நயினை ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகள்
நயினாதீவு எனும் புனித பூமியில், ஈழத்துச் சித்தர்கள் வரிசையிலே பெரிதும் மதிக்கப்படும் நயினைச் சுவாமிகள் என எல்லோராலும் அழைக்கப்படுபவராகிய நயினை ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகள் 1897இல் அவதாரம் செய்தார்கள். பெற்றோர் சூட்டிய இளமைப் பெயர் தம்பிமுத்து. கல்வி பயிலும் காலத்திற் கல்வியில் நாட்டமின்றி இருந்தார். ஆன்மீகத்துறையில் நாட்டமும், கவிபாடும் வல்லமையும் இவரிடம் இருந்தன. பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட்டவிட்டுக் கொழும்பில் பொறளை எனும் இடத்தில் உள்ள சுருட்டுக்கடையொன்றில் வேலைக்குத் தமையனார் அவர்களால் சேர்க்கப்பட்டார்.
சிறுவயது முதலே கவிதை பாடும் திறனை கொண்டிருந்த மகான், ஒருசமயம் பிரயாணச் செலவுக்கென வைத்திருந்த ஜந்து சதத்தினை தவறவிட்ட நிலையில் கணேசனை நினைந்து பாடிய பாடல் :
தச்சிச்சிபாடவும் தட்டாத்தி கூடத்தகவுடனே
இச்சித்து வேடிச்சி வந்தாள் இருந்த இடச்சியாரோ
மச்சிக்கு நாணி மறைந்ததினால் மதி வாடா விடாது
இரட்சிக்க முன்னெதிர் வந்தான் கணேச முதல்வனுமே
தச்சிச்சி – சரஸ்வதி, தட்டாத்தி – பொய்மகள், வேடிச்சி – பராசக்தி, இடச்சியார் – இலக்குமி
இக்கால கட்டத்தில் இந்தியாவிலிருந்து
இலங்கை வந்திருந்த ஞானி ஒருவரை இவர் சந்தித்து அவரோடு சில நாட்கள் பழகி
ஆத்மீகத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். தன்னை ஆட்கொள்ள வந்த அந்த ஞானி
சற்குருவானவர் என்பதை முத்துக் குமாரசுவாமி அந்நேரம் அறிந்திருக்கவில்லை.
இருவரும் திடீரெனக் கதிர்காமம் நோக்கிப் புறப்பட்டனர். வழியில் தங்கியபோது
சற்குருவானவரினால் தீட்சையும் உபதேசமும் இவருக்குக் கொடுக்கப்பட்டன.
சற்குருவின் கருணையைக் கண்டு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி உடல்
சிலிர்க்க, தோத்திரஞ் செய்து துதித்தார். இருவரும் கதிர்காமக் கந்தனைத்
துதித்து மீண்டும் கொழும்பு திரும்பினார்கள். சுவாமியவர்களின் ஞான வழியிற்
போகநாட்டம் மேலிட்டதால், குருபாத சேவை செய்து ஆத்ம ஈடேற்றம் பெறும் தன்
எண்ணத்தைக் குருவானவருக்குச் சொல்லித் தன்னோடு தங்குமாறு வேண்டிநின்றார்.
ஆனால், வந்தவேலை நிறைவுற்றது என்று எண்ணிய சற்குருவானவர் வெளியிற்
செல்வதாகக் கூறிச் சென்றவர்தான் பிறகு மீள வில்லை. முத்துக்குமாரசுவாமிகள்
தம்மையாட் கொள்ள வந்த குருவை எங்கும் தேடியுங் காணவில்லை. பித்துப்பிடித்து
அலைந்தார். இறை வனைக் காணவேண்டுமென்ற ஞானப்பசியுடன் இருந்தமையினாற்
கடைவேலையில் நாட்டமின்றிக் கண்டிப்புக்கு ஆளானார். கடையிலுள்ளவர்களின்
சினத்துக்கு அடிக்கடி ஆளானார். ஒருநாள் கிறுக்கல் கவிதையொன்றை வரைந்து
வைத்துவிட்டு யாருக்குமே கூறாமல் எங்கோ, சென்றுவிட்டார். ரமண மகரிஷியும்
இளவயதில் இவ்வாறே, ‘இது நல்ல காரியத்திற் பிரவேசித்திருக்கின்றது. இதனை
எவரும் தேடவேண்டாம்’ என ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் திருவண்ணாமலையை
நோக்கிச் சென்று விட்டதைப் போல இவரது செயலும் அமைந்தது. துறவுக்கு ஏற்ற
பக்குவநிலை ஏற்படும்போது சிறு சம்பவங்களும் கூடத் துறவை நாடிச் செல்லக்
காரணமாக அமைந்து விடுகின்றன.
