' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

கே. சச்சிதானந்தனின் கவிதைகள்.

கே. சச்சிதானந்தனின் கவிதைகள்.

                                       
(கே.சச்சிதானந்தன்)


 

1. பைத்தியக்காரர்கள்.


பைத்தியக்காரர்களுக்கு
ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.
நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சிநேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
மேலே பார்க்கும்போது
அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களும் நம்மைப் போலத்தான்.

ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.

பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவைச் சென்றடைய.
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகள்களை உணர.
பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.

 

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...