாம்பல்
தமிழ்மணந்து வேக வேண்டும்”
என்ற வரிகளைக் கொண்டுள்ளது.
தமிழ்
உணர்வாளர்கள்,
பேச்சாளர்கள்,
அரசியல்
வாதிகள் என அனைவராலும் அடிக்கடி
முழங்கப்படும் இந்த வரிகள்
இன்றும் பரவலாக பாரதிதாசனுடையவை
என்றே சொல்லப்படுவது மட்டுமன்றி
பெரும்பாலான இணையத்தளங்களிலும்
அவ்வாறே பதியப்பட்டிருக்கின்றது.
தமிழகத்தவர்கள்
மட்டுமன்றி ஈழத்தவர்களும்
இந்த வரிகள் பாரதிதாசனுடையவை
என திடமாக கருதும் நிலையே
காணப்படுகின்றது.
சச்சிதானந்தம்
அவர்கள் பற்றி ஈழத்தவர்களுக்கு
பரவலாக தெரிந்திராததுவும்,
இந்தவரிகளின்
கனல் தெறிப்பு தீவிர தமிழ்
உணர்ச்சிக் கவிஞரான
பாரதிதாசனுக்குத்தான் இருக்க
கூடும் என்ற எண்ணமும் இந்தத்
தவறுக்கு காரணமாக இருக்கலாம்.
எது
எப்படியானாலும் இது இன்று
வரையிலும் திருத்தப் படாத
தவறாகவே நிலைக்கிறது.
ஓரளவே
வெளிப்படுத்தப்பட்ட இந்த
உண்மை பரவலாக அறியப்படவும்,
திருத்தப்படாத
இந்த தவறு திருத்தப்பட்ட
தீர்ப்பாகவும்,
சச்சிதானந்தம்
பற்றிய தகவல்களையும் இந்த
வரிகளைக் கொண்டுள்ள முழுக்கவிதையும்
இந்த வெளிப்பாட்டின் மூலம்
தமிழ்கூறு நல்லுலகிற்கு
அர்ப்பணிக்கிறோம்.
தமிழ்க் கவிப் பித்து
பொன்னின்
குவையெனக்கு வேண்டியதில்லை
-
எனைப்
போற்றும்
புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன்
முடியெனக்கு வேண்டியதில்லை
-
அந்த
மாரன்
அழகெனக்கு வேண்டியதில்லை.
கன்னித்
தமிழெனக்கு வேணுமேயடா -
உயிர்க்
கம்பன்
கவியெனக்கு வேணுமேயடா
தின்னத்
தமிழெனக்கு வேணுமேயடா -
தின்று
செத்துக்
கிடக்கத் தமிழ் வேணுமேயடா.
உண்ண
உணவெனக்கு வேண்டியதில்லை -
ஒரு
உற்றார்
உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில்
ஒரு பிடியும் வேண்டியதில்லை
-
இள
மாதர்
இதழமுதும் வேண்டியதில்லை.
பாட்டில்
ஒருவரியைத்
தின்றுகளிப்பேன் -
உயிர்
பாயும்
இடங்களிலே என்னை மறப்பேன்
காட்டில்
இலக்குவனைக் கண்டு மகிழ்வேன்
-
அங்கு
காயும்
கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.
மாட
மிதிலைநகர் வீதிவருவேன் -
இள
மாதர்
குறுநகையில் காதலுறுவேன்
பாடியவர்
அணைக்கக் கூடி மகிழ்வேன் -
இளம்
பச்சைக்
கிளிகளுடன் பேசி மகிழ்வேன்.
கங்கை
நதிக்கரையில் மூழ்கியெழுவேன்
-
பின்பு
காணும்
மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப்
புலவர்களைக் கண்டு மகிழ்வேன்
-
அவர்
தம்மைத்
தலைவணங்கி மீண்டு வருவேன்.
செம்பொற்
சிலம்புடைத்த செய்தியறிந்து
-
அங்குச்
சென்று
கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன்
உலகமிர்து கண்டனேயடா -
என்ன
ஆனந்தம்
ஆனந்தம் கண்டனேயடா.
கால்கள்
குதித்துநட மாடுதேயடா -
கவிக்
கள்ளைக்
குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள்
கனித்தமிழில் அள்ளிடவேண்டும்
-
அதை
நோக்கித்
தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.