சுவாமிகள் இந்தியா சென்று விட்டார். உறவினர்கள் எங்கும் தேடியும் கண்டிலர். இந்தியா சென்ற காரணம் நிறைவேறி விட்டது. ஞானகுருவைக் கண்டார். அவர் நிழலில் பலவருடங்கள் தங்கிப் பக்குவநிலையடைந்தார். பின்னர் சிரேஷ்ட சித்தர்களும் தவயோகிகளும் வாழும் அருணாசலக் குகைகளில் (திருவண்ணாமலை) சில வருடங்கள் சமாதி நிஷ்டையில் அமர்ந்திருந்தார். ரமண மகரிஷியுடனும் சிலகாலம் தங்கி இருந்து அவரின் ஆத்மீகப் போதனைகளினாற் பெரிதுங்கவரப்பட்டுத் தவயோக வாழ்வு வாழ்ந்தார். பின்பு இலங்கை திரும்பித் திருத்தலங்களெல்லாம் தரிசனம் செய்தார். மிக நீண்ட நாட்களின் பின்பு 1933இல் நீண்ட சடையுடனும், காவியுடையுடனும் வந்து நயினை அம்பிகையின் வருடாந்த மகோற்சவத்தில் கலந்து கொண்டார். உற்சவத்துக்கு அநேக சுவாமிகள் வருவது வழக்கம். அவர்களுள் இவரும் ஒருவராக உலாவியதனால் உறவினர்களால் இவரை அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை. உற்சவம் முடிவடைந்ததும் ஏனைய துறவிகள் வெளியூர் சென்றுவிட இவர்மட்டும் நயினை அம்மன் கோவிலின் ‘அன்னப்பிள்ளை’ மடத்தில் தங்கி, அங்கிருந்து ஏனைய கோயில்களையும் தரிசித்து வரலாயினர். ஆனால் யாருமே இவர் யாரென அடையாளம் கண்டிலர். பக்குவப்பட்ட நிலையிலுள்ள ஒரு சிலரால் மட்டும் சுவாமிகளின் மகிமையை அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களில் ஒருவர்தான் பின்னாளில் ஈழத்து இல்லற ஞானியான நயினை அமரர் க.இராமச்சந்திரன் அவர்கள். இவர் தன் ஞானகுருவாகச் சுவாமிகளை ஏற்றுக் கொண்டொழுகினார்.
சுவாமிகளின் வழிகாட்டலின் கீழ் இராமச்சந்திரா இந்தியா சென்று ரமண மகரிஷியைச் சந்தித்து ஆசி பெற்றார். இவரை இல்லற ஞானியாக மாற்றி ஞானப்பசியை ஊட்டி வழி காட்டிய பெருமை முத்துக்குமார சுவாமிகளுக்குரியதே. மற்றையவர் S.N.K.என அழைக்கப்படுபவரான ச.நா.கந்தையா பெரியவாத்தியார் ஆவர். சுவாமிகள் தான் சமாதிநிலையடைவதற்குச் சிலவருடங்களுக்கு முன்னர், தான் வைத்துப் பூஜித்த ஞான வேலை ச.நா.கந்தையா பெரியவாத்திரிடமே கொடுத்து அருளாசியும் வழங்கினார்கள். ச.நா.கந்தையா பெரியவாத்தியார் தனது ஞான குருவான நயினை ஸ்ரீ முத்துக்குமார சுவாமியாரின் மேல் பாடிய பாடல்:
மங்கலமார் மணித்தீவில் மங்கா தோங்கும்
மாதவனே குருநாத மணியே போற்றி
பொங்குமா கடலெனவே கருணை காட்டிப்
புலையேனை ஆண்டு கொண்ட புனிதா போற்றி
இங்கென்ன ஏனிருத்தி இனியாய் சென்றாய்
ஏது நான் செயவல்லேன் எந்தாய் போற்றி
தெங்குமலி நயினை நகர் நடுவகாட்டில்
சேர்ந்திலங்கு சமாதியுறை தெய்வச் சோதி– ச.நா.கந்தையா-
யாழிலும் பல சீடர்கள் இவரின் அருளாட்சிக்குப் பாத்திரமாயினர். அவர்களுள் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபராக இருந்த அமரர் சண்முகரெத்தினம் குறிப்பிடத்தக்கவர்.
