' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆட்காட்டி குருவி கண்ணீரும், குஞ்சு கண்ணீரும்



  ஆக்காண்டி ஆக்காண்டி

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

“கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது” என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

 

ஆதாரம்: நீர் வளையங்கள் 1968 பக்கம்:102


சண்முகம் சிவலிங்கம் (டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012, பாண்டிருப்பு) ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வந்த சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார். பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். ஒருவர் ஈழப்போராட்டத்தில் களத்தில் உயிரிழந்தவர்.

இவரது கவிதைகளின் தொகுதி ஒன்று 1988இல் நீர்வளையங்கள் என்ற பெயரில் வெளியானது. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே.
 
 தகவல்:தமிழ் விக்கிப்பீடியா
 
 நூலகம் தளத்தில் இவர் எழுதிய நூல்கள் உள்ளன.

 

கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...