தேவர்க்
கரசுநிலை வேண்டியதில்லை -
அவர்
தின்னும்
சுவையமுது வேண்டியதில்லை
சாவில்
தமிழ் படித்துச் சாகவேண்டும்
-
என்றன்
சாம்பல்
தமிழ் மணந்து வேகவேண்டும்
வாழ்க்கைக்
குறிப்பு.
பிறப்பு
:
19.10.1921
தந்தை
:
தும்பளை,
கணபதிப்பிள்ளை.
தாய்
:
மாவிட்டபுரம்,
தெய்வானைப்பிள்ளை
ஆரம்பக்கல்வி
:
காங்கேசன்
துறை நடேஸ்வராக்கல்லுரி.
தந்தையாரிடம்
வானியலும் சொதிடமும் சிவப்பிரகாச
தேசிகரிடமும் சுப்பிரமணிய
சாஸ்திரிகளிடமும்
பாலசுந்தரக்குரக்களிடமம்
சமஸ்கிருதக்கல்வியும்
பயின்றார்.
1936
– 1937: இடை
நிலைக்கல்வி :
பருத்தித்துறை
சித்திவிநாயகர் வித்தியாலயம்
மற்றும் ஹாட்லிக்கல்லூரி.
1938
– 1940: உயர்
கல்வி :
பரமேஸ்வராக்
கல்லூரி
30.09.1941:
மதுரைப்பண்ணடிதர்
பட்டம் -
இலங்கை,
இந்தியா
இரு நாடுகளிலும் முதன்மைச்சித்தி
1946
- 1945: சுவாமி
விபுலானந்தருக்கு ஆராய்ச்சித்துணைவர்
1946
: நீர்
கொழும்பு St
Mary's College இல்
கணித ஆசிரியர்.
1947
– 1959: உடுவில்
மகளிர் கல்லூரியில் கணித
ஆசிரியர்,
தமிழ்
சிறப்புப் பட்டம்
26.08.1949:
திருமணம்
1960:
பரமேஸ்வராக்கல்லூரியில்
கணித ஆசிரியர்.
1961:
யாழ்
இந்துக்கல்லுரியில் தமிழாசிரியர்
1962-
1965: யாழ்,மத்திய
கல்லூரி கணித ஆசிரியர்
1965
– 1967: அரசினர்
பாடநூற்சபை எழுத்தாளர்.
1967
- 1981: பலாலி
ஆசிரியர் கலாசாலை உளவியற்
பேராசிரியர்
1978:
M Phil in Psychology (London)
2001:
கலாநிதிப்பட்டம்
(யாழ்
பல்கலைக்கழகம்)
21.03.2008:
மறைவு.
எழுதிய
நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக்
கட்டுரைகள்.
1.
ஆனந்தத்தேன்
(கவிதை)
1955
2.
தியாக
மாமலை வரலாறு (1959)
3.
யாழ்ப்பாணக்காவியம்
(1998)
4.
தமிழர்
யாழியல் -
ஆராய்ச்சி
(1967)
5.
மஞ்சு
காசினியம் :
இயங்கு
தமிழியல் (2001)
6.
Fundamentals of Tamil Prosody (2002)
7.
இலங்கைக்
காவியம் :
பருவப்
பாலியர் படும்பாடு (2002)
8.
மஞ்சு
மலர்க்கொத்து (சிறுவர்
பாட்டு)
(2003)
9.
எடுத்த
மலர்களும் கொடுத்த மாலையும்
-
கவிதை
(2004)
10.
S.J.V. Chelvanayaham ( In Print)
கட்டுரைகள்
கவிதைகள்
#
தமிழன்
(மதுரை)
சக்தி
ஈழகேசரியில் இருபதுக்கு
மேற்பட்ட சிறுகதைகள் ஈழகேசரியில்
தொடராக வெளிவந்த அன்னபூரணி
என்ற முழு நாவல் -
(1942) Ceylon Daily News இல்
உளவியற் கட்டுரை.
#யாழ்
பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது
சமர்ப்பித்த வானியல் (ஆராய்ச்சி)
#
ஆரிய
திராவிட பாஷாபிவிருத்தி
சங்கத்தில் படிக்கப்பட்ட
தமிழ் ஒலி மூலங்கள்.