சுவாமிகள் தமதன்பர் சண்முகரெத்தினத்தைக் கொண்டு நயினாதீவின் தென்மேற்குப் பிரதேசக் கடற்கரையோரமாக ஒரு தீர்த்தக் கேணியை அமைப்பித்தார்கள். நாகபூஷணி அம்பாள் தீர்த்தத் திருவிழாவன்று இங்கே நீராடி வருவதை யாரும் அறிவர். பிற்காலகட்டத்தில், வீதி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தரான கரம்பன் தம்பிஐயா அவர்களின் கனவில் தோன்றி இரத்தினக் கல் ஒன்று புதையுண்ட இடத்தைக் குறிப்பிட்டு அதனைப் பெற்றுத் தீர்த்தக்கேணியைச் செப்பனிடப் பணிப்புரை வழங்கினார். தம்பிஐயா அவர்கள் குறித்த இடத்தில் இரத்தினக்கல்லைப் பெற்று அதன் உதவிகொண்டு வைரக் கற்கள் பொழிந்து தீர்த்தக் கேணியைப் புனரமைப்புச் செய்தார். அதனருகில் தீர்த்தக் கிணறும் அமைக்கப்பட்டது. இப்புனித தீர்த்தக் கேணியின் சிறப்புக்குச் சுவாமி அவர்களே காரண கர்த்தா ஆவர். ஆத்மசோதி. நா.முத்தையா அவர்கள் தாம் எழுதிய ஈழத்துச் சித்தர்கள் எனும் நூலில் (1980களில்) சுவாமிகளின் தரிசனம் தமக்கு ஏற்பட்ட விதம், அதன் பாக்கியம் என்பன பற்றிக் குறிப்பிட் டுள்ளார்கள். இதேபோல் முதலியார் குல சபாநாதன் அவர்கள் 1957இல் வெளியான நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் கோயில் தேர்த்திருப்பணி மலரில் சுவாமிகளைத் தரிசித்த பாங்கைக்கூறி, சுவாமிகள் துறவுபூண்டு பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தபடியால் அவர் நயினாதீவுக்கு மாத்திரமல்ல, சைவ உலகிற்கே உரித்தானவர் என்பதை உணர்த்தியுள்ளார்.
1948இல் நயினை அம்மன் உற்சவம் முடிந்த கையோடு, உடல் உலகப் பந்தத்திலிருந்து இறுதியாக விடுபடவேண்டிய நாள் நெருங்கிவிட்டதை முன்கூட்டியே தெரிந்திருந்த சுவாமிகள் தான் நினைத்தபடி சிவலிங்கப்புளியடிக்கு வந்தார்கள். பிரம்ம ஞானம் ஒன்றையே நாடி நின்றார். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற நிலையை விரும்பினார். தன்னிடம் வரும் அடியார்களுக்கு ‘இறைவனை மறவா திருங்கள்’ என்பதை அடிக்கடி கூறி ஆசீர்வதிப்பார்.
