' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆற்றூர் ரவிவர்மா

 ஆற்றூர் ரவிவர்மா

(1930 - 2019)
"ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை
வாசிப்பதென்பது ஒரு பெரிய வரம்.உலகின் மிகச் சில
மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது.
கிரேக்கர், சீனர்... இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே
அது சாத்தியம். எனக்கு தமிழ் தாய்மொழியாக
இல்லாவிட்டாலும் தாய்க்குத் தாய்மொழி அல்லவா"


பைத்தியம்

உணவருந்தும்போது சோற்றுருண்டையில் ரத்தம்
நான் சந்துகள் தாண்டிச் செல்கையில் மாமிசத்தில்
கால் இடறிச் சுளுக்குகிறது
தண்ணீரில் கண்ணீரின் புளிப்பு
சட்டையின் புள்ளியில் ரத்தக்கறை -
என்ன மனிதனாகிவிட்டேன் நான்!

தினசரியின் பக்கங்களில்,
வானொலியின் செய்தி அறிக்கையில்,
எப்போதும் கேட்கும் தெருக்களின் ஒலிகளில்
கொலைகளும் மரணங்களும் ‍‍-
எதிர்ப்படக்கூடும் மரணம்
தேவாலயத்தில் குனியும்போது
பஸ்ஸுக்குக் காத்திருக்கும்போது.

தேசங்களின் பெயர்கள் -
குலப்பெயர்கள், ஆட்களின் பெயர்கள்
நினைவில்லை. என் கண்முன் சிவந்த கடல் அல்லவோ!

துப்பாக்கிக் குதிரைகளின் தாளம் செவிகளில் ரீங்கரிக்கிறது.
மூக்கில் ரத்தம் தோய்ந்த சடலங்கள்
பெட்ரோலில் எரியும் நெடி.
தொட்டுவிட்டேனோ ஒரு பிணத்தை!
தூக்க மாத்திரைகள் எவ்வளவோ விழுங்கிய பின்பும்
எப்போதும் நடுங்குகிறேன் தூக்கத்தில்.

சுற்றி வர அசுத்தத்தையே
கண்ட என் தாத்தாவின்
முற்றிய தண்ணீர் பிசாசு1

என்னிலும் உயிர் வாழ்கிறதா என்ன?

1ஒரு மனநோய் ( ) அசுத்தமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் சதா       சுத்தம் செய்து கொண்டிருப்பது. இந்தப் பழக்கம் வாரிசுகளுக்கும் தொற்றக்கூடியது.


மலையாளத் தலைப்பு: "பிராந்து"
தமிழிலில் மொழிபெயர்த்தவர்: சுந்தர ராமசாமி
காலச்சுவடு 7, ஜூலை ‍ செப். 1989


 

 மறு விளி

[ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து]

நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கு கேட்கிறது
சொல்லாமலிருபது
என்னில் எதிரொலிக்கிறது
நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள்
ஒரே மெளனம்

ஊர் முற்றங்களில்
பொங்கல் விழாக்களில்
கோலமிட
நமது விரல்கள்
ஒன்றாக மடங்கி விரிகின்றன

ஒரே கடலின்
இருபக்கமும்
நாம் பலியிட்டோம்
மொட்டை போட்டோம்
நாம் காண்பது ஒரே ஆழம்

இக்கரையில் ஓர் ஊர்
ஒரு முப்பட்டி
ஒரு குலதெய்வம்
உங்களை காத்திருக்கிறது

உங்கள் பேர்கள்
எனக்கு நன்கு அறிமுகம்
இடங்கள் அறிமுகம்
ரீகல் சினிமா
வீர சிங்கம் நூலகம்
பேருந்து நிலையம்
எல்லாம் என்னுடைய
காணாத காட்சிகள்

தபால் நிலையச் சாலை வழியாக
நடந்து போகும் போது
பாதையில் ஒரு கைப்பிடியளவு
ரத்தம்
உள்ளங்கை போல பரவி
என்னிடம் முறையிடுகிறது
என்னை அதட்டுகிறது
என்னை துரத்துகிறது
கடலிறங்கி
கரையேறி
என் பின்னால் வருகிறது

நான் அதனிடம் சொல்கிறேன்
மன்றாடுகிறேன்
கெஞ்சுகிறேன்
நான் விசையோ குண்டோ அல்ல
வானரனோ வால்மீகியோ அல்ல
முழு வழுக்கையான
முன் பற்கள் உதிர்ந்த
அரை வேட்டி மட்டும் அணிந்த
குண்டு துளையிட்ட
ஒரு வெறும் கேள்விக்குறி

[1989 – ல் எழுதப் பட்டது.]

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...