(1989)
#
கலாநிதி
கு.சிவப்பிரகாசம்
நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல்
அடிப்படையில் உவம இயல்.
(1990)
#
யாழ்
பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட
இடைச்சொல் பற்றிய மூன்று
எடுகோள்கள் (1991)
முதலிய
எண்ணிறைந்தவை
பெற்ற
விருதுகள்.
1.
சாகித்தியரத்ன
-
இலங்கையில்
இலக்கியத்துக்க வழங்கப்படும்
அதியுயர் விருது (199)
2.
சம்பந்தன்
விருது (2001)
3.
வட
-
கீழ்
மாகாண ஆளுநர் விருது (2003)
4.
தந்தை
செல்வா நினைவு விருது (2004)
5.
இலங்கை
இலக்கியப்பேரவை விருது (2004)
5.
கலாகீர்த்தி
தேசிய விருது (2005)
6.
இவைதவிர
கவிதைக்காக தேசிய மட்டத்திலும்
மாகாண மட்டத்திலும் பலமுறை
பரிசு பெற்றவர்.
இவரைப் பற்றிய சில குறிப்புகள் முகனூல் பதிவிலிருந்து:
எனக்கு தெரியாத ஒரு தகவலை தெரியப்படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குநானும் இதுவரை “சாகும் போதும் தமிழ் படித்து சாகவேண்டும், என்சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்” என்ற வரிகள் பாரதிதாசனுடையவை என எண்ணியிருந்தேன். இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் நம்மவர் எனும்பொழுது பெருமையாக இருக்கின்றது. வாமணன்
ஆனந்தர் பூபதிபாலவடிவேற்கரன்.
பதிலளிநீக்கு„பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என் சாம்பர் கரையும்போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்...“
என்ற வரிகளைக் கேட்ட, வாசித்த என் இளம் பருவகாலத்திலிருந்து கடந்த 47,48 ஆண்டுகளாக இந்த வரிகள் --மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்தவரும், ஈழத் தமிழின விடுதலைக்கு தன்னைப் பலிக்கடாவாகத் தருகிறேன் என்று தான் ஆற்றி வந்த அரசகரும மொழி பெயர்ப்பாளர் பதவியிலிருந்து விலகி அகிம்சை வழிப்போராட்டங்களில் ஈடுபட்டு 1972 முதல் பெரும்பாலான தனது வாழ்க்கைக் காலத்தை சிறீலங்காச் சிறைகளில் கழித்து விட்டு கடந்த 20-25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வேண்டாத விருந்தாளியாக, அடைத்து வைக்கப்படாத கைதியாக இருந்து வரும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன்.
18.03.2017ம் ஆண்டு யேர்மனி பிராங்பேர்ட் நகரில் பிராங்பேர்ட் தமிழ்மன்றமும் வயவை மக்கள் ஒன்றியமும் இணைந்து நடத்திய கவிஞர் வயவை லம்போதரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான நான் உறங்கிய தொட்டில் கவிதை நூல் வெளியீட்டின் போது கூட „பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என் சாம்பர் கரையும்போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்...“ என்ற வரிகள் காசி ஆனந்தன்ன கவிதை வரிகள் என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தேன். மேடையிலிருந்து இறங்கிவந்தபோது நண்பர் ஒருவர் அது தவறு என்றும் அநத வரிகள் மாவை சச்சிதானந்தன் அவர்களின் வரிகள் என்றும் சுட்டிக்காட்டிய போது கூட என்னால் ஏற்க முடியவில்லை. அவரோ தனது கருத்தில் நிலையாக நின்றதால் நான் ஆய்கிறேன் என்று கூறினேன்.
ஒருபடியாக, நேற்று 26.03.2017, ஞாயிற்றுக்கிழமை காசி ஆனந்தன் அவர்களுடன், சில காலங்களின் பின் தொலைபேசினேன். வழமையான நலவிசாரணைகளின் பின்னர், இப் பாடல் வரிகளைக் கூறி அண்ணா இந்த வரிகள் உங்களுடையவைதானே என்று கேட்டேன்.