சுவாமிகள் வேண்டுகோளின் பிரகாரம் நயினை காட்டுக் கந்தசுவாமி கோயிலின் பின்புறம் நான்குபக்கமும் வாசல்வைத்துச் சமாதி அமைத்து, அவர் ஏற்கனவே வைத்திருந்த சிலைகளுடன் ஒரு முருகன் சிலையையும் செய்து சோமஸ்கந்த முகூர்த்தமாக வைத்து அதனுடன் விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சமாதிக் கோயில் சோமாஸ்கந்த ஈஸ்வரம் என்ற பெயரோடு நித்திய பூசையும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயத்தை அவரது சகோதரன் வேலுப்பிள்ளையும், அவரின்பின் அவரது மகன் அமரர் திருநாவுக்கரசுவும் அவரின் தம்பியாரும் சேர்ந்து பராமரித்து வந்தார்கள். இன்றும் அவர்களின் உறவுகளாற் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சித்தர்கள் நடமாடிய இடங்கள் புனிதத்தன்மை வாய்ந்தவை. தெய்வீக சிந்தனை அலைகள் மோதும், வண்ணையிற் கடையிற் சுவாமி களின் சமாதியும் நல்லூரிற் செல்லப்பா சுவாமிகளின் சமாதியும் சிறப்புற்றிருப்பது போல நயினாதீவில் முத்துக்குமாரசுவாமிகளின் சமாதியும் சிறப்புற்று விளங்குவது குறிப்பிடற்பாலது.
ஆலய முகப்பில் தலவிருட்சமாக அரசும் வேம்பும் பின்னிப்பிணைந்து நிற்கின்றன. அருகில் மடமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருஷமும் சுவாமிகளின் குருபூசைத் தினமான தைத்திங்கள் அபரபஷ பூராட நட்சத்திரத்தன்று இங்கு விசேட பூசைகளும், அபிஷேகமும் நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பெற்று வருகின்றது.
சுவாமிகளால் பாடியருளப் பெற்றவை
1. நமசிவாயமாலை
2. நாகபூஷணி அந்தாதி
3. நயினை நாகேஸ்வரி தோத்திரமாலை
4. உண்மையறி விளக்கம்
அம்பாள் திருவருள் நாடிவரும் அடியார்கள் பலர் சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தக் கரைக்கும் சென்று நீராடித் தங்கள் பாவங்களைத் தீர்த்துக் கொண்டு அம்பாளின் திருவருளையும் நிறைவாகப் பெற்று இன்புறுகின்றனர்.
சுவாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை
கற்பகக் கன்றைக் கடம்பனைத் தந்த கனகவரை
அற்புத மோன வருணாகந் தாங்கு மமிர்தவல்லி
தற்பரன் வாமந் தழைத்தே சகல உயிர்களுக்கும்
நற்பதி யேயெனைப் பெற்ற சதானந்த நாகம்மையே.
பெற்றதாய் பார்க்கப் பிள்ளைதான் வருந்திப்
பிறப்பெனுஞ் சாகரத்தாழ
நற்றவ மில்லா வென்னைநீ விட்டால் நியாயமோ
நல்லுரை யாகச்
சொற்றவக் கரையி லேறியானுய்யத் துணயுநீ
யேயன்றி யாருளர்சொல்
கற்றவர்க் கனியாய் நயினையம் பதிவாழ்
கண்மணி நாகபூஷணியே.
கற்றவர்க் இனியாய் நயினையம் பதிவாழ்
காரணி நாரணன் றங்காய்
மற்றவ ரறியா மரகத வரையின்
வாமமே வளர்பசுங் கொடியே
நற்றவ ரோடு சேயெனை இருத்தி
நாதநா தாந்தமும் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணா னந்த
முத்திதா நாகபூஷணியே.
வற்றிடா மாய வாரிதி வித்தி
மயங்கியா னாழ்ந்திடாவாறு
சத்தியாய்ச் சிவமாயத் தளிப்பரந் தாளே
தானுமாய் நின்ற தற்பரையே
சித்தெலாம் வல்லாய் சேயெனைக் காத்தாள்
திருமணி நாகபூஷணியே
காத்தெனை யாளுங் கனகமா வரையே
கமலையும் காயையும் மருங்கே
நீத்தவ ரமரர் கருடர் கந்திருவர்
நின்பணி புரிவரரன்னே
வேர்த்தவ ராய்நின் றுயிர்த்திர ளாட்டு
வினையெலாம் பற்றுநீறாகப்
பார்த்தருள் விழியைப் பரப்புதி யீன்ற
பார்பதி நாகபூஷணியே.
சுவாமிகள் பாடிய நயினை நாகேஸ்வரி தோத்திரமாலை.
இன்றைய_குருபூசை_தினம்
கருத்துகள் இல்லை