இல்லை பூபதி, இந்த வரிகளைப் பாடியவர் மட்டக்களப்பைச் சேரந்த ராஜபாரதி என்ற புனை பெயர் கொண்ட கவிஞர். ஆனாலும் அவருடைய இந்த வரிகளுக்கு அத்திவாரமாக இருந்தது, மாவை சச்சிதானந்தன் என்ற கவிஞர் பாடிய
சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்த வேக வேண்டும்
என்ற வரிகள் தான் என்று தெளிவு படுத்தினார். நீண்ட காலம் தமிழ்நாட்டார் பலரும்
„பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என் சாம்பர் கரையும்போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்...“ என்ற வரிகள் பாரதிதாசனுடைய வரிகள் என்று நினைத்தார்களாம். இன்று உண்மை தெளிவு பட்டு வருவதாகவும் காசி அண்ணா கூறினார்.
மொத்தத்தில், சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்த வேக வேண்டும் என்ற அழகிய வரிகளை மேலும் கம்பீரத்துடன் „பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என் சாம்பர் கரையும்போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்...“ என்று பாடி இன்னமும் அழகு படுத்தியவர் மட்டக்களப்பு ராஜபாரதி. இந்த உண்மையத் தெளிவு படுத்திய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கு நன்றிகள் பற்பல.
இந்த்த் திருத்தத்தை பலரோடும் பகிர்ந்து கொள்வதால் திருத்தப்படாத தவறுகளைத் திருத்தி திருந்திய தீர்ப்பாக தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறியத் தருவோம்.
இந்த சர்ச்சையைத் தீர்த்துவைத்துள்ளார். திரு வ.ந.கிரிதரன் பதிவுகள் இணைய பக்கம் மூலம்.
பதிலளிநீக்குhttp://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2846:-109&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
ஓடையிலே என் சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓய வேண்டும்.
வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்இந்த வரிகளைப் பார்த்ததும் என் மனதிலொரு காட்சி விரியும். சிறுவனான என்னைக் கைப்பிடித்து அப்பா வவுனியா நகரசபை மைதானத்துக்குக் கூட்டிச்செல்கின்ற காட்சிதான் அது. வவுனியா வேட்பாளராகப் போட்டியிட்ட செல்லத்தம்புவை ஆதரித்து நடைபெற்ற தமிழரசுக்கட்சியினரின் கூட்டம். என் வாழ்க்கையில் முதல் முறையாக அரசியல் கூட்டமொன்றுக்குச் செல்வது அதுதான் முதல் முறை.
அப்பொழுதே குடுகுடு கிழவராகக் காட்சியளித்த தந்தை செல்வாவைத்தாங்கிப்பிடித்தபடி அருகில் 'தானைத்தலைவர்' அமிர்தலிங்கம் காட்சியளித்தார். திருமதி அமிர்தலிங்கத்தின் தமிழ் வாழ்த்துப்பாடலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. அக்கூட்டத்தில் பங்குபற்றி அன்று என்னைக் கவர்ந்த இன்னுமொருவர் ஆலாலசுந்தரம். அவரது கிண்டலும் , சுவையும் மிக்க உரை கேட்டவுடனேயே அனைவரையும் கவர்ந்துவிடும் தன்மை மிக்கது.
அந்தக்கூட்டத்துடன் அக்காலத்தில் என் அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களாகத் தமிழரசுக்கட்சியினர் ஆகிவிட்டனர்.
அந்தக் கூட்டத்தின் இறுதியில் நான் என்னிடமிருந்த 'ஆட்டோகிராப்'பில் மேடையின் பின்னாலிருந்து திருமதி அமிர்தலிங்கத்திடம் கையெழுத்தினை நாடியபோது அவர் அதில் எழுதிய வரிகள்தாம் மேலுள்ள வரிகள். என்னைப்போல் மேலும் பலர் அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் மாணவர்களாகிய நாம் 'ஆட்டோகிராப்'பில் வருடாவருடம் வகுப்பு மாறிச்செல்லும்போதெல்லாம் கையெழுத்து வாங்குவது வழக்கம்.
நீண்ட காலமாக என்னிடமிருந்த அந்த 'ஆட்டோகிராப்' 83ற்குப்பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்துபோன எனது நூல்களுடன் தொலைந்து போனது.
என்னை நீண்ட காலமாக ஆட்கொண்டிருந்த கேள்வியொன்று திருமதி மங்கையர்க்கரசி எழுதிய அந்த வரிகளுக்குச்சொந்தக்காரரான கவிஞர் யார் என்பதுதான். அண்மையில்தான் அதற்கான விடை கிடைத்தது. சிலோன் விஜயேந்திரன் தொகுப்பில் வெளியான 'ஈழத்துக்கவிதைக்கனிகள்' தொகுப்பில் அந்த விடையிருந்தது, அதனை எழுதியவர் அமரர் ராஜபாரதி (மட்டக்களப்பு) அவர்கள். 'தமிழ்த்தாகம்; என்ற தலைப்பிலுள்ள அந்தக் கவிதையின் முழு வடிவமும் கீழே:
கோடையிலே எரிவெயிலிற் காயும்போது
கொப்பளிக்கும் தமிழ்வெள்ளம் தோயவேண்டும்.
வாடைதரு மூதலிலே நடுங்கும் போது
வயந்ததமிழ்க் கதிரென்னைக் காயவேண்டும்.
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்.
ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.
மேற்படி தொகுப்பிலுள்ள க.சச்சிதானந்தனின் 'தமிழ்க்கவிப்பித்து' என்னும் கவிதையின் இறுதியும் இதனை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அது கீழே:
சாவிற் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்,
என்னதான் சொல்லுங்கள் மொழிவளமும், கற்பனைச்சிறப்பும் மிக்க மரபுக்கவிதைகளை வாசிப்பதில் அடையும் இன்பமே தனி.
மேற்படி கவிஞர் ராஜபாரதியின் கவிதை வரிகள் ஏற்படுத்திய நனவிடை தோய்தலிது. நீங்களும்தாம் சிறிது தோயுங்களேன்.
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பதிலளிநீக்குபாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?
நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?
பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?
பொங்கு வெறியர் சிறைமதி லுள்எனைப்
பூட்டி வதைத்தாலும் -என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் -உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் -ஒரு
செங்களம் ஆடி வரும்புக ழோடு
சிரிக்க மறப்பேனா?
-காசிஆனந்தன்-
கட்டுரைக்கு நன்றி. அவசியமான கட்டுரை. கடைசிச் சரணம் பண்டிதர் சச்சிதானந்தம் எழுதியதல்ல என்று மேற்கண்ட பின்னூட்டங்களிலிருந்து தெரிய வருவதால், அதை நீக்கிவிடுவது நல்லது. இல்லையென்றால், இந்தத் தவறு பிறரால் பகிரப்பட்டு மீண்டும் தவறு பெருக வழிவகுக்கும். எனக்கு இதை ஒருவர் பகிர்ந்ததனால் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஅ.ந.கிரிதன் குறிப்பிட்ட பாடலைச் சிறுவயதில் பாடித் திரிந்ததாகக் கூறும் தமிழரசி அவர்கள் (பண்டிதர் ஆறுமுகம் அவர்களின் மகள்) கூறும் வடிவம்:
"கோடையிலே கொடுவேயிற் காயும் போதும்
கொழுந்தமிழ் பாமழையிற் தோயவேண்டும்
வாடையிலே வெற்றுடல் நடுங்கும் போதும்
வண்டமிழின் கதகதப்பிற் காயவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்
ஓடையிலே ஒண்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்"
(எழுதியவர் மட்டக்களப்புக் கவிஞர் ராஜபாரதி)
தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கடைசிச் சரணத்தை நீக்கிவிட்டேன்.
நீக்குகவிஞர் ராஜபாரதி பற்றியும் அவரது நூல் பற்றியும் மேலதிக தகவல் தெரிந்தால் பதிவிடவும்.
கவிஞரின் அடுத்த நினைவு நாளில் திருத்திய புதிய பதிவு வெளியிட்டதும் இதனை முழுமையாகவே நீக்கிவிடுகிறேன்.
எனவே மேலும் குழப்பம் ஏற்படாது. தோழி தமிழரசிக்கும் எனது நன்றிகள்.
https://inithal.blogspot.com/2016/12/blog-post_16.html?showComment=1611922390051#c1403788969942434776
பதிலளிநீக